Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 23

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
544
அத்தியாயம் 23

ராஜேஸ்வரி, வளைகாப்பிற்கு தேதி குறித்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, மகி,முருகன் மற்றும் வேலு புடைசூழ கேரளா வந்தடைந்தார்.

ராதாவை நிறைமாத கர்ப்பிணியாக கண்டவருக்கு எல்லையற்ற ஆனந்தம் பெருக , அவளை அணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்.

"ராதா, தங்க சிலை மாதிரி இருக்க.... எங்களை விட தம்பி உன்னை நல்லா பார்த்துக்குதுன்னு நல்லா தெரியுது..." என மகி கூறியதும்
தனக்கு கிடைத்த பாராட்டு மழையில் மகிழ்ந்து , சட்டையிலிருந்த காலரை தூக்கிவிட்டு தன் பெருமையை கிருஷ்ணா பறைசாற்ற அதனைக் கண்டு

" ரொம்ப பண்ணாத டா .. நீ அவளை படுத்தாம இருந்தா அதுவே போதும்.."
என்றார் ராஜேஸ்வரி சிறு குற்றம் சாட்டும் தோரணையில்.

கேரள கிளையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் கோபால் நாயர் குடும்பத்திற்கு ,பத்திரிக்கை கொடுக்க வேண்டுமென புதிதாக அச்சிட்ட பத்திரிகையை அவனிடம் ராஜேஸ்வரி காண்பித்துக் கொண்டிருக்கும் போது வாசலின் சிறிய இரும்பு கேட்டினை திறந்து கொண்டு யாரோ வரும் சத்தம் கேட்க, வெளியே எட்டி பார்த்தவன் ஒரு நிமிடம் திகைத்து, அப்படியே நின்று விட,
அவன் முக மாற்றத்தை கண்டு அவரும் ,வாசலை நோக்க, அங்கு ரேஷ்மி ஒய்யாரமாக வந்து கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவரின் முக மாற்றத்தை காட்டிலும், ராஜேஸ்வரியை அங்கு சற்றும் எதிர்பார்க்காத ரேஷ்மி,முதலில் திகைத்து, பிறகு மறைத்ததை, அவளது முக பாவனைகள் காட்டிக் கொடுக்க, அழையா விருந்தாளியாக அனைவரையும் பார்த்து புன்னகைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள்.


வாழ்க்கை இப்பதான் நிம்மதியா போய்கிட்டு இருக்கு ... இப்ப ஏன்
அனாவசியமா இவ இங்க வரணும்....இவளை ராதா எப்படி ஃபேஸ் பண்ணுவாளோ.....


என்ற கேள்வி கிருஷ்ணாவிற்கு மட்டுமல்ல ராஜேஸ்வரிக்கும் தோன்ற, நிலைமையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தனர்.

எதேச்சையாக படுக்கை அறையிலிருந்து வந்த ராதா, ரேஷ்மியை வரவேற்பறையில் பார்த்ததும், முதலில் சற்று திகைத்து பிறகு வெளி காட்டிக்கொள்ளாமல் சுதாரிக்க
மற்றவர்கள் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் இவ்விருவர் முகத்தையும் மாறி மாறி பார்க்க,
வெகு இயல்பாக அவள் அங்கிலத்தில், ரேஷ்மியை வரவேற்று அமர செய்ய,
அவளின் செய்கையை கிருஷ்ணா உட்பட, அனைவரும் ஒரு வித ஆச்சரியத்தோடு அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ராஜேஸ்வரி ரேஷ்மியின் கேரள பயணத்தை பற்றி விசாரிக்க , அதற்கு அவள், அவளது தோழியை சந்திப்பதற்காக கேரளா வந்ததாகவும், கொச்சின் விமான நிலையத்திலேயே ராஜேஸ்வரியை பார்த்து விட்டதாகவும், அவர் நலம் விசாரிப்பதற்காக தான் அவரை விமான நிலையத்திலிருந்து பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்தாள்.

அவள் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய் என்று அங்குள்ள அனைவருக்கும் தெரியும்.

