Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 25

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
544
அத்தியாயம் 25


ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூன்ச் மாவட்டத்தில் , பத்து நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர் .

அதில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருபத்தைந்து சி.ஆர்.பி.எஃப்(CRPF) வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில்தான் விடுமுறையில் சென்றிருந்த சில குறிப்பிட்ட வீரர்களுக்கு, விடுமுறையை ரத்து செய்து விட்டு பணிக்கு திரும்புமாறு , இந்திய பாதுகாப்பு படையிலிருந்து செய்திகள் அனுப்பப்பட, அதில் கிருஷ்ணாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

பூன்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் , பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மஞ்சகோட் கிராமத்தில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் கோபமடைந்த பாகிஸ்தான் ராணுவம், மூன்று f-16 ரக போர் விமானங்கள் மூலம், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற போது இந்திய விமானப்படை, அவ்விமானங்களை சுட்டு வீழ்த்தியதில் ஒரு பாகிஸ்தான் விமானம் வெடித்து சிதறியது.

மற்ற இரண்டு பாகிஸ்தான் போர் விமானங்களையும் , மிக்-21 ரக போர் விமானங்களை பயன்படுத்தி கிருஷ்ணாவும், அவனது சக இந்திய போர் விமானி விக்ரம் ஷர்மாவும் துரத்திச் செல்லும் போது, விக்ரம் ஷர்மா பயணித்த விமானம் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டு இந்திய எல்லையிலேயே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் LOC (line of control) பகுதியிலேயே வீழ்ந்து வெடித்து சிதறியது.

கிருஷ்ணா இந்திய எல்லையை கடந்த போது இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை , பாகிஸ்தான் ராணுவத்தினர் (Jamming) ஜாமர் கொண்டு துண்டித்தால், தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறாத நிலையில் , அவன் இந்திய எல்லையை கடக்கிறோம் எனத் தெரியாமலேயே பாகிஸ்தானை நோக்கி விமானத்தைச் செலுத்தினான்.

பாகிஸ்தான் எல்லையை கடந்து சென்ற பிறகு , பாகிஸ்தான் ராணுவத்தினரால் கிருஷ்ணாவின் விமானம் தாக்குதலுக்கு உள்ளாக, விமானம் தீப்பிடித்து புகை வருவதை கண்டவன், பாராசூட் மூலமாக பத்திரமாக தரையிறங்கினான்.

பின்னர் தன் கைத்துப்பாக்கியை, கையில் ஏந்தியபடி

இது இந்தியாவா.... இல்ல பாகிஸ்தானா.... எனத் தெரியாமல் குழம்பி கொண்டிருந்த போது, அவனுடைய (G-suit) விமானப்படை சீருடையை கண்டதும், தீவிரவாத முகாம்களை ஒட்டிய கிராமப்புற பகுதியிலிருந்த பொது மக்கள், தீவிரவாதிகளுடன் இணைந்து, அவன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர்.

அந்நிலையிலும் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தாமல்
அவர்களிடமிருந்து தப்ப முயன்று வானத்தை நோக்கி சுட்ட வாறே ஓட ஆரம்பித்தான். ( பொதுமக்களை சுட கூடாது என்பது விதி)

விடாமல் கற்களைக் கொண்டு தாக்கியதால் அவனது தலை மற்றும் தோள் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட,
ஒரு கட்டத்தில் அவனால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற நிலை வந்ததும், தான் சிக்கினாலும், தான் கொண்டு வந்த ஆவணங்கள் எதிரிகளுக்கு சிக்கக் கூடாது எனக்கருதி அருகிலிருந்த குளத்தில் குதித்தவன் , தன்னிடமிருந்த ஆவணங்களையும் இந்திய வரைபடத்தையும் மூழ்கடிக்க முயற்சி செய்யும் போது,பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டான்.


இடம் : ராஜேஸ்வரியின் இல்லம், பூனா

கிருஷ்ணாவை பிணைக்கைதியாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்ததை அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் தலைப்புச் செய்திகளாக ஒளிபரப்பிக் கொண்டிருக்க,
தொலைக்காட்சியை பார்த்த மகி பதற்றமடைந்து, ராதாவை அழைத்துக் காட்ட , செய்தியை உள் வாங்கிக் கொண்டவள் நிலைகொள்ளாமல் தலைசுற்றி சரிந்து விழுந்தாள்.

தன்னுணர்வு பெற செய்ய அவள் முகத்தை ஈரத் துணி கொண்டு துடைத்தோடு, ரத்த அழுத்த மாத்திரையை வெதுவெதுப்பான தேநீரில் பருகச் செய்தாள் மகி.

