Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 24

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
544
அத்தியாயம் 24

இடம் : குன்னூர் எஸ்டேட்

"எத்தனை முறை சொன்னேன், என் பேச்சை கேட்டியா " என பர்வதம் சித்தார்த்தின் தலைமாட்டில் அமர்ந்துக்கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்.

" இப்ப என்ன செத்தா போயிட்டேன் ..." என்றான் மைந்தன்.

"அடுத்த முறை நீ அவன் கண்ணுல பட்ட இப்ப நீ சொன்னது தான் நடக்கப்போகுது... " என்றார் பெருங்குமுறலோடு.

" கிருஷ்ணா கேரளால இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா.. அதுமட்டுமல்ல ராஜேஸ்வரியும் இப்ப கேரளாவுல தான் இருக்காளாம் ... ரேஷ்மி சொன்னா... "

" இப்ப ரேஷ்மி கேரளாவுலயா இருக்கா ..."

" இல்லம்மா, அவ ராஜேஸ்வரியை கேரளாவுல பார்த்த அன்னைக்கே செவுத்துல அடிச்ச பந்து மாதிரி மகாராஷ்டிரா திரும்பிட்டா... இனிமே அவளை நம்பி பிரயோஜனம் இல்ல.."

" ஏன்டா மகனே ... ஏன் அப்படி சொல்ற .."

நிறைமாத கர்ப்பிணியாக ராதாவை ரேஷ்மி சந்தித்த அன்று கடும் கோபத்துடன் சித்தார்த்தை தொடர்புகொண்டு,

" சித்தார்த், ராதா நிறைமாச கர்ப்பிணின்னு உனக்கு தெரியாதா... ஏன் பொய் சொல்லி என்னை கேரளாவுக்கு அனுப்பின...நான் மயிரிழைல கிருஷ்ணாவை என் வாழ்க்கையில இழந்துட்டேன்...
ஒத்துக்கிறேன் ....

அதுக்காக தான் இல்லாத தகிடுதத்தம் செஞ்சு அவரை கல்யாணம் பண்ணிக்கணும் ஆசைப்பட்டேன் ... அதோட திடீர்னு நடந்த கல்யாணத்துல அவங்க இரண்டு பேருக்குமே பிடிப்பு இல்லன்னு நீ சொன்னதை நம்பி தான் இவ்ளோ வேலையும் செஞ்சேன் .... ஆனா அங்க, ராதா நிறைமாச கர்ப்பிணியா இருக்கா ... ரொம்ப ஹாப்பியா கிருஷ்ணாவும் ராஜேஸ்வரியும் கூட இருக்காங்க ....

ராதாவுக்கு நடந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல, கிருஷ்ணாவை டிவோர்ஸ் பண்றதுக்காக காரணத்தை தேடிகிட்டு இருக்கா, நீ அவனோட நெருங்கி பழகுறதை பார்த்தா அதையே காரணமா ராஜேஸ்வரிக்கிட்ட சொல்லி அவனை டிவோர்ஸ் பண்ணிடுவான்னு நீ சொன்னதெல்லாம் சுத்த பொய்யின்னு அப்பதான் புரிஞ்சது ....

அந்த நிலையில ராதாவை பார்த்ததிலிருந்து கிருஷ்ணாவை கல்யாணம் பண்ணிக்கணுங்கிற எண்ணமே போயிடுச்சு... உலகத்துலயே கடைசி ஆம்பள கிருஷ்ணாதாங்கிற நிலைமை வந்தாலும், இனிமே நீ சொல்ற காரியத்தை பண்ற அளவுக்கு சீப்பான கேரக்டர் நான் கிடையாது..." என்றவள் பொரிந்து தள்ளிவிட்டு அழைப்பை துண்டித்ததை பர்வதத்திடம் பகிர்ந்தான்.

கிருஷ்ணா சித்தார்த்தை புரட்டி எடுத்ததில் , மீண்டும் இரண்டு மாத காலமாக மாவு கட்டு கட்டி, படுக்கையில் இருந்தவன், தற்போதுதான் எழுந்து நடமாடும் நிலைக்கு தேறியிருந்தான்.

ரேஷ்மியும் ஆட்டத்திலிருந்து விலகிக் கொண்டதால், வேறு வழியில்லாமல் போய்விட்டதே என புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு , உடனே ஒரு யோசனை உதிக்க,அதனை பர்வதத்திடம் கூட பகிராமல், செயல்படுத்த நினைத்தான் சித்தார்த்.