சித்தார்த் கூறித்தான் ரேஷ்மி, கிருஷ்ணாவை சந்தித்து ராதாவின் வாழ்வில் குழப்பம் செய்ய வந்திருக்கிறாள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

பேச்சினூடே ராஜேஸ்வரி 3 மாதம், கேரளாவில் தங்க போவதாக பொய்யுரைக்க, அதனைக் கேட்டு சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்து விட்டு தேநீர் கூட பருகாமல் கிளம்புவதாக கூறி எழுந்தவள்
வாசலை நோக்கி இரண்டடி எடுத்து வைத்துவிட்டு , எதையோ எண்ணி திரும்பி ராதாவை உச்சி முதல் பாதம் வரை பொறாமையுடனும், கிருஷ்ணாவை புரியாத பார்வையில் பார்த்துவிட்டு காரில் ஏறி பறந்து விட்டாள்.

ரேஷ்மி காரில் புறப்பட்டுச் சென்ற பிறகே இயல்பு நிலைக்கு திரும்பிய கிருஷ்ணா அதனை வெளிகாட்டிக்கொள்ளாமல் தன் மனையாளை சீண்டி பார்க்க எண்ணி,

"போன முறை மாதிரி இந்த முறையும் ஏதாவது குடுத்துட்டு போவான்னு நினைச்சேன்..ம்ச்... நோ லக் ..."
என்றான் தன் கன்னத்தை வருடியபடி,

"அடிச்சிருப்பேன் " என்றாள் அவன் கண்ணாட்டி கோபத்தோடு.

"ஐயோ பாவம் ரேஷ்மி...." என பொய்யாக அவன் வக்காலத்து வாங்க,

"அவளை இல்ல உங்களை"

என்றவளின் வாய்மொழியை கேட்டு அனைவரும் சிரிக்க, கிருஷ்ணா அசடு வழிய ராஜேஷ்வரி,

" ரேஷ்மி போற வரைக்கும் அப்படி ஏதாவது சம்பவம் நடந்துடாதாங்கிற நப்பாசையோட, அவளையே பார்த்துக்கிட்டு இங்கேயே நின்னுகிட்டுயிருந்தாம்மா..... இவன் திருடன் ... " என தன் பங்கிற்கு கொளுத்திப் போட

" நீங்க எல்லாம் ஒரு அம்மாவா... பையனை போட்டு கொடுக்கறீங்களே ..." என அங்கலாய்த்தான் மகிழ்ச்சியோடு .

ராதாவின் சீமந்தம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோபால் நாயர் குடும்பம், அலுவலக பணியாளர்கள் மற்றும் சின்னம்மையின் குடும்பம் என அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.

திருமணத்தின் போது பார்த்ததை விட, தற்போது பன்மடங்கு பேரழகியாக காட்சியளித்தவளை விழுங்கி விடுவது போல், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

ராஜேஸ்வரி, ராதாவிற்கு பெரிய காசு மாலையை பரிசாக வழங்கினார்.

யாரும் எதிர்பாராத வேளையில் கிருஷ்ணா சபைக்கு சென்று அவள் கரம் பற்றி, பூனாவில் வாங்கிய, வைர மோதிரத்தை அவள் விரலில் அணிவித்து, அதில் ஆழ்ந்த முத்தம் ஒன்றையும் பதிக்க, இந்நிகழ்வை கண்டு ரசித்த அனைவரும் கரவொலி எழுப்ப, வெட்கத்திலிருந்த ராதாவிடம் மற்றொரு மோதிரத்தை கொடுத்து, அவனுக்கு அணிவிக்குமாறு பணிக்க, நாணத்தால் முகம் சிவந்தவள் தலைகுனிந்தபடி, மோதிரத்தை அவன் விரலில் அணிவித்தாள்.

ராதா உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் ஆரோக்கியமாக இருப்பதை பார்த்த ராஜேஸ்வரி கிருஷ்ணாவை வெகுவாகப் பாராட்டியதோடு சீமந்தம் முடிந்த, மறுநாளே பல அறிவுரைகளை கூறிவிட்டு பூனாவிற்கு பயணப்பட்டார்.

அவள் மன ஆரோக்கியம் நன்றாக இருப்பதை கருத்தில் கொண்டவன், மெல்ல ரேஷ்மியை பற்றிய உண்மையை விளக்க எண்ணினான்.

அதற்கு முன்பாக அவள் எழுதிய இரண்டு கடிதத்தையும் மருத்துவர் அவனிடம் கொடுத்ததை தெரிவிக்க, அதனைக் கேட்டு பதிலேதும் கூறாமல் அமைதியாய் தலைகுனிந்திருந்தவளின் கன்னத்தை தொட்டு அவள் முகம் திருப்பியவன் ,

" தப்பு உன்னோடது இல்ல கண்ணம்மா என்னோடது ...." என கண் கலங்கியவன் ,
அன்று மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தவரை பார்த்து பயந்து, அவன் தோளில், ரேஷ்மி சாய்ந்து கொண்டதை கூறியவன் பிறகு, அவனது அறைக்கு வந்து அவள் அடிவாங்கி சென்றதையும் விளக்கினான்.