ராஜேஸ்வரிக்கு இச்செய்தி உயிர் போகும் துன்பத்தை கொடுத்தாலும், கிருஷ்ணா கிளம்புவதற்கு முன்பு கூறிய வார்த்தைகளே, அவரது காதுகளில் மீண்டும் மீண்டும் அலைமோதிக் கொண்டிருந்தது.

" அம்மா ஏனோ எனக்கு மனசே சரியில்ல...ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு உள்மனசு சொல்லிக்கிட்டே இருக்குது ...எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா, ராதாவையும் குழந்தையையும் நீங்கதான் பார்த்துக்கணும் ..." என்ற பெரும் பொறுப்பினை அவர் தலையில் சுமத்திவிட்டு சென்றிருந்தவனின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைத்து மனதிற்குள் மருகினார் ராஜேஸ்வரி.

சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்தி பரவ, அனைவரும் மிகுந்த பதற்றத்துடன் தொலைக்காட்சியே கதியென்று பார்த்துக்கொண்டிருந்தனர் .

குழந்தை பசியில் அழுவதைக் கூட உணராமல் பறி கொடுத்தவள் போல் அழுது, களைத்து, விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவளை சமாதானப்படுத்தி உணவு உண்ணச் செய்து குழந்தைக்கு பாலூட்ட செய்தனர் மகி , சுதா.

இரவு பகல் என்று பாராமல், இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தியா மற்றும் உலக நாடுகள் கிருஷ்ணாவை விடுதலை செய்வதற்காக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க, இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் ஒரு காணொளியை வெளியிட்டது.

அதில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணா பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் உரையாடுவது போல் அது அமைந்திருக்க, அதில் அவன் தனது பெயர் மற்றும் சர்வீஸ் எண்ணை , அவர்களிடம் பகிர்வது போல் இருந்தது .

மேலும் அவர்கள், இந்தியாவில் கிருஷ்ணாவின் இருப்பிடத்தை பற்றியும், பாகிஸ்தானில் நடக்கவிருந்த தாக்குதலின் இலக்கை பற்றியும் கேள்வி எழுப்ப,

என்னுடைய இருப்பிடத்தையும் இலக்கையும் தங்களிடம் கூற எனக்கு அனுமதி இல்லை... என கம்பீரத்துடன் ராணுவ ரகசியத்தை காப்பாற்றும் விதமாக பதிலளித்து, இந்திய பாதுகாப்பு படைக்கே பெருமை சேர்த்திருந்தான் .

கிருஷ்ணா ஒன்றும் கல்லோ கடவுளோ அல்ல ... அனைத்து உணர்வுகளும் கொண்ட சாதாரண மானுடப் பிறவியே..

மரணம் தன்னை எந்நேரத்திலும் தழுவலாம் என்கின்ற நிலையில் கூட, பெற்ற தாய்,கட்டின மனைவி, பெற்ற மகளை சுற்றியே அவனது சிந்தனைகள் இருந்தாலும், கடுகளவு கூட அதனை வெளிக்காட்டாமல், மகாபாரதத்தில் அர்ஜூனனின் காண்டீபம், பறவையின் கண் மேல் வைத்திருந்த குறி போல், அவன் சிந்தனை முழுவதும் பாரத தேசத்தின் ரகசியத்தை காப்பாற்ற வேண்டும், என்ற கொள்கையிலேயே கம்பீரத்துடன் செயல்பட்டதை, இந்தியர்களை தாண்டி பாகிஸ்தானியர்களையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.

58 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ,ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் அனைத்து நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, பாகிஸ்தான் பிரதமர் பாராளுமன்றத்தில் கிருஷ்ணாவை அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் வாகா எல்லை பகுதியில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மக்கள் மேளதாளத்துடன் அவனை வரவேற்க தயார் நிலையில் இருந்தனர்.

வாகா எல்லையில் விடுவிக்கப்படும் கிருஷ்ணாவை அழைத்து வர, ராஜேஸ்வரி, ராதாவுடன் அனைத்து குடும்பத்தினரும் விமான நிலையத்துக்கு பயணப்பட கிருஷ்ணாவின் குடும்பத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எல்லையில் உள்ள மிகப்பெரிய இரும்பு கதவு திறக்கப்பட்டதும் , அதன் வழியாக பலத்த ராணுவ பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட கிருஷ்ணா,வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டான்.

வாகா எல்லையில் குவிந்திருந்த மக்கள், அவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும், இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பின.

அனைத்து தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் வாழ்த்தையும் வரவேற்பையும் பெற்றுக் கொண்டபடி,முன்னேறியவனின் கண்கள் ராஜேஸ்வரி மற்றும் ராதாவை தேடின.