இடம் : கோயம்புத்தூர்

ராதா பணியாற்றிய கோயமுத்தூரிலுள்ள ராஜேஸ்வரியின் கல்லூரிக்கு சென்றவன்,கல்லூரியின் அலுவலகம்,தாளாளர் அறை , நூலகம் என பல இடங்களில் ராஜேஸ்வரியின் புகைப்படம் புதிதாக மாட்டப்பட்டிருப்பதை பார்த்து மனதுக்குள் பொருமியபடி கல்லூரி அலுவலகத்தில் உள்ள அலுவலக நிர்வாகியை சந்தித்து

"கம்ப்யூட்டர் சயின்ஸ் லெக்சரர் ராதாவை பார்க்கணும்" என ஒன்றுமே தெரியாதது போல் கோரிக்கை விடுத்தான்.

அதற்கு அவர்,

" நீங்க யாரு...உங்களுக்கு எப்படி ராதா மேடத்தை தெரியும் ..

" நான் ராதா மேடத்தை பார்த்ததுகூட கிடையாது ... ஒரு வருஷத்துக்கு முன்னாடி அவங்க அப்பா, பண உதவி செஞ்சு என்னை துபாய்க்கு அனுப்பினாரு...இப்ப நான் நல்லா இருக்கேன் எனக்கு கல்யாணமும் நிச்சயமாயிருக்கு ... ஆனா அவரோட அட்ரஸ் போன் நம்பரை நான் எங்கேயோ தவற விட்டு விட்டேன்…. ஒருமுறை என்கிட்ட அவர் பேசும் போது அவர் பொண்ணு ராதா, இந்த காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் லெக்சரரா வேலை செய்யறதா சொன்னாரு...

அதனாலதான் அவங்கள பார்த்து, அவங்க வீட்டு அட்ரஸ் வாங்கிட்டு அவங்க அப்பாவை போய் சந்திச்சு என் கல்யாண பத்திரிகையை வைக்கணும்னு வந்திருக்கேன் ..." என வாய் கூசாமல் பொய்க்கு மேல் பொய்யை அடுக்கிக்கொண்டே சென்றவனின்
பதிலில் திருப்தியடைந்த நிர்வாகி,

" ராதா மேடம், இங்க டெம்பரவரி லெக்சரரா தான் வேலை பாத்தாங்க...
அவங்க வேலையை விட்டுப் போய் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆன நிலையில, நீங்க அவங்கள தேடி வந்து இருக்கீங்க ... இங்க டெம்ப்ரவரியா வேலை பார்த்தவங்களோட அட்ரஸ்,சேலரி டீடைல்ஸ் எல்லாம் ஆறு மாசத்துக்கு மேல நாங்க வச்சிக்கிறது இல்ல .." என்றவர் பிறகு நினைவு வந்தவராய்

" ராதா மேடம் கூட வொர்க் பண்ண அவங்க ஃப்ரெண்ட் செல்வி மேடத்தை கேட்டா அவங்க வீட்டு அட்ரஸ் கிடைக்கலாம்னு நினைக்கிறேன்... ஒரு நிமிஷம்..” என்று உள் தொலைபேசியின் வாயிலாக கணினி பிரிவை தொடர்புகொண்டு விசாரிக்க, சற்று நேரத்திற்கெல்லாம், ராதாவுடன் பணியாற்றிய செல்வி, நிர்வாகியை சந்திக்க அங்கு வந்தாள்.


" நான் ராதா வீட்டுக்கு போனதில்ல ... அவங்க சொல்லி அவங்க வீடு இருக்கிற இடம், தெருவை தெரியும் ..." என தனக்கு தெரிந்த ராதாவின் வீடு அமைந்திருக்கும் இடம் மற்றும் தெருவின் பெயரை சித்தார்த்திடம் செல்வி பகிர,


இதுபோதும்.... என மனதில் குதூகலித்தவன், அலுவலக நிர்வாகி மற்றும் செல்விக்கு நன்றி தெரிவித்துவிட்டு பஞ்சாய் பறந்தான் .

சிரமம் இல்லாமல் ராதாவின் இல்லத்தை சுலபமாகவே கண்டுபிடித்தவன், அவள் வீட்டில், பேச வேண்டிய வசனத்தை மனதில் உரு போட்டபடி , அவள் வீட்டு முன்பக்க தோட்டத்திற்குள் நுழைந்தவன், அங்கு நின்றிருந்த சுதாவை பார்த்ததும் சிலையானான்.

ஓ ! இவ தான் ராதாவோட தங்கை சுதா வா, அவ முக சாயல்ல, அவளை விட உயரமா, கவர்ச்சியா, மாநிறமா இருக்காளே.... என மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தவனை, அவள் திரும்பி பார்த்ததும், உணர்வு பெற்றவனாய்

" என் பேரு ஸ்ரீதர்... நான் பூனால இருந்து வரேன் ..."

என தன்னுடைய அறிமுக படலத்தை தொடங்க, அப்போது சுந்தரம் அங்கு வர இருவர் கண்களில் தெரிந்த ஆவலைக்கண்டு மனதிற்குள் மகிழ்ந்தவனாய்,

" உங்க பொண்ணு ராதா, உங்களை கடந்த 10 மாசமா வந்து பார்க்கவே இல்லை .. இல்லயா ..."