மேலும் கர்னலின் இருபத்தைந்தாவது திருமண விழாவின் போது எதேச்சையாக அவளை சந்தித்ததாகவும், அவன் அறையில் நடந்த சம்பவத்திற்காக, அவள் மன்னிப்பு கோரினாள் எனவும் ஒன்றுவிடாமல் அனைத்து உண்மைகளையும் பொறுமையாக அவளை தோளில் அணைத்தபடி கூறி முடித்தான்.

சுவாதியை பற்றி பேச நினைத்து மெதுவாக, அவளுடனான தன் முன் கதை சுருக்கத்தை கூறி அவர்களது திருமண வரவேற்பு தினத்தன்று தான் சுவாதியின் நினைவுநாள் என்றும் கூறி முடித்தான்.

சுவாதியின் நினைவு தினம் என்பதால் தான் அவளுடைய புகைப்படத்தை, திருமண வரவேற்பு நடந்த தினத்தன்று கையில் வைத்துக்கொண்டிருந்தார் போலும் என புரிந்து

"எனக்கு எல்லாம் தெரியும்...." என்றாள் ராதா மென்மையாக.

அவள் அப்படி கூறிய மாத்திரத்தில், அவன் அவள் கண்ணை ஊடுருவி

" எல்லாம்னா..." என தொக்கி நிறுத்த,

" எல்லாம்தான்" என கன்னம் குழி விழ புன்னகைத்தவள்,

" நான் உங்களை பாக்குறதுக்கு முன்னாடியே, உங்களைப் பத்தின எல்லா விஷயத்தையும் உங்க அம்மா மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்..." என்றவளை ஆர்வம் கலந்த ஆச்சரியத்துடன், பார்த்துக் கொண்டே மேலும் என்பது போல் அவன் சைகை செய்ய,

அவனை பற்றி தெரிந்து கொண்ட அனைத்தையும் அவள் பட்டியலிட, அவனுக்கு ஆர்வம் ஆச்சரியமாகி, பிறகு ஆனந்தத்தில் முடிந்தது.

சிறு சிறு நிகழ்வுகளை கூட, மறவாமல் ரசித்து கூறியவளின் பேச்சிலிருந்து, அவள் ஆழ்மனதில் அவன் என்றோ நிறைந்து விட்டான் என்பதை, அவள் கூறாமலேயே அவனால் உணர்ந்து கொள்ள முடிந்த போது வானத்தையே வசப்படுத்தியது போன்றதொரு உணர்வை பெற்றான்.

அவள் அவனைப் பாராமலே ஒருதலையாய் காதலித்ததைதான், சின்னம்மையிடம் காதல் திருமணம் என்று கூறியிருந்தாள் போலும், என்று புரிந்து மகிழ்ந்து போனான்.

சூழ்நிலையின் காரணமாக தான் தன்னை மணந்து கொண்டாளோ, என்றெண்ணியிருந்தவனுக்கு அவளுடைய பதில் பேரானந்தத்தை கொடுக்க, அவளை இறுகத் தழுவிக் கொண்டு, திருமண தினத்தன்று மொட்டை மாடியில் அவர்களது முதல் சந்திப்பிற்கு பிறகு அவனுள் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் கூறி முடித்தவன்,

“மூணு விஷயம் தான் எனக்கு புரியல ராதா…

என்னதான் நான் உன்கிட்ட டிவோர்ஸ் கேட்டிருந்தாலும், சித்தார்த், உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதும், உடனே அவனைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு, நான் எப்படி சொல்லுவேன்னு நீ எதிர்பார்த்த...

அவனைப் பத்தி முன்னவே தெரிஞ்சதால தானே, அவன் உன்கிட்ட பேச வரும் சந்தர்ப்பத்தை எல்லாம் அவாய்ட் பண்ணினேன்... அதுல கூடவா என் பொசசிவ்னஸ் உனக்கு தெரியல….

ஊருக்காக தான், 'சார்'னு கூப்பிட வேணான்னு சொன்னாலும், உன் மேல ஆசை இல்லாமலா 'அத்தான்'னு கூப்பிட சொல்லியிருப்பேன்.....