மன அழுத்தம் , உடல் வலி இருந்த போதிலும் வெறும் கம்பீரத்தை மட்டும் கண்களிலேயே சுமந்துக்கொண்டு நடந்து வந்தவன்,இரண்டாம் கட்ட பாதுகாப்பில் ராஜேஸ்வரி மற்றும் ராதாவை கண்டதும் ,அவனது கண்களில் மின்னல் வெட்டு போல் உயிர் பிறக்க, ராஜேஸ்வரியை பார்த்து கையசைத்தவன், ராதாவை பார்த்து இரட்டை கண்களை சிமிட்டி சிரித்தான்.

ராஜேஸ்வரி, அவனை சந்திக்கும் முனைப்போடு முன்னேற, அப்போது தலைமை பாதுகாப்பு அதிகாரி அவரிடம்

" இப்ப கமாண்டரை மீட் முடியாது மேம்... அவரோட பிசிகல் அண்ட் மெண்டல் ஹெல்த்த கம்ப்ளீட்டா செக்கப் பண்ணிட்டு, அவர்கிட்ட முதற்கட்ட விசாரணை பண்ணனும்....

அவரோட உடம்புல ஏதாவது எலக்ட்ரானிக் சிப்ஸ் பொருத்தப்பட்டிருக்கான்னு டெஸ்ட் பண்ணுவோம்...அப்புறம் அவர் மெடிக்கல் ரெஸ்ட்ல இருப்பாரு… அப்புறம்தான் நீங்க அவரை சந்திக்க முடியும் ... இந்தப் ப்ரோசீஜர் எல்லாம் முடிய கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல ஆகும் மேம் .." என மிகுந்த பணிவன்போடு தெரிவித்ததை உடனிருந்து கேட்ட ராதாவிற்கு, சிறிது ஏமாற்றம் ஏற்பட்டாலும், அவனை கண்ணில் கண்டதே போதும், இன்னும் ஒரு வார காலம் தானே....என தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டாள்.

கிருஷ்ணாவின் உடல்நிலை மற்றும் மனநிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அதனை ஜெனீவா ஒப்பந்தத்தின்படி தெளிவான அறிக்கையாக தயார் செய்தனர்.

பிறகு இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு முழு உடல் மற்றும் மனரீதியான மருத்துவ சிகிச்சைகள் அவனுக்கு வழங்கப்பட்டன.

மருத்துவ சிகிச்சையின் போதே, உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் பல உயரதிகாரிகள் என அனைவரும் அவனை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

அவன் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட அடியால், தொடர் சிகிச்சை மற்றும் ஓய்வு தேவைப்பட, உடல்நிலை சற்றே தேறிய நிலையில் , அனைத்து பாதுகாப்பு படை செயல்முறை பணிகள்(procedure) முடிந்த பின்னர் அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

ராஜேஸ்வரி அவனை ஆனந்தக் கண்ணீருடன் அணைத்துக்கொள்ள, கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ராதாவின் கைகளைப் பற்றியவன், அருகில் நின்றிருந்த சுந்தரம் , சுதாவை கண்டதும்,யாரும் கூறாமலே ராதாவின் தந்தை மற்றும் தங்கை என புரிந்து கொண்டு புன்னகைத்தவனின் கைகளை ஆனந்தக் கண்ணீருடன் பற்றிக்கொண்டார் சுந்தரம்.

சுந்தரத்தின் செய்கை கிருஷ்ணாவை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்த,அவன் சென்ற பிறகு நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக, கோர்வையாக கூறி முடித்தார் ராஜேஸ்வரி.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன் பெருத்த ஆச்சரியத்தில் மூழ்கி ,

" என் வாழ்க்கைல சித்தார்த் பண்ணின ஒரே நல்ல விஷயம் , என் அப்பா வழி சொந்தத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சதுதான் ..." என பெருமிதம் அடைந்தவனோடு சுந்தரம் இரண்டு நாட்கள் தங்கியிருந்து அவ்வப்போது அளவளாவி மகிழ்ந்தார்.

தனது அத்தையின் கணவர் என்பதை காட்டிலும் தன் மாமனார் என்பதே அவன் மனதில் நிலைத்துப் போக, அதிகம் பேசாத சுதா கூட, அவ்விருவருக்குகிடையேயான உரையாடல்களில் அவ்வப்போது கலந்துகொண்டு, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

அவனுக்கு தொடர் சிகிச்சையும் ஓய்வும் தேவை என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முதற்கொண்டு மருந்து மாத்திரைகள், உடற்பயிற்சி என அனைத்தையும் ராதா தன் மேற்பார்வையில் சிறப்பாக கவனித்துக் கொள்ள, இரண்டு தினங்களுக்கு பின் மிகுந்த மனநிறைவோடு சுந்தரமும் சுதாவும் பூனாவிலிருந்து விடைபெற்றனர் .