கண்களில் ஆர்வம் கலந்த பதற்றத்தை தேக்கிக்கொண்டு, ஆம்... என்பது போல் தலை அசைத்து,அவனுடைய பதிலுக்காக சுதா, சுந்தரம் காத்துக்கொண்டிருக்க,

" உங்க பொண்ணு ராதா, அங்க கல்யாணமே பண்ணிக்காம, என் சித்தி பெண்ணுக்கு அமைய வேண்டிய வாழ்க்கையை தட்டிப்பறிச்சு, வெளி உலகுக்குத் தெரியாம அசிங்கமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கா ..." என வாய்கூசாமல் பொய்யுரைத்தவன்,

" இதனால என் சித்தி பொண்ணு ரெண்டு முறை தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டா.. அவளை காப்பாத்துறதுக்கு தான் உங்க வீட்டை தேடி வந்தேன்... நான் சொன்னது நிஜமா பொய்யான்னு தெரிஞ்சுக்க, நீங்க உங்க பொண்ணு தங்கியிருக்கிற அட்ரஸ்க்கு போய் பார்த்தீங்கன்னா புரியும் ...
அதே சமயத்துல உங்க பொண்ணுக்கு நல்ல புத்தியை சொல்லி இங்க கூட்டிட்டு வந்துட்டீங்கன்னா என் தங்கச்சியோட வாழ்க்கை நிம்மதியா இருக்கும் ..." என்றவன் சிறு இடைவெளி விட்டு நக்கலான பார்வையுடன்,

" உங்களுக்கு பணம் மட்டும் மாசாமாசம் வந்துட்டா போதுமா... அதை அனுப்புறவ அங்க என்ன வேலை செஞ்சு அனுப்பறான்னு தெரிஞ்சுக்கவே மாட்டீங்களா..." என மனதில் உரு போட்ட வசனத்தை ஒன்றுவிடாமல் சித்தார்த் பேசி முடிக்கவும், அவர்கள் இருவரின் முகமும் வெளிரி போவதைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்து போனவனிடம் சுந்தரம் கோபத்துடன் பேச எத்தனிக்கும் போது, சுதா தலையிட்டு அவரை சமாதானப்படுத்திவிட்டு

சித்தார்த்திடம்

" நீங்க வந்த வேலை முடிஞ்சிருச்சு இல்ல... மத்ததை நாங்க பார்த்துக்குறோம் நீங்க கிளம்புங்க..." என பட்டு கத்தரித்தது போல் பேசி அவனை வெளியேற்றினாள்.

" எனக்கு அக்காவை பத்தி நல்லா தெரியும் ... ஏதோ குழப்பம் நடந்திருக்கு .. பூனாவுக்கு போய் அக்காவை பார்த்தா எல்லாம் புரிஞ்சிடும் ... சோ கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா ...” என தந்தைக்கு அறிவுரை கூறி முடித்தாள்.

காரியத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில் ,பர்வதத்தை தொடர்புக்கொண்டு,நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூறி சந்தோஷப்பட்டவனிடம்,

" ஏன்டா மகனே .. இப்படி பண்ண .."

" ராதாவோட அப்பாவுக்கு, அவளுக்கு கல்யாணம் நடந்தது பத்தி தெரியாதுன்னு அன்னைக்கு ராஜேஸ்வரி சொன்னா இல்ல... அது என் நினைவுக்கு வந்துடுச்சு ... அதான் உடனே களத்துல இறங்கினேன், விஷயம் தெரிஞ்சதும் அந்தாளு ரொம்ப கோவப்பட்டான்....

கிருஷ்ணாவும் ரொம்ப கோவக்காரன் .. ரெண்டு பேரும் மோதிக் கிட்டா வாய் வார்த்தை பெருகி குடும்ப உடையும் .... அப்புறம் அவன் வாழ்க்கையில நிம்மதியே இருக்காது… அதுக்குதான் இவ்வளவையும் செஞ்சு முடிச்சேன்.. " என மார்தட்டிக் கொண்டவனுக்கு தெரியாது, அவனது வாழ்வில் ஆகச்சிறந்த காரியத்தை, கிருஷ்ணாவிற்கு செய்திருக்கிறான் என்று.


இடம் :பூனா

கிருஷ்ணா ராதாவிடம் குழந்தைக்கான பெயரை தேர்வு செய்யுமாறு கூற,

" நீங்க ஆசைப்பட்ட மாதிரியே பெண் குழந்தை பிறந்திருக்கு, நீங்களே உங்களுக்கு பிடிச்ச பேரை செலக்ட் பண்ணுங்க ..."