கம்ப்யூட்டரோட பழகிப் பழகி ஹ்யூமன் மைண்ட் அண்ட் ஃபீலிங்ஸ் புரியாம போயிடுச்சா பிராஜக்ட் டைரக்டர் மேடம்…” என்றவனின் பேச்சு அவளுள் நிம்மதியும், இதழில் புன்னகையும் விரிய செய்ய, அவளை நெருங்கியவன் அவள் கண்ணுக்குள் நுழைந்து,

“ இது கூட பரவாயில்லை, நான் ஊருக்கு போறதுக்கு முந்தின நாள் ராத்திரி…” என அவன் பாதியில் பேச்சை நிறுத்துவதற்கு முன்னரே, அன்றைய இரவின் நிகழ்வுகளை எண்ணி அவள் முகம் வெட்கத்தால் சிவக்க, அவன் முகம் பார்க்க முடியாமல் அவள் தலை குனிந்து நாணப்பட்டு அவன் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள, அதனை வெகுவாக ரசித்தபடி,

“ அது எப்படி ராதா காதல் இல்லாம என்னால உன் கூட அப்படி இருந்திருக்க முடியும், இதெல்லாம் நீ யோசிக்கவே இல்லையா... அன்னிக்கு ராத்திரி ஒரு கணத்துல கூடவா என் காதலை நீ உணரல…” என்றவனின் பேச்சு ஆற்றாமை , காதல் , மோகம் என பல்வேறு உணர்ச்சிகளின் கலவையாக காட்சியளிக்க, அவன் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் , மேலும் வெட்கியவள் தன் முகத்தை அவன் மார்பில் ஆழ புதைத்துக் கொள்ள, அவனுக்கும் அன்றைய காட்சிகள் மற்றும் மனநிலையும் மனதில் வந்து போக, உணர்ச்சிப் பெருக்கில் அவள் முகம் நோக்கி குனிந்து இதழ் ஒற்ற எண்ணியவனுக்கு , அது வெறும் இதழ் ஒற்றலோடு நின்றுவிடாது என்கின்ற உண்மை உரைக்கும் போது, உணர்வுகளை அரும்பாடு பட்டு கட்டுக்குள் கொண்டு வந்து சுதாரித்து

" கண்ணம்மா... உன்னை எந்த நொடியிலிருந்து நேசிக்க ஆரம்பிச்சேன்னு தெரியாது, ஆனா இனி நான் வாழுற ஒவ்வொரு நொடியும் நேசிச்சிகிட்டே இருப்பேன்...." என்றவனின் பேச்சைக் கேட்டு வெட்கியவள்,

" அது என்ன கண்ணம்மா ..." என்றாள் கூச்சத்துடன்.

" அன்னிக்கு சித்தார்த் , சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா ... பாரதியார் பாட்டுன்னு சொல்லி உன் கிட்ட எந்த ராகம்னு கேட்டான் ஞாபக இருக்கா... நீ கூட அந்த பாட்டுக்கு, ஏதோ ஒரு ராகத்தை சொன்ன... ஏனோ எனக்கு அப்பவே அந்த வார்த்தை 'கண்ணம்மா' ரொம்ப பிடிச்சு போச்சு... அப்புறம் இன்டர்நெட்ல அந்த பாட்ட தேடி கேட்டும் பார்த்தேன்...
உனக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது அதனால தான் .." என்றான் அவள் கண்ணோடு கண் நோக்கி.

" நான் ஒன்னு கேக்குறேன் தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே ..."

“கேளுங்க மேடம்….” என்றான் குறும்பாக.

"உங்களால சுவாதியை முழுசா மறக்க முடிஞ்சுதா .. " என்ற எதிர்பாராத கேள்விக்கு கண்களை இறுக மூடி திறந்தவன், சற்று நேரம் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு,

" சுவாதியை முழுசா மறந்துட்டேன்னு சொன்னேன்னா நான் நிச்சயமா பொய் சொல்றேன்னு அர்த்தம் ராதா....

சுவாதியோட நினைவுகள் என் மனசுல ஏதோ ஒரு மூலைல இருந்துக்கிட்டே இருக்கும் ...

நான் அவளை முழுசா மறந்துட்டேன்னு சொன்னா நான் அவளோட வாழ்ந்த வாழ்க்கை பொய்யாயிடும்...

அவ என்னோட கடந்த காலம், நீ என்னோட நிகழ்காலம், இவ (ராதாவின் வயிற்றைத் தொட்டுபடி) என்னோட எதிர்காலம்.." என்றான் உணர்வுப்பூர்வமாக.

