Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 22

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
550
அத்தியாயம் 22

நீண்ட நாட்களுக்குப் பிறகான நிம்மதியான உறக்கத்தால், அதிக புத்துணர்ச்சியோடு அதிகாலையில் கண் விழித்தவன் தன்னவளின் முகத்தை வெகு அருகில் சென்று ஆசைதீர பார்த்தான்.

உன் பக்கத்துலயே இருந்துகிட்டு , உன் முகத்தைப் பார்க்காம, உன் கூட சகஜமா பேசாம கோவத்துல இருக்கிற மாதிரி நடிக்கிறது எவ்ளோ பெரிய கொடுமைன்னு நேத்து ஒரு நாள்லயே உணர்ந்துட்டேன் ராதா....
உன்கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கூட கேட்க முடியாத நிலைமை.... ஆனா விளக்கமே சொல்லாம கூடிய சீக்கிரம் என் காதலே உனக்கு புரிய வைப்பேங்கிற நம்பிக்கையும் இருக்கு கண்ணம்மா....


என்றெண்ணியபடி அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவனுக்கு, அதில் குழந்தைத்தனம் கூடியிருக்க, அவளது குண்டு கன்னங்கள் மேலும் மெருகேறி சந்தன நிறத்தில் ஜொலிப்பதைக்கண்டு மெய் மறந்து ரசித்தவன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட,
ஆழ்ந்த உறக்கத்திலும் அவனுடைய மீசை குறுகுறுப்பால் ஏற்பட்ட உறுத்தலை கையினால் தடவியபடி, மறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

நேத்து சித்தார்த்தை தானே தேடின கண்ணம்மா .... பயப்படாத... அவனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பிட்டேன்.....

என ராதாவின் மனதோடு பேசிக் கொண்டிருந்தான்.

உன்னை அவன் அவ்ளோ கேவலமா பேசி கூட, நீ அமைதியா இருந்ததுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் .... அதான் நம்ம குழந்தை...
நீ என் குழந்தையை தான் சுமந்துகிட்டு இருக்கேன்னு அவனுக்கு தெரிஞ்சிருந்தா என்னை
பழி வாங்கிறதா நெனச்சு உன்னை கொன்னே போட்டிருப்பான்...

என மிகச் சரியாக அனுமானித்தவன்

நீ என்னைக்கோ என் சுவாசத்துல கிளந்துட்ட கண்ணம்மா ... அதனாலதான் நீ சொல்லாமலே உன் மனசுல இருக்குறத என்னால உணர முடியுது....

என அவள் உறக்கத்தில் இருப்பது தெரிந்தும் தன்னை மறந்து தன்னவளோடு உரையாடி கொண்டிருந்தவனுக்கு
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் மனக்கண்முன் படக் காட்சியாய் விரிந்தன.


இடம் : ராஜேஸ்வரி இல்லம், பூனா


அந்த அதிகாலை வேளையில், வாசலில் மகி கோலம் போட்டுக்கொண்டிருக்கும் போது ,டாக்ஸியில் வந்திறங்கினான் கிருஷ்ணா.

அவனைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியில் "வா தம்பி " என அவள் வரவேற்க, அதை புன்னகையோடு ஏற்றுக் கொண்டவன், மிகுந்த உற்சாகத்தோடு ராஜேஸ்வரியின் அறைக்கு விரைய மைந்தனை சற்றும் எதிர்பார்க்காதவர் ,
அவனைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் பிறகு மிகுந்த மகிழ்ச்சியில் அவனை அணைத்துக் கொண்டு பயண விவரங்களை கேட்டறிந்தார்.

அவரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தாலும், அவன் கண்கள் மட்டும் ஒருவிதமான தேடுதல் வேட்டையை செய்து கொண்டே இருந்தது.

அவன் தேடுதலுக்கான காரணத்தை முற்றிலும் அறிந்த நிலையில் ராஜேஸ்வரியும் மகியும் ஒருவரையொருவர் பார்த்து நமட்டுச் சிரிப்பை பரிமாறிக்கொள்ள ,

ராதாவை பற்றி கேட்க லஜ்ஜையுற்றுக் முதலில் திணறியவன், பிறகு கண்களில் ஒரு வித அலைபுறுதலுடன்

" ராதா எங்கம்மா " என கம்பீரத்திலும் ஒருவித கூச்சத்துடன் கேட்ட மைந்தனை பார்த்து ரசித்தபடி

அடுத்தவன் மனைவியை பற்றி துளிக்கூட கூச்சமில்லாமல் கேட்கும் சித்தார்த் எங்கே, கட்டிய மனைவியை பற்றி கேட்பதற்கே வெட்கப்படும் என் மகன் எங்கே ... தான் தன் மகனை கண்ணியத்துடன் வளர்த்திருப்பதை நினைத்து பூரித்துப் போனார்.