ராதாவும் பேறு கால விடுமுறையில் இருந்ததால், குழந்தை மற்றும் கிருஷ்ணாவை ஒருசேர கவனித்துக் கொள்வதில் அவளுக்கு சிரமம் இல்லாமல் இருந்தது.

உறங்கிய குழந்தையை, தொட்டிலில் கிடத்திக் கொண்டிருந்தவளை

" வாம்மா என் அத்தை பொண்ணு .. " என கண்ணில் குறும்புடன் ஒய்யாரமாக கூப்பிட்டவனை பார்த்து,

" உங்க அத்தை பொண்ணு இங்க யாரும் இல்ல ... மிஸஸ் ராதாகிருஷ்ணா தான் இருக்காங்க.... " என அதே குறும்புடன் பதிலளித்தவளை பின்புறமாக கட்டியணைத்தவன்,

" இனிமே வேற வழியே இல்ல நீ என்னை அத்தான்னு கூப்பிட்டு தான் ஆகணும்…" என காதோடு கொஞ்சியவனிடம்

" ஏன் அப்படி " என்றாள் ஏதும் அறியாதது போல்.

" ஏன்னா, நீ என் சுந்தரி அத்தையோட பொண்ணு, நான் கூப்பிட சொல்லும் போது யோசிச்சயே இப்ப பாத்தியா ..... " என கூறிக்கொண்டே அவள் முகத்தில் தோன்றிய வெட்க ரேகையை பார்த்து ரசித்தவன்,

" இந்த வெட்கத்தை பாக்க தான், இவ்ளோ ஆசையா ஓடி வந்தேன் கண்ணம்மா " என கட்டி அணைத்துக் கொண்டான்.

அன்றிரவு, அவன் அருகில் அமர்ந்து அவன் தலையை கோதியபடி,

" இதுக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் நடந்ததே இல்லனு அத்தை சொல்லி கேட்டிருக்கேன் ...

என்னை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் தானே, சர்ஜிகல் ஸ்ட்ரைக், ஹோஸ்டேஜ்ன்னு (பிணையக் கைதி) இவ்ளோ பிரச்சனையை நீங்க பேஸ் பண்றீங்க... எல்லாம் என்னோட ராசி தானே.." என கண் கலங்கியவளை ,இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டவன்

" இல்ல கண்ணம்மா, உன்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் நடந்திருந்தா நான் உயிரோட திரும்ப வாய்ப்பே இல்லாம போயிருக்கும் ... வாழ்க்கையில எந்த எதிர்பார்ப்பும், பிடிப்பும் இல்லாம, வாழனுமேன்னு வாழ்ந்துகிட்டு இருந்த எனக்கு , உன்னோட நடந்த கல்யாணம் தான் எல்லாத்தையும் மாத்திச்சு..போன முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்தபோது கூட, உன்னை பார்க்கணுங்கிற உத்வேகம் தான், என்னோட வேலையை சிறப்பா செய்து முடிக்க உந்துசக்தியா இருந்தது...

இந்த முறை பாகிஸ்தான்ல ஹோஸ்டேஜ்ஜா பிடிபட்ட போது கூட ,உன்னையும் குழந்தையும் பார்க்கணுங்கிற ஆவல் தான் அதிகமா இருந்தது...

அந்த எண்ணத்தால தான்,என்னால எல்லா பிரச்சனையை நேர்மையாவும் கம்பீரமாவும் ஃபேஸ் முடிஞ்சது..."
என கண்ணில் காதல் வழிய,பெருமிதத்தோடு அவன் கூறிய போதும், அவள் முகத்தில் வலி நிறைந்தே இருக்க, அதை போக்கும் முனைப்பாக

" உன் ராசிக்காக எல்லாம் அவ்ளோ செலவழிச்சு சர்ஜிகல் ஸ்ட்ரைக் எல்லாம் பண்ணமுடியாது கண்மணி ..." என்று ஒற்றைக் கண் சிமிட்டி சிரித்தவனின் தலையில் சிரித்தபடி நோகாமல் அவள் ஒரு குட்டு வைக்க, அதை ரசித்தவன்

"குழந்தை பிறந்து மூணு மாசம் கூட ஆகல , பச்ச உடம்போட மெண்டலி பிசிகல்லி எத்தனை பிரச்சனைகளை நீ ஃபேஸ் பண்ணிட்ட ..." என்றான் மனமுருகி.