"பெண் குழந்தைன்னு முடிவே பண்ணிட்டீங்களா..." என்றவளின், நெற்றியோடு தன் நெற்றியை மோதியவன்

"உன்னை போல.... இதே கன்னக்குழியோட..... " என்றான் நெகிழ்வுடன்.

பிறகு அவன் கேரளாவிற்கு வந்த தினத்தன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியவன், சித்தார்த் அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதையும் தெளிவாக விளக்கினான்.

நாட்கள் நகர நகர, இருவருக்குமிடையேயான புரிதலும் நேசமும் தங்கத்தின் விலை போல் வேகமாக உயரத் தொடங்க, தினமும் அவனது இடது மார்பின் மேல் தலை வைத்து ஒருக்களித்து அணைத்தபடி உறங்குவதை அவள் வழக்கமாக்கிக் கொள்ள,அவனுடைய இதயத்துடிப்பும், தலைகோதலும், அவளுள் மிகுந்த பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியதோடு ஆழ்ந்த உறக்கத்தையும் கொடுத்தது.

பெரும்பாலும் அவளிடம் சிறு அசைவு தெரிந்தால் கூட, உறக்கத்திலிருந்து விழித்து விடுபவன், அன்று காலை மணி எட்டை தொட்ட பின்னரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்து விட்டு,

மெதுவாக உணர்வு பெற்று கண்களைத் திறவாமல் அவன் மனையாளை தேட, அவள் படுக்கையில் இல்லை என்பதை உணர்ந்ததும் எழுந்தமர்ந்தான்.

அவள் அமைதியாக வயிற்றில் கை வைத்தபடி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்ததை பார்த்து

" என்ன ராதா, ஏதாவது பிரச்சனையா.. " என்றான் பதற்றத்தோடு.

"ஆமா...பனிக்குடம் உடைஞ்சிருக்கும் நினைக்கிறேன்... வலி அதிகமா இருக்கு.... " என்றவளை கோபத்துடன் பார்த்தவன்,

"ஏன் என்னை எழுப்பலை " என கடிந்து கொண்டே மேல் சட்டையை அணிந்து கொண்டான்.

"நீங்க இவ்ளோ நேரம் தூங்கி நான் பார்த்ததே இல்லை ..."

என ஏதேதோ கூறிக்கொண்டிருந்தவளின் பேச்சை காதில் வாங்காமல், அவளை இரு கைகளில் ஏந்தியபடி, சீமந்தம் நடந்த தினத்தன்று வாங்கிய புதிய காரின், பின்புறத்தில் கிடத்திவிட்டு, மருத்துவமனையை நோக்கி பயணிக்கும் தருணத்தில் கூட அவளுக்கு எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படாவண்ணம் பொறுமையாக அறிவுரைகளை வழங்கியபடி காற்றை கிழித்துக்கொண்டு காரோட்டினான்.

மருத்துவமனையில்,செவிலியர் அவசர சிகிச்சைக்காக அவளை சக்கர நாற்காலியில் அமரச் செய்து கொண்டிருந்த நேரத்தில், ரத்தம், சாவு அனைத்தையும் அன்றாட பணியில் அங்கமாக பார்க்கும் அவன் முகத்தில் பயம் கலந்த பதற்றம் தென்படுவதை அவளால் உணர முடிந்தது.

பிரசவத்திற்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், தற்போது வலி விட்டு விட்டு வருவதாக அவள் , மருத்துவரிடம் தெரிவிக்க,அவர் அவளுக்கு ரத்த அழுத்தத்தை சரி பார்க்கும் படி செவிலியருக்கு பரிந்துரைத்தார்.

ஏற்கனவே சுவாதியை இழந்தவன், இவளையும் இழந்து விடுவோமோ என்ற பதற்றத்தில் ,ரத்த அழுத்தக் கருவியின் செயல்பாட்டையே பார்த்துக்கொண்டிருக்க,

"அத்தான்.... " என்று அவள் முதன் முதலாக விளித்ததை கேட்ட மாத்திரத்தில், திரும்பி அவள் முகம் பார்த்தவன், அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்டு, அவள் கைகளைப் பற்றிக்கொண்டு கண் கலங்கினான்.

பனிக்குடமும் உடைந்து, ரத்த அழுத்தமும் மிக அதிகமாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்தால் தான், குழந்தையையும் தாயையும் காப்பாற்ற முடியும் என மருத்துவர் தெரிவித்துவிட்டு, அறுவை சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு செவிலியர்களை பணித்தார்.