" ராதா கேரளாவுக்குப் போயிருக்கா.." என்றாள் மகி.

அதனை கேட்டதும் அவனுக்கு ஆச்சரியத்தை விட அதிர்ச்சியே மிஞ்ச,

" ஏன்? எப்போ? " என வார்த்தைகள் அவனிடம் தடுமாறி வர,

" நம்ம கம்பெனிக்கு கேரளாவுல ப்ராஜக்ட்ஸ் கிடைச்சதால, நம்ம கம்பெனியோட இன்னொரு பிரான்சை அங்க ஓபன் பண்ணி இருக்கேன் கிருஷ்ணா ....

அந்த பிரான்சை தானே பார்த்துக்கிறதா சொல்லி ராதா ஆறு மாசத்துக்கு முன்னாடியே கேரளாவுக்கு கிளம்பி போயிட்டா..." என ராஜேஸ்வரி கூற கேட்டதும், அவன் முகத்தில் தெரிந்த அப்பட்டமான ஏமாற்றத்தை , அவரால் உணர்ந்துகொள்ள முடிந்த நிலையில்,

மகி "ராதா இப்ப கேரளாவுல " என தொடங்கும் போதே, அவளை சைகையால் தடுத்து நிறுத்தியவர்,

" ராதா இப்ப கேரளாவுல நம்ம கம்பெனியோட ப்ராஜெக்ட் டைரக்டரா ஜாயின் பண்ணி இருக்கா ..." என மகி கூற வந்த நற்செய்தியை மாற்றி வேறுவிதமாக கூறி முடித்தார் ராஜேஸ்வரி.


கேரளாவிற்கு செல்ல மனமும் உடலும் துடித்தாலும், அதனை எப்படித் தாயிடம் கூறி செயலாற்றுவது என புரியாமல் தவித்தான் .

கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்கு பிறகு ராஜேஸ்வரியை சந்தித்திருக்கிறான், அவருடன் ஓரிரு நாட்களாவது உடனிருக்க வேண்டாமா என தன்னுள்ளே உழுன்று கொண்டிருந்தவனின் மனவோட்டத்தை அறிந்தவர், ராதாவிற்கு இவனுடைய உதவியும் பாதுகாப்பும் இத்தருணத்தில் தேவை என்பதை கருத்தில் கொண்டு,

" கிருஷ்ணா, நீ மார்னிங் பிளைட்ல கேரளாவுக்கு கிளம்பு ..."

என்றவரை நன்றியோடு பார்த்து, சரி என்ற ஒற்றை பதிலை மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்துவிட்டு, மனதில் பொத்தி வைத்திருந்த ஆறுமாத காதலுடன் கேரளாவுக்கு பயணப்பட்டான்.


கொச்சின் விமான நிலையத்தை, பிற்பகல் 12 மணிக்கு வந்தடைந்தவன், அங்கிருந்து டாக்ஸியின் மூலம் ராஜேஸ்வரியிடமிருந்து பெற்ற ராதாவின் வீட்டுமுகவரிக்கு பயணிக்க,
அவன் பயணித்த டாக்சியானது, ராதாவின் வீட்டை அடைவதற்கு, நான்கைந்து வீடுகள் இருக்கும் நிலையில் பழுதாகி போனது.

டாக்ஸி ஓட்டுனர் அவன் பயணிக்க வேண்டிய முகவரி வெகு அருகில் இருப்பதை கூறி சென்றடைய ஏதுவாக, வழி
கூறி அனுப்ப,
ராதாவின் வீட்டைச்சுற்றி வரிசையாய் நின்றிருந்த தென்னை மரங்களை, அவன் வந்தடையும் போது, அவள் தன் வீட்டிலிருந்து வெளியே வர, பார்த்ததும் மகிழ்ச்சியில் ஒரு கணம் அப்படியே நின்று விட்டான்.

அவள் தலை குனிந்தபடி மெல்ல நடப்பதை உற்று நோக்கும் போது தான், அவள் தாய்மை அடைந்திருக்கிறாள் என்பதை அறிந்துக் கொண்டவனுக்கு,
ஒரு நிமிடம் அது கனவா அல்லது நினைவா என பிரித்தறிய முடியாத ஆனந்த நிலைக்கு தள்ளப்பட, சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனவனுக்கு, உலகில் உள்ள அத்தனை மகிழ்ச்சியும், அவனது காலடியில் மண்டியிட்டு கிடப்பது போன்ற உணர்வை பெற்றான்.