அவன் பிணை கைதியாக பிடிக்கப்பட்ட அன்றைய தினத்தில் நடந்த அனைத்தையும் பகிர்ந்தவள்,

" நீங்க கையில டீ கப்போட இன்டர்வியூ கொடுத்ததை பார்க்கும் போது தான் எனக்கு உயிரே வந்தது...
டீ ஃபேண்டஸ்டிக்னு சொன்னீங்களே ..."

" எனக்கும் டீ குடிச்சதும் தான் உயிரே வந்தது .." என்றவனை அவள் கோபத்தோடு முறைக்க,

" நிச்சயமா, உன் டீயை விட அது பெட்டராவே இருந்தது ..."

" அப்ப மறுபடியும் பாகிஸ்தான்ல ஹோஸ்டேஜ்ஜா போய் டீ குடிச்சுட்டு வாங்க ..."

" நான் போக தயார் என் பொண்டாட்டி தான் பயப்படுவா..." என்றவனின் காதை பிடித்து திருகியவள்,

" மலைபோல வந்த பிரச்சினை எல்லாம் பனி போல போயிடுச்சு ...நீங்க இப்ப என் கூட இருக்கிறதே எனக்கு போதும் ... உங்களுக்கு கொடுத்திருக்கிற இந்த ஆறு மாச டைம்ல, பழைய மாதிரி உங்க உடம்பை தேத்தி, ஃபுல் பிசிகல் பிட்னஸோட மறுபடியும் உங்களை ஜி-சூட்ல பார்க்கிறது தான் என்னோட லட்சியமே...." என்றவளை பெருமிதத்தோடு அணைத்துக்கொண்டான் .

ஒரு மாதம் கடந்த நிலையில், அதிகாலையில் குளித்து முடித்து குளியலறையில் இருந்து வெளிப்பட்டவள்,

" நேத்து சாயங்காலம் எங்க போயிருந்தீங்க அத்தான் ...ராத்திரி வர ரொம்ப நேரமாச்சா ...ரொம்ப டயர்டா இருந்ததால, நீங்க வர்றதுக்கு முன்னாடியே தூங்கிட்டேன் ... அப்புறம்
சொல்ல மறந்துட்டேனே... இன்னைக்கு என்ன நாள் தெரியுமா..." என்று பேசிக்கொண்டே நெருங்கியவளுக்கு அவன் மௌனம் துணுக்குறச் செய்ய,

" அத்தான் இன்னைக்கு நம்மளோட ஃபர்ஸ்ட் மேரேஜ் அன்வர்சரி .." என்றாள் அவன் தோள் மீது கை வைத்து.

" தெரியும் ராதா ... போன வருஷம் இதே நாள்ல உன்னை எப்படி எல்லாம் கஷ்டப் படுத்திட்டேன்... நம்ம கல்யாண நாளை நினைச்சாலே நான் உன்னை கஷ்டப்படுத்தினது தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது...'அப்பப்பா' எவ்ளோ பேசியிருக்கேன் உன்கிட்ட ..
நெனச்சு பாக்கவே கூச்சமா இருக்கு ராதா ... அதுக்காக இப்ப வரைக்கும் உன் கிட்ட நான் மன்னிப்பு கூட கேட்டதே இல்லை ...
ஐ அம் சாரி கண்ணம்மா ..." என அவன் அவள் கைகளை பற்றிக்கொள்ள

" உங்க சூழ்நிலையில யார் இருந்தாலும் அப்படித்தான் செஞ்சிருப்பாங்க… நீங்க ரொம்ப ஸ்ட்ரைட் பார்வேர்டு உங்க மேல என்னைக்குமே எனக்கு கோவம் வந்ததில்லை ..." என்றவளின் கையில், நகை பெட்டியை திணித்து

" அவர் ஃபர்ஸ்ட் மேரேஜ் அனிவர்சரி கிஃப்ட் டார்லிங் ..." என்றான் கண்ணில் காதலுடன்.

அவள் ஆச்சரியமாக நோக்க

" ராதா, இதுக்கு தான் நேத்து வீட்டுக்கு வர லேட்டாயிடுச்சு ...பிடிச்சிருக்கா .."
என கூறிக்கொண்டே நகைப் பெட்டியை திறந்து காட்ட, முழுவதும் வைரத்தாலான அடிக்கையில் ரூபி பதித்த பதக்கமும், அதற்கு பொருத்தமான தோடு, மோதிரம், வளையல் என அனைத்தும் மின்ன,

" இருக்கிறத போட்டுக்கவே நேரமில்ல, இப்ப எதுக்காக இவ்ளோ விலை கொடுத்து வாங்கனீங்க..."