" ஒரு குழந்தையை பெத்துக்க, ஒரு பொண்ணு செய்யற தியாகங்கள் ரொம்ப அதிகம் ராதா.... அத உன் கூடவே இருந்து பார்த்ததால, என்னால ரொம்ப அதிகமாவே உணர முடிஞ்சது... என்னை பொறுத்த வரைக்கும்,
குழந்தை ஆணோ பெண்ணோ அதுக்கு பேர் வைக்கிற முதல் உரிமை அம்மாவுக்கு தான்... பேர் மட்டும் இல்ல, அந்த குழந்தையோட வாழ்க்கையில எந்த முடிவு எடுக்கணும்னாலும் அம்மாவுக்குத்தான் ஃபர்ஸ்ட் ரைட்...
சோ, நீயே குழந்தையோட பேர செலக்ட் பண்ணு , சர் நேமாதான் என் பேர் வந்திட போகுதே..." என்றவனை பெருமை பொங்க பார்த்தவள் குழந்தைக்கு 'அதிதி 'என்ற பெயரை தேர்வு செய்தாள்.

பூனாவிற்கு வந்து ஒரு வாரமான நிலையில், குழந்தைக்கு எல்லாமுமாகிப் போனான் கிருஷ்ணா.

மகி குழந்தையை குளிக்க வைத்து உடைமாற்றி தருவாள்.

ராதாவிடம் குழந்தை பால் அருந்தும் தருணத்தில் மட்டுமே இருக்கும்.

பின்னர் உறங்குவது, மலம் கழித்தால் ,அதனை சுத்தம் செய்து புது கால் சட்டையை அணிவிப்பது, உலா வருவது என அனைத்திலும் தாய் ராதாவை காட்டிலும், தந்தை கிருஷ்ணாவுடன் ஒன்றிப் போனாள் அதிதி .

பிறந்த குழந்தை என்பதால், அது பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட அதன் அருகிலேயே அமர்ந்து கொண்டு, பார்த்துக்கொண்டே இருந்தான் கிருஷ்ணா.

அவனுடைய செய்கைகள் அனைத்தும் ராதாவிற்கு மட்டுமல்ல ராஜேஸ்வரிக்கும் விந்தையாக தோன்றின.

குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு தேதி முடிவு செய்து விட்டமையால், சுந்தரத்தை நேரில் சந்தித்து, நடந்த அனைத்தையும் எடுத்து கூறி தற்பொழுது நடக்கவிருக்கும் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு அவரையும் சுதாவையும் பூனாவிற்கு அழைத்து வர எண்ணினான்.

குழந்தை பிறந்து கிட்டதட்ட இருபது நாட்கள் ஆன நிலையில், எண்ணைக்குளியல், பத்திய உணவு என ராதாவை சிறப்பாக கவனித்துக் கொண்டாள் மகி.

அவளின் முயற்சியால் ராதாவின் உடல்நிலை நன்றாகவே தேறி இருக்க,பெயர் சூட்டு விழாவிற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், சுந்தரத்தை சந்திக்க கோயம்புத்தூர் செல்ல விமானப் பயணச் சீட்டை முன்பதிவு செய்து வைத்திருந்த போது விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணியில் சேருமாறு, வந்த செய்தி கிருஷ்ணாவை திகைப்பில் ஆழ்த்தியது .

ஒவ்வொரு பாதுகாப்பு படை வீரனுக்கும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், வாழ்வில் முக்கியமான தருணங்களை , தன் அன்புக்குரியவருடன் இணைந்து கொண்டாட முடியாமல் போவதென்பது வழக்கமான ஒன்று என்றாலும், இம்முறை ராதா மற்றும் குழந்தையை பிரிந்து செல்ல முடியாமல், மனதளவில் தவித்து தான் போனான் கிருஷ்ணா .

ராதாவுக்கும் ராஜேஸ்வரிக்கும், கிருஷ்ணாவின் பயண செய்தி, மிகுந்த துயரத்தை அளிக்க, அவன் முகத்தில் குடிகொண்டிருந்த யோசனையை கண்டு

" கிருஷ்ணா, என்ன யோசனை" என்றார் ராஜேஸ்வரி .

"இவளை விட்டுப் போக மனசே இல்லம்மா" என குழந்தை அதிதியை காட்டி கூறியவனை பார்த்து, அவருக்கு பெருத்த ஆச்சரியம் ஏற்பட,

" ராதா, நான் இவன் கிட்ட பல தடவை சொல்லியிருக்கேன் இந்த வேலையை விட்டுடுன்னு, உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் கூட எல்லைப்பாதுகாப்பு தான் முக்கியம்னு போனவன், இன்னிக்கு இப்படி பேசறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு ..."