நான் அவளை ஆறு மாதகாலமாக மனதில் சுமந்திருக்கிறேன், என்றெண்ணி வந்தேன்.... ஆனால் அவளோ என் உயிரை அல்லவா சுமந்து கொண்டிருக்கிறாள் என மெய் சிலிர்த்து போனவன், அவள் வீட்டை நோக்கி நடைபோட முற்படும் போது, இருசக்கர வாகனத்தின் இரைச்சலை கேட்டு திரும்பிப் பார்த்தவன், அதில் சித்தார்த்தை கண்டதும் துணுக்குற்றான்.

கிருஷ்ணா அவனைப் பின்தொடருவதற்கு முன், ராதாவின் வீட்டு வாயிலைத் தாண்டி அவள் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கே சென்று அவன் பேச,

பேசியதை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்ட கிருஷ்ணாவிற்கு, கோபம் உச்சஸ்தாயியில் இருக்க, ராதா கோபத்தையும்,அழுகையையும் ஒருசேர கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக நிற்பதைக் கண்டவனுக்கு மேலும் சித்தார்த்தின் மீது கொலைவெறி எண்ணம் தோன்றியது.

இப்பொழுதே அவனுடன் சண்டையிட்டால்,அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ராதாவிற்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், அவன் அவள் வீட்டை விட்டு வெளியேறும் வரை காத்திருந்தவன்,சித்தார்த் வீட்டின் இரும்பு கேட்டை கடப்பதற்கு முன்பே, ராதா வீட்டினுள் சென்று தாழிட்டுக் கொண்டதை பார்த்தும், இதுதான் தருணம் என அவனை வழிமறித்தான்.


அங்கு கிருஷ்ணாவை சற்றும் எதிர்பாராதவன் பேயை கண்டது போல், மரண பயத்தில், கை கால்கள் நடுங்கிய நிலையில், அப்படியே மூளை மரத்து போய் நிற்க,

அவனுடைய மேல் சட்டை காலரை கொத்தாகப் பற்றி, தென்னை மரங்களைத் தாண்டி குளத்தை நோக்கி இழுத்துச் சென்றவன்,

" உனக்கு போன முறையே சொன்னேன் ராதா விஷயத்துல தலையிடாதேன்னு... உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா மறுபடியும் அவளை தேடி இங்க வந்திருப்ப..." என சாந்தமாக பேச்சுவார்த்தையை தொடங்கியவன், திடீரென வெறி கொண்டவன் போல், அவனை புரட்டி எடுக்க ஆரம்பித்தான்.

அவ்வளவு அடியை வாங்கிக் கொண்டும்,

" கிருஷ்ணா, நான் சொல்றத கேளு.... அந்த ராதா நல்லவ இல்ல.... அவ உனக்கு தெரியாம வேற யார் கூடயோ சுத்தி வயித்துல குழந்தையை வாங்கிக்கிட்டு
வந்திருக்கா ..."
சித்தார்த் ராதாவை பற்றி தூற்ற,

" அவ வயித்துல வளர்றது என் குழந்தை டா.... நானும் அவளும் கணவன் மனைவியா வாழ ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு..... எந்த ஒரு சரியான ஆம்பளைக்கும் இந்த விஷயத்துல டவுட்டே வராது....."
என்றவன் வெளியே ரத்தம் வராமல் உள்காயம் ஏற்படும்படி சித்தார்த்தை மீண்டும் போட்டு தாக்கினான்.

அவனின் முறுக்கேறிய கரங்களில் சிக்கியவன், புயலில் மாட்டிய பாய்மர படகு போல் திக்கு திசை தெரியாமல் திணற,ஆடைகள் எல்லாம் கிழிந்த நிலையில், உயிர் போகும் வலியில் துடித்துக்கொண்டிருந்தவனிடம்

" நான் அளவுக்கு மீறின சந்தோஷத்துல இருக்கிறதால உன்னை உயிரோட விடறேன்... இனிமே நீ ராதாவை பார்க்க இல்ல நினைக்க கூட கூடாது... ஷி ஈஸ் மை வுமன்..." என கர்ஜித்தவனை பார்த்து, வலி மற்றும் பயத்தினால், ஏதும் பேசாமல் தலையை அசைத்தபடி , தன் இருசக்கர வாகனத்தை, கைகளில் பிடித்து தள்ளியபடியே நடையை கட்டினான் சித்தார்த்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற நிகழ்வினை, அசை போட்டு பார்த்துக்கொண்டிருந்தவன் , திடீரென நினைவு வந்தவனாய் கைபேசியை உயிர்ப்பித்து ராஜேஸ்வரிக்கு அழைப்பு விடுத்து

"அம்மா" என்றான் பரபரப்புடன்.