" உன் குணத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல ராதா..."

என கண்ணில் காதல் மின்ன கூறியவன் , முதலாம் ஆண்டு திருமண நாளை, தன் மனைவி, குழந்தை, தாய் மற்றும் ராம் குடும்பத்தினர் என அனைவருடனும் சிறப்பாக கொண்டாடினான் .

நான்கு மாதங்கள் முடிந்த நிலையில், அவன் உடல்நிலை நன்கு
தேறியிருந்த சமயத்தில், வீர தீர செயலுக்காக வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான " வீர் சக்ரா" விருதை ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வழங்கி, கிருஷ்ணாவை கௌரவிக்க போவதாக, இந்திய அரசாங்கம் செய்தி வெளியிட்டது.

இதனை அறிந்த அவன் நண்பர்கள், உடன் பணி புரிந்தவர்கள், ராஜேஸ்வரியின் அலுவலகப் பணியாளர்கள், உயரதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமிருந்தும் அவனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிய ஆரம்பித்தன.

குழந்தை பிறந்து ஏழு மாதம் ஆன நிலையில், அது யார் துணை இல்லாமல் தானாக உட்காருவது,
"ஆ இ உ " என சத்தம் செய்வது, கையில் கிடைத்த எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்வது, முகம் பார்த்து சிரிப்பதென என அதன் ஒவ்வொரு செயலிலும் தன்னை மறந்தே போனான் கிருஷ்ணா.

இந்நிலையில் ராதாவின் பேறுகால விடுப்பும் முடிய ராஜேஸ்வரியின் பணிச்சுமையை குறைப்பதற்காக குழந்தையை மகியின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் அலுவலகம் செல்லத் தொடங்கினாள்.

கிருஷ்ணா, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்காக ஜாகிங், காலை மாலை என இருவேளை உடற்பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி ,மேலும் ஆரோக்கியமான சரிவிகித உணவு, மனதை ஒருமுகப்படுத்த யோகா, நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை பெருக்க செஸ் விளையாட்டு வலைப்பந்து விளையாட்டு என அவனுடைய இலக்கை அடைவதற்காக உழைத்தாலும், குழந்தையுடன் விளையாடுவது, ராமுடன்
அளவளாவுவதற்கும் நேரம் ஒதுக்கினான்.

ராதா அலுவலகம் செல்ல ஆரம்பித்து கிட்டதட்ட ஒரு மாதமான நிலையில், ஒரே அறையில் இருந்தாலும், இரவில் அவன் வீடு திரும்புவதற்கு முன்பே, பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட களைப்பால் அவள் உறங்கி விடுவதும், காலையில் அவன் ஜாகிங் சென்ற பிறகு எழுவதும், மேலும் விடுமுறை தினத்தில் கூட இத்தனை நாட்களாக குவிந்திருந்த பணிச் சுமையை குறைப்பதற்காக அலுவலகம் சென்று வருவதுமாக இருந்தாள் .

இவ்வாறாக இருவரும் நேரமின்மை காரணமாக கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஒரு வெள்ளிக்கிழமையன்று மகி, அலுவலகத்தில் இருந்த ராதாவை தொடர்பு கொண்டு,

" உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ராதா... சீக்கிரம் வீட்டுக்கு வர முடியுமா..."

" என்னக்கா என்ன பேசணும் .."

" நீ வீட்டுக்கு வா நான் அப்புறம் சொல்றேன் .."

" சரிங்கா, இன்னைக்கு அத்தையோட நானும் சீக்கிரமே வீட்டுக்கு வந்துடறேன்.." என்றவள்

என்னவா இருக்கும், எதைப் பத்தி பேசப் போறாங்க ... என குழம்பியபடியே, தொலைபேசியை தாங்கியில் பொருத்தினாள்.

அலுவலகம் செல்ல ஆரம்பித்ததிலிருந்து, தன் கணவனோடு நின்று பேசக் கூட நேரம் இல்லாமல் போனதை எண்ணி வருந்த தொடங்கியிருந்தாள்.

அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்திக்க நேரும்போது , அவனது பார்வையில் தோன்றும் மாற்றங்களை அவளால் உணர முடிந்தாலும், அது ஏக்கமா, தாபமா அல்லது வேறு மாதிரியான உணர்வா என பிரித்தறியும் முன்பே தோன்றி மறைந்து விடுவதையும் மனதில் நிறுத்திப் பார்த்தாள்.