"அத்தை சொல்லி கேட்கலை, நான் சொல்லி கேட்கலை, ஏன் ரேஷ்மி சொல்லிக் கூட கேட்கல ... ஆனா இவ எதுவுமே சொல்லல.. ஆனா இப்படி பேசறீங்க ..." என குழந்தையைக் காட்டி கூறியவளை கோபத்துடன் அவன் முறைக்க,

அவன் செய்கை ராஜேஸ்வரிக்கு சிரிப்பை வரவழைக்க, அவன் காதை, எம்பி பற்றியவர்

" நேத்து பிறந்த இவளுக்காக, இவ்ளோ யோசிக்கிறயா..."

குழந்தையோ நடப்பது ஏதும் அறியாமல் , முட்டைக்கண்ணும், குண்டு கன்னமும், இளந்தளிர் செந்நிற மேனியுமாய், கைகளை அசைத்துக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டிருக்க,

" சரி, நீ கிளம்பு கிருஷ்ணா..." என விடைபெற்றார் ராஜேஸ்வரி.

ராதாவிற்கும் ராஜேஸ்வரி போல் நெஞ்சை அழுத்தும் துயரம் இருந்தாலும், அதனை கிருஷ்ணாவின் முன் காட்டிக்கொள்ள அவளும் தயாராக இல்லை.

பொதுவாக அவன் எளிதில் உணர்ச்சி வசப்பட்டுபவன் இல்லை கடமைக்கே முன்னுரிமை கொடுப்பவன்.

இருந்தாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் பிள்ளைப்பாசம் அவனை தடுக்கிறது.

அவனை போன்ற சிறந்த வீரன் நாட்டுக்கு தேவை. எக்காலத்திலும் அவன் வளர்ச்சிக்கும், கனவிற்கும் தானும் தன் குழந்தையும் தடைக்கற்களாக இருந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் ராதா.

" உங்க ட்ராவல்க்கு தேவையான திங்ஸை எடுத்து வைக்கிறேன்..." எனக் கூறிக்கொண்டே மர அலமாரியை நோக்கி சென்றவளை,பற்றி இழுத்து இறுகத் தழுவிக் கொண்டவனின் செய்கையால் அவள் சிரமப்பட்டு தேக்கி வைத்திருந்த துயரம் , கரையை உடைத்துக்கொண்டு வரும் வெள்ளம் போல் பெருக, பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

சுதாரித்துக் கொண்டவன், அவள் அழுது முடியும் வரை காத்திருந்து விட்டு, பின் அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமொன்றை பதித்து விடுவித்து

" ராம் இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல வந்திடுவான் ராதா... நான் தயாராறேன்..." என்றவனின் மனதில்,கடந்த முறை பயணத்தை காட்டிலும் இந்த முறை, ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ போவது போல் அவன் மனம் சொல்லாமல் சொல்லியது.

காரில் அமர்வதற்கு முன் ராஜேஸ்வரி,ராதா மற்றும் குழந்தையை ஆழ்ந்து நோக்கி, மனமெனும் பெட்டகத்தில் புகைப்படமாக சேமித்து கொண்டவன், காரில் ஏறி அவனது பணியை நோக்கிப் பயணமானான்.

அவன் சென்றபின், குழந்தை அழுவது கூட தெரியாமல், எங்கோ வெறித்துப் கொண்டிருந்தவளை ராஜேஸ்வரி தட்டி எழுப்பி நிகழ் உலகத்திற்கு கொண்டு வர,
" கவலைப்படாத ராதா ...நெகட்டிவா எதையும் திங்க் பண்ணாத ...கடவுள் நம்ம கூடவே இருக்காரு .." என ஆறுதல் கூறினார் .

குழந்தை பிறப்பிற்குப் பிறகு ராதாவின் அறை கீழ் தளத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் உறங்கிய குழந்தையை தொட்டிலில் கிடத்திவிட்டு, அவளாலான உதவியை மகிக்கு செய்யலாம் என்றெண்ணி,சமையலறையை நோக்கி செல்ல எத்தனித்தவள், கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, வாசலை திரும்பி பார்த்தாள்.

அவள் காண்பது கனவா அல்லது நினைவா? எனத் தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றவள், பிறகு தன்னுணர்வு பெற்றவளாய், வாசலை நோக்கி வேகமாய் நடந்து, தன் பதற்றத்தை மறைத்தபடி சுந்தரம் மற்றும் சுதாவை இன்முகத்துடன் வரவேற்றாள்.

டாக்ஸிலிருந்து பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த சுந்தரத்தின் முகம் கோபத்தால் சிவப்பேறியிருக்க, சுதா சகஜமாக இருக்க முயன்றாலும் அவளது பார்வை, ராதாவை அணுஅணுவாக ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருந்தது.

ராதாவின் கழுத்திலிருந்த தாலி சரடு, வகிட்டில் குங்குமம், காலில் அணிந்திருந்த மெட்டி ஆகியவை ஒரு சேர அவள் திருமணமானவள் என பறைசாற்ற, அவள் அவர்களை வரவேற்று, அமர செய்ய, அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் மௌனமாக அமர்ந்தனர்.