"என்ன கிருஷ்ணா" என சாவகாசமாய் ராஜேஸ்வரி கேட்க

" ராதா கன்சீவ்வா இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா ..."

" போன வாரம் கோபால் நாயரோட பேசும் போது ராதா கன்சீவ்வா இருக்கான்னு சொன்னாரு... முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவளை கேரளாவுக்கு தனியா அனுப்யிருப்பேனா கிருஷ்ணா.." என அவர் எதிர்க் கேள்வி கேட்க,

" ஏம்மா அவ உங்க கிட்ட கூட இந்த விஷயத்தை சொல்லிக்காம இங்க
வந்திருக்கா ..."

" அதுக்கு நீ தான் பதில் சொல்லணும் கிருஷ்ணா ... அவளை நான் மருமகளா இல்லாம மகளா தான் பார்த்துகிட்டேன்... அவளை நம்ம கம்பெனில ஈக்குவல் ஷேர் ஹோல்டரா ஆகப்போறதாவும் அவகிட்ட சொல்லி இருந்தேன்... உனக்கு முன்னாடியே அவளை எனக்கு நல்லா தெரியும்… உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஆயிரம் பிரச்சினைகள் இருந்திருக்கலாம்… ஆனா அவ கன்சீவ் ஆன விஷயத்தை என்கிட்டிருந்து மறைச்சது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... அதனாலதான் அந்த விஷயத்தை பத்தி உங்க ரெண்டு பேர் கிட்டேயும் நேரடியா இப்ப வரைக்கும் நான் பேசல..."

எனக் கூறியவர், மேலும் சித்தார்த் இரண்டு நாட்களுக்கு முன்னதாக பூனா வந்து சென்றதையும் அவனிடம் பகிர்ந்தார்.

ராதாவை தொழில் முறையில் பங்குதாரராக்க தன் தாய் நினைத்ததால் தான், அவள் கருவுற்றிருப்பதை கூட கூறாமல் கேரளாவிற்கு பயணமானாள் போலும் என்றெண்ணியவன் , சித்தார்த் கேரளாவிற்கு வந்து அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு சென்றதை விளக்கியவனுக்கு , பிரச்சனையின் போக்கு மாமியார்-மருமகள் சண்டையை நோக்கி செல்வது போல் உணர்ந்ததும், முதலில் அவனுக்கு சிரிப்பு வர, பிறகு பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவன், ராதாவின் உடல்நிலை பற்றி மருத்துவர் கூறியது, அவர்கள் திருமணத்தின் போது நடந்த முன் கதை சுருக்கம், ராஜேஸ்வரி மருத்துவமனையில் இருக்கும் போது நடந்தவைகள் மற்றும் ராதா எழுதிய இரு கடிதம் என அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து முடித்தான்.

கிருஷ்ணா தன் தாயுடன் தமிழில் உரையாடலை ஆரம்பித்து, பிறகு ஆங்கிலத்திற்கு மாறி, ஹிந்தியில் தொடர்ந்து, தற்போது மராத்தியில் தர்க்கம் செய்து கொண்டிருந்தான்.

நேரத்திற்கும் அவனுடைய மனோபாவத்திற்கும் ஏற்றார் போல், மொழிகளை இயல்பாக தேர்வு செய்து பேசுவான்.

தன்னை "தமிழன்" என்பதை விட இந்தியனாகவே அடையாளம் காட்டிக் கொள்வான்.

அனைத்தையும் கேட்டறிந்தவர் , பிரச்சனையின் மூலம் தன் மகன் தான் என்றிந்ததும்

" அவளை பத்திரமா பாத்துக்கோ கிருஷ்ணா ..... உன் முரட்டுத்தனத்தை மறுபடியும் அவகிட்ட காட்டிடாதே .."

" அவ என் வைஃப் மா... எனிமி இல்ல.." என்றான் மைந்தன் ஆற்றாமையோடு.

" புரிஞ்சா சரி, என் பேர குழந்தை ஹெல்தியா பொறக்கணும் .." என்றவரின் பேச்சை இடைமறித்து

" அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் .... அவ இடத்துல வேற யாரையாவது போட்டு அவ வொர்க் லோட குறைங்கம்மா..."என புன்னகையுடன் கூறியவனின் வாய்மொழியில் தெரிந்த அக்கறையைக் கண்டு மனதில் மெச்சியவர்,