பணிக்குத் திரும்பிய நாட்களிலிருந்து, அவள் மனதிலும் ஒருவிதமான ஏக்கமும் வெறுமையும் மையம் கொள்ள ஆரம்பித்திருப்பதை முற்றிலும் உணர்ந்தவள்

எது எப்படியானாலும் இந்த வாரத்திலிருந்து, தன்னவனுடன் பேசிப் பழக நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.....என மனதுக்குள் குறித்துக் கொண்டாள்.

அலுவலகத்திலிருந்து ராஜேஸ்வரியுடன் முன்னதாகவே வீடு திரும்பியவள் களைப்பு தீர குளித்து முடித்து, வேறு புடவைக்கு மாறி சிறிய ஒப்பனையுடன் இருந்தவளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற மகி அவளை உச்சி முதல் பாதம் வரை ஆழ்ந்து நோக்கிவிட்டு

" உங்க ரெண்டு பேருக்குள்ளே ஏதாவது பிரச்சனையா ..."

" புரியல கா .."

" உனக்கும் கிருஷ்ணாவுக்கும் ஏதாவது பிரச்சனையா .." என அழுத்தம் திருத்தமாக மகிக் கேட்க

" இல்லக்கா ...அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ....நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்...." என அவசரமாக மறுத்தவளை பார்த்து

" பின்ன ஏன் ராதா, கிருஷ்ணா களைச்சுப் போய் தூக்கம் கண்ணை சொக்கற வரைக்கும் ராத்திரி டென்னிஸ் விளையாடிட்டு வீட்டுக்கு வரணும்... நீ ஆபீஸ் போக ஆரம்பிச்சதிலிருந்து தான், கிருஷ்ணா தம்பி கிட்ட இந்த மாற்றம் தெரியுது... எனக்கு தெரிஞ்சு தம்பி ராத்திரி அதிக நேரம் கண் முழிச்சதும் இல்ல, பகல்ல தூங்கினதும் இல்ல..." என்ற மகியின் பேச்சுக்கள் முட்களாய் குத்த,

" அவர் கொஞ்சநாள் ரெஸ்ட்ல இருந்ததால வெயிட் அதிகமா போட்டிருக்கும், அதனால அவர் இப்படி எக்ஸர்சைஸ் பண்ணலாம் கா .." என்றாள் ஒருவிதமான தடுமாற்றத்துடன்.

" ராத்திரி சரியான நேரத்துல தூங்குறதே வெயிட்டை குறைக்கிறதுக்கு முறையான வழின்னு கிருஷ்ணா தம்பிக்கு நல்லாவே தெரியும் ... இது எல்லாம் தெரிஞ்சும் தம்பி இப்படி நடந்துக்க ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் ,
தம்பிக்கு ராத்திரில வீட்டுக்கு வர விருப்பமில்லை, அப்படியே வந்தாலும் தூக்கத்தையும் கூடவே கூட்டிட்டு வரணுங்கிற நிர்பந்தத்துல இருக்கிறா மாதிரி தெரியல ..." என்ற மகியின் வார்த்தைகள், அவள் தவறை சுட்டிக் காட்டியதோடு மட்டுமல்லாமல், எங்கு செல்கிறோம் என தெரியாமல், இருளில் சென்று கொண்டிருந்தவளுக்கு, தொலைதூரத்தில் வெளிச்சம் தென்பட்டது போல், அவள் மனதில் இத்தனை நாட்களாக குடிகொண்டிருந்த ஏக்கம் மற்றும் வெறுமைக்கான தீர்வாக அமைய உடனே அவள் கண்கள் பளிச்சிட்டதை ,காணும் போதே பிரச்சனையின் அடிநாதத்தை புரிந்து கொண்டு விட்டாள் என்றுணர்ந்த மகி,

" அதிகம் படிச்சாலே இப்படித்தான் போல, தன் கூட இருக்கிறவங்களோட மாற்றங்களை கூட உணர முடியாம போய்டுமோ.... " என்றாள் புன்னகைத்தபடி.

" அக்கா, எப்ப அத்தான் வருவாரு... " என்றவளை , குறும்புடன் பார்த்தவள்

" தம்பி இன்னும் அரை மணி நேரத்துல டின்னர் சாப்பிட வந்துடும். ..சரி வா ராதா குழந்தைக்கு கேழ்வரகு கஞ்சி கொடுக்கலாம் " என்றாள்.

கூடத்தில் கேழ்வரகு கஞ்சியை ராதா குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்த போது நீச்சல் பயிற்சியிலிருந்து திரும்பி வந்தவனின் கண்கள், அவளை ஆச்சரியத்தோடு நோக்கின.