ஏற்கனவே சுதா, ராதா முறையற்ற வாழ்க்கை வாழவில்லை என்பதை அனுமானித்திருந்தாலும், சுவரில் மாட்டியிருந்த அவளின் திருமண புகைப்படம், அதனை மேலும் ஊர்ஜிதப்படுத்த, சுந்தரமும் அப்புகைப்படத்தை பார்த்து, ஓரளவு சமாதானமாகி இருந்தாலும், பெண்ணைப் பெற்ற தந்தைக்கான தார்மீக கோபம் அவர் மனதில் எழாமலில்லை.

உள்ளூர ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் அவர் முகத்தை பார்க்க முடியாமல், தலை குனிந்து நின்ற ராதாவைப் பார்த்து

" உன் அம்மாதான் செத்துப்போயிட்டா .. நானும் உன் தங்கையும் இன்னும் உயிரோட தான் இருக்கோம்...எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம நீ கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய அவசியம் என்ன ..."

கோபத்தில் குரலை உயர்த்தி சுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போதே, மாடியிலிருந்து ராஜேஸ்வரி இறங்கிவர, அவரை கண்டதும், சுந்தரம் பேச்சை நிறுத்த, இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்த ராஜேஸ்வரி தன்னை ராதாவின் மாமியார் என்று அறிமுகம் படுத்திக்கொண்டிருக்கும் போது, குழந்தை அழ ஆரம்பிக்க ,

"கண்டேன் சீதையை" என்று அனுமன் ராமனுக்கு உணர்த்தியது போல், "ராதா குழந்தைக்கு பசியாத்து" என ஒரே வரியில் அது அவளது குழந்தை என உணர்த்தினார்.

சுந்தரம் , சுதா இருவரும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாவதை புரிந்தவர், பொறுமையாக சுந்தரத்தின் அறுவை சிகிச்சையிலிருந்து, ராஜேஸ்வரியின் உடல்நலக்குறைவு, ராதாவின் திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் முன்தினம் கிருஷ்ணா பணிக்கு திரும்பியது வரை, நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக கம்பீரமாக கூறி முடித்தார்.

ராஜேஸ்வரியின் குரலிலிருந்த நேர்மையும், நேர்கொண்ட பார்வையும் , வந்தவர்களை பதில் பேச முடியாமல் கட்டிப்போட,

" குழந்தைக்கு அடுத்த வாரம் பேர் சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம்.... அதுக்கு உங்களை அழைக்கிறதுக்காக எல்லாரும் கோயம்புத்தூர் வரலாம்னு முடிவெடுத்து இருந்தோம்... ஆனா அதுக்குள்ள கிருஷ்ணாவுக்கு டியூட்டில ரெஸ்யூம் பண்ண ஆர்டர் வந்துருச்சு.." என விமான பயணச்சீட்டை காட்டி, புதியவர்களின் மனதில் உதித்த அனைத்து கேள்விகளுக்கும் அவராகவே பதில் அளித்து முடிக்க , ஒருவாறு சமாதானம் அடைந்த சுந்தரம், எதேச்சையாக சுவரில் மாட்டியிருந்த ராஜேஸ்வரி, ராகவன் இணைந்து அவர்களது திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து,

"இந்த போட்டோல இருக்கிறவரு... " என ஆச்சரியத்துடன் ஏதோ கூற வந்து தொக்கி நிறுத்த,

" இது நானும் என் ஹஸ்பண்ட் ராகவனும் ..." என்றவர், உடன் ராணுவ சீருடையில் இருந்த ராகவனின் தனித்த புகைப்படத்தை காட்டி அறிமுகப்படுத்தினார்.

" உங்க கணவரோட பூர்வீகம் பொள்ளாச்சியா..."

ஆச்சரியத்துடன் சுந்தரம் கேட்க,

" ஆமாம்..." அவரை உங்களுக்குத் தெரியுமா " என்றார் ராஜேஸ்வரி ஆர்வத்துடன்.

" உங்கள் கணவர் கூட பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தங்கை சரியா... " என்றவரை, ஆச்சரியம் மேலிட பார்த்தவர்

"ஆமா..... ரொம்ப சரியா சொன்னீங்க... ஒரு நிமிஷம்... " என்றவர் தன் அறைக்குச் சென்று ஒரு பழைய புகைப்படத்தோடு வந்து
அது ராகவனின் குடும்ப புகைப்படம் என்றார்.

அதில் தாய் தந்தையருக்கு மத்தியில், மாலையும் கழுத்துமாய், இரு கன்னங்களிலும் சந்தனம் பூசிய நிலையல் கதாநாயகியாக காட்சியளித்த, அந்த பதின் பருவத்து பெண்ணை பார்த்து,

" இவ பேரு சுந்தரி " என்றார் சுந்தரம்.