அவனுக்காகவே வலியைப் வெளிக்காட்டாமல் பொறுத்துக் கொண்டிருந்தாலும், வலியின் காரணமாக அவளது முகம் செந்நிறம் ஆவதை தடுக்க முடியவில்லை.

அவள் முகத்திலிருந்தே அதை உணர்ந்தவன் குரலில் சற்று கம்பீரத்தை கூட்டி,

" கஷ்டப்பட்டு வேகமா கார் ஓட்டிக்கிட்டு வந்து உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது நான்....

நர்ஸ் ஆபரேஷனுக்கான ஏற்பாட்ட செய்யப் போறாங்க...

டாக்டர்ஸ் ஆபரேஷன் செஞ்சு குழந்தையை வெளியே எடுக்க போறாங்க ....

இதுல உனக்கு வேலையே இல்ல ....

எல்லா வேலையும் மத்தவங்க தான் செய்யப் போறாங்க ....

சோ, நீ என்ன பண்ற, டென்ஷன் ஆகாம மத்தவங்க செய்யற வேலையை மட்டும் வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தா போதும் சரியா ..." என அவள் வலி, வேதனை மற்றும் பயத்தை குறைப்பதற்காக, தன்னுடைய பதற்றத்தை வெளி காட்டாமல் கம்மிய குரலை மறைத்தபடி பேசிக்கொண்டிருந்தவனின் பேச்சின் சாராம்சம்,

சிறு குழந்தையை தடுப்பூசிக்கு தயார் செய்யும் தந்தையின் வாய் மொழி போல் இருந்ததை உணர்ந்தவளுக்கு, அந்த வலியிலும் சிரிப்புதான் வந்தது.

ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, அறுவை சிகிச்சையின் மூலம், அழகான பெண் குழந்தை பிறக்க, குழந்தை பிறந்த செய்தியை அறிந்ததும், தனியறைக்கு மாற்றப்பட்டவளை காணச் சென்றவனுக்கு வெளிறிய முகத்துடன், பலவீனமாக காட்சியளித்தவளை பார்த்ததும், போன உயிர் திரும்பி வர, குனிந்து அவளது நெற்றியில் உச்சி முகர்ந்தான்.

செவிலியர் குழந்தையை பூத்துவலையில் சுற்றி அவனிடம் காண்பித்த போது, 100 கிலோ எடையுள்ள பொருட்களை அனாயாசமாக தூக்கியவனால், அந்த மூன்று கிலோ ரோஜா செண்டை தூக்க முடியாமல் கைகளில் நடுக்கம் ஏற்பட, கண்ணில் பிரமிப்புடன் கையில் நடுக்கத்துடன், குழந்தையை பெற்றுக்கொண்டவன், அதனுடைய பூமி தொடாத, செந்நிற பிஞ்சு பாதங்களில் முத்தமிட்டு கண் கலங்கினான் .

அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவரத்தை , அன்று காலையிலேயே அவன் ராஜேஸ்வரிக்கு தெரிவித்ததால், விமானத்தின் மூலம் கேரளா வந்த ராஜேஸ்வரி ராதாவை பார்த்து நலம் விசாரித்தோடு புதிதாய் பிறந்த அந்த பூச்செண்டை கையிலேந்தி மனம் மகிழ்ந்தார்.

நாட்கள் நகர, ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து ராதா வீட்டுக்கு அழைத்து வரப்பட, குழந்தை முழுக்க முழுக்க தந்தையின் சாயலில் தாயின் நிறத்தில் காட்சியளித்தாள்.


அவன் பணிக்கு திரும்ப சில நாட்களே உள்ள நிலையில், அடுத்த பத்து நாட்களுக்குள் பெயர் சூட்டு விழாவை முடித்து விட வேண்டும் என்ற ராஜேஸ்வரியிடம், பெயர் சூட்டு விழாவிற்கு முன்னதாகவே, ராதாவின் தந்தையை சந்தித்து, அவர்களுடைய திருமணத்தை பற்றி எடுத்துரைத்து, அவரையும் பெயர் சூட்டு விழாவிற்கு அழைக்க வேண்டும் என்ற தன்னுடைய திட்டத்தை கிருஷ்ணா விளக்கினான்.

இவ்விருவருடைய திட்டமும் நிறைவேற போவதில்லை என தெரியாமலே திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் , புதிய குழந்தையுடன் அனைவரும் பூனாவிற்கு பயணமானார்கள்.

கண்ணனை தேடி
 
Back
Top