"வாங்க அத்தான்..." என்றழைத்தவளிடம் நெருங்கி, குழந்தையை பற்றி தூக்கிக்கொண்டே, அவளை பார்த்த பார்வை, கல்யாணமான புதிதில் பார்த்த உள்ளத்தை ஊடுருவும் பார்வையாக இருக்க, ஏனோ அந்தப் பார்வையின் தீட்சண்யம் தாளமுடியாமல் தலைகுனிந்தாள் ராதா.

எதுவும் பேசாமல் இருவரும் ஒன்றாக அமர்ந்து , இரவு உணவு உண்டதும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தோளில் சுமந்துக்கொண்டு, மேல் தளத்திற்குச் சென்றவனை ராதா பின்தொடர,
குழந்தையை உறங்க வைப்பதற்காக அதைத் தோளில் சுமந்தபடி , குறுக்கும் நெடுக்குமாக படுக்கையறையில் நடந்து கொண்டிருந்தவனிடம் பேச்சை எப்படி தொடங்குவது என தெரியாமல், மடித்த துணிகளையே மீண்டும் மீண்டும் அவள் மடித்துக் கொண்டிருக்க,

சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறங்கிவிட, அதனை தொட்டிலில் கிடத்தியவன், தன் மனையாளை போலவே, மகளும் தன் தோளில் சாய்ந்த பத்தாவது நிமிடத்திற்குள் உறங்கிப் போனதை நினைத்து அதிசயித்துப் போனான்.

பிறகு வலைப்பந்து விளையாடச் செல்வதற்காக, மர அலமாரியிலிருந்து உடையை எடுத்து கொண்டிருந்தவனின் கையை அவள் பற்ற கண்ணில் ஆர்வத்துடன் திரும்பி பார்த்தவன், "என்ன" என்பது போல் புருவத்தை உயர்த்தி, கண்களால் கேட்க,

" அத்தான், நாளைக்கு நாம ரெண்டு பேரும் எங்கேயாவது வெளில போவோமா..." என தயங்கியபடி கேட்டவளை ஆழமாய் பார்த்து,

" வாவ் ...என்ன மேடம்க்கு திடீர்னு என் மேல ஒரு லவ் ....என் கூட வெளிய வர்ற அளவுக்கு உங்களுக்கு டைம் இருக்கா என்ன ..." என குத்தலான தொனியில் அவன் கேட்டாலும்,அவனது கண்களில் தெரிந்த பரிதவிப்பு அவளை குற்றவாளியாக்க, அவனது வார்த்தைகள் சுட பதில் பேசமுடியாமல் , கூனிக்குறுகியவள்

" ஏன் இப்படி பேசறீங்க.... " என அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு கம்மிய குரலில் கேட்டாள்.

" உனக்கு உன் அத்தையோட ஹெல்த் ரொம்ப முக்கியம் ... அவங்களுக்காக டே அண்ட் நைட் வொர்க் பண்ற ....நம்ம பாப்பா உனக்கு முக்கியம்…. அதனால அது கூட டைம் ஸ்பென்ட் பண்ற...உன்னோட இந்த வேர்ல்ட்ல எனக்கு மட்டும் டைம் இல்லாம போயிடுச்சா ராதா...." என்றவனின் பேச்சில் இத்தனை நாட்களாக தாயாகவும்,தாதியாகவும் தன்னை அணுகியவள் மனைவியாக நெருங்கவில்லையே என்ற ஏக்கம் கொட்டிக்கிடக்க,

" நான் இன்னும் ஒரு மாசம் தான் உன் கூட இருப்பேன், அப்புறம் சர்வீஸ்ல ஜாயின் பண்ணிட்டேனா, திரும்ப வருவேனா மாட்டேனான்னு..." என அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே , அவன் கூற வருவதை உணர்ந்து, எம்பி அவன் வாயை பொத்தியவள், விம்மி அழுதபடி, அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.

காற்று புக கூட இடம் தராமல் இறுக்கி அணைத்தவன்,

" என் விருப்பத்தை உனக்கு சொல்லி இருக்கலாம் இல்ல செயல்ல உணர்த்தியிருக்கலாம் ... ஆனா எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல... என்னைக்காவது ஒரு நாள் என்னோட லோன்லினஸை நீயும் ஃபீல் பண்ணுவ...அதுக்காக தான் இத்தனை நாள் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ..." என்றவனின் வார்த்தையிலிருந்த உண்மை,அவளை நெகிழச் செய்ய, உடலும் மனமும் ஆர்ப்பரிக்கும் ஆசையில் தயாரான நிலையில், அவன் கன்னத்தை முத்தமிட்டு இதழை சிறை பிடித்தவளிடம், வாழ்நாள் கைதியாக சாசனம் எழுதிக் கொடுத்து சங்கமித்தான்.

கண்ணனைத் தேடி
 
Back
Top