" ஆமாம் சுந்தரி தான். உங்களுக்கு எப்படி தெரியும் ... நீங்க என் கணவரோட உறவுக்காரரா... "

கண்களை விரித்து மிகுந்த மகிழ்ச்சியில் கேட்டவரிடம்,

"சுந்தரி என் வைஃப் " என பூடகமாக சுந்தரம் பதிலளிக்க,

"அப்படின்னா சுந்தரியோட பொண்ணா ராதா ..." என கேட்டு பூரித்துப் போனார் ராஜேஸ்வரி.

ஆம் என்பது போல் சுந்தரம் தலையசைக்க, இவ்விருவருக்குமான உரையாடல்கள் புரிந்தும் புரியாமலும் ராதா, சுதா,மகி ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு ஆச்சரியத்தை சுமந்த வண்ணம் நின்றுகொண்டிருந்தனர்.

" இந்த போட்டோ சுந்தரியோட மஞ்சள் நீராட்டு விழால எடுத்தது ... ராகவன் குடும்பத்துல இருக்கிற எல்லாரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட ஒரே போட்டோ இது தானாம் ... ராகவன் அடிக்கடி சொல்லுவாரு... இந்த போட்டோ எடுத்து மூணாம் மாசத்துக்கு அப்புறம் எங்களோட கல்யாணம் நடந்தது ..." என்ற ராஜேஸ்வரியிடம்,

" எங்க வீட்ல முதல் பட்டதாரி மட்டும் இல்ல, சிறந்த படிப்பாளி என் அண்ணன் ராகவன் தான்னு அடிக்கடி சுந்தரி இந்த போட்டோவ காட்டி சொல்லுவா... கோயம்புத்தூர்ல என் வீட்டுலயும் இதே மாதிரி ஒரு போட்டோ உண்டு... "
என்ற சுந்தரத்தின் பேச்சை ஆர்வத்தோடு கேட்டவர்,

" எங்க கல்யாணத்துக்கு அப்புறம், என் கணவர் ராகவன் அவங்க குடும்பத்துக்கு பல லெட்டர்ஸ் போட்டாரு... ஆனா எதுக்கும் பதில் இல்லை ... அதை நினைச்சு அவர் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு .. அழையா விருந்தாளியா பொள்ளாச்சிக்கு போக அவர் கடைசி வரைக்கும் விரும்பல ..."
என தன்னுடைய நீண்ட நாள் ஆற்றாமையை கொட்டித்தீர்க்க,

" ராகவன் வீட்டை விட்டு போனதும், ஒரு வருஷத்துல அவங்க அம்மா இறந்து போயிட்டாங்க ...அப்புறம் மொத்த குடும்பமும் அவரோட அண்ணன் கேசவனோட மனைவி சொர்ணத்தின் கைக்குள்ள வந்துடுச்சு ...ராகவனோட அப்பாவை செல்லாக்காசாகி, கேசவனையும் கை பொம்மை ஆக்கிட்டா அந்த சொர்ணம்....

ராகவனோட அம்மா உயிரோட இருக்கும் போதே சுந்தரியோட அக்கா செண்பகத்துக்கு நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க .... ஆனா வீட்ல இருந்த சுந்தரியை அந்த சொர்ணம் படாதபாடு படுத்திட்டா, சொர்ணத்துக்கு குழந்தை இல்லங்கிறதால, சொத்து வேற யாருக்காவது போயிடப் போகுதேன்னு தன்னோட குடிகார தம்பிக்கு சுந்தரியை கட்டி வைக்கப் பார்த்தா, அதுக்கும் மேலயும் அந்த வீட்டுல இருந்தா தனக்கு ஆபத்துன்னு சுந்தரி வீட்டை விட்டு வெளியே வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா...கல்யாணம் ஆன முதல் நாலஞ்சு வருஷம் அடிக்கடி இந்த போட்டோவை பார்த்து சுந்தரி அழுவா.. ஒரு வேளை உங்க கணவர் ராகவன் போட்ட லெட்டர்ஸ் எல்லாம், சொர்ணத்துகிட்ட தான் கிடைச்சிருக்கணும் ... ராகவன் வந்தா சொத்துல பாகப்பிரிவினை நடக்கிறதோட சுந்தரியோட வாழ்க்கையும் காப்பாத்தபடுங்கிறதால அந்த லெட்டர்ஸை சொர்ணம் தான் ராகவன் வீட்டு ஆளுங்க எல்லார் கிட்டிருந்தும் மறைச்சு இருந்திருக்கணும் ..." என தான் அறிந்த தகவல்களை கோர்வையாக கூறி முடித்தார் சுந்தரம்.

" எனிவே, பை காட்ஸ் கிரேஸ்... ராதா சேர வேண்டிய இடத்துக்கு தான் வந்து சேர்ந்திருக்கா... ராகவன் உயிரோடு இருந்திருந்தா இந்நேரம் பூரிச்சு போயிருப்பாரு... அவர் உயிரோடு இருந்து சாதிக்க வேண்டியதை அவரோட ஆன்மா சாதிச்சிடுச்சு... அவர் இறக்கிறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான், கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ் கட்டணும்னு சொல்லி ஒத்த கால்ல நின்னு அந்த காலேஜை என் பேர்ல கட்டி முடிச்சாரு... அவர் ஒரு தீர்க்கதரிசி .. அந்த காலேஜால தான் ராதா எனக்கு கிடைச்சா ..." என உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியபடி பேசினார் ராஜேஸ்வரி.

நடந்து முடிந்த உரையாடல்களில் அனைத்தையும் புரிந்துகொண்ட சுதா, ராதா மற்றும் மகி ஆகியோர் வியப்பின் உச்சத்தில் இருந்தனர்.

ராதாவிற்கு முதன்முதலாக ராகவனை புகைப்படத்தில் பார்த்த பொழுதே பல காலம் பார்த்துப் பழகிய முகம் போல் தோன்றியதை, நினைத்துப் பார்த்தவள், தனது தாயின் முகச்சாயலில் இருந்ததால் தான் அவ்வாறு தோன்றியது போலும் என்றெண்ணிக் கொண்டாள்.

அதே போல் கிருஷ்ணாவிற்கும் தனக்குமான உறவு ஏழு ஏழு ஜென்மமாக தொடர்வதால் தான் அவரை புகைப்படத்தில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீதான ஈர்ப்பு ஏற்பட்டதோடு முதன் முறையாக புகைப்படத்தில் பார்த்ததும் என்னையே அறியாமல் என் இதயத்தை பறி கொடுத்திருக்கிறேன் போலும் ... என நினைத்து பூரித்துப் போனாள்.

" நீங்க வரும் போதே கோவத்தோட வந்தீங்களே..உங்களுக்கு ராதாவோட கல்யாணத்த பத்தி யாரு சொன்னது..." என ராஜேஸ்வரி கேள்வி எழுப்ப,
சுதா முந்திக்கொண்டு

" மூணு நாளைக்கு முன்னாடி ஸ்ரீதர்னு ஒருத்தர், கோயம்புத்தூருக்கு வந்திருந்தாரு... அவர்தான் ராதா இங்க கல்யாணம் பண்ணிக்காமலே குடும்பம் நடத்தறதாவும், அவங்க சித்தி பொண்ணுக்கு அமைய வேண்டிய வாழ்க்கையை தட்டிப்பறிச்சிட்டதாவும் ரொம்ப வருத்தப்பட்டாரு.." என்றதும் ராதா குழம்பி,

யாரு ஸ்ரீதர்... என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் , ராதாவின் திருமண வரவேற்பு புகைப்படத் தொகுப்பை,எடுத்து வந்த ராஜேஸ்வரி, அதிலிருந்த சித்தார்த்தின் புகைப்படத்தை காட்டி

"இவன் தானா " என்றார் சுதாவிடம்.

"ஆமாம், இவரே தான்..." என ஒரு சேர சுந்தரம் சுதா தெரிவிக்க,
உடனே ராஜேஸ்வரி சித்தார்த்தின் முன் கதைச் சுருக்கத்தை அவர்களிடம் பகிர்ந்து முடித்தார்.

கிருஷ்ணா குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் இல்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு எந்த குறையும் இல்லாமல், பெயர் சூட்டு விழா இனிதே நடைபெற ராஜேஸ்வரிக்கு, புதிய உறவு புதுப்பிக்கப்பட்ட உறவாக கிடைத்ததை எண்ணி மனம் மகிழ்ந்து போனார்.

பெயர் சூட்டு விழா முடிந்த தினத்தன்று ,

" அக்கா நாளைக்கு அப்பாவும் நானும் கோயம்புத்தூருக்கு போலாம்னு இருக்கோம் ..." என்ற சுதாவிடம்,

"ரெண்டு நாள் என் கூட தங்கியிருந்ததுட்டு போயேன் சுதா.... " என்றாள் தமக்கை.

" நீ உனக்காக எதையுமே இப்ப வரைக்கும் கேட்டதில்லக்கா, ரெண்டு நாள் தானே நிச்சயமா இருக்கோம்..." என்றாள் புன்னகைத்தபடி தங்கை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், நிர்மலமான மனநிலையுடன், நாளைய விடியல் தலையில் இடியை இறக்கப் போவது தெரியாமல் நிம்மதியாக உறங்கினாள் ராதா .


கண்ணனைத் தேடி
 
Back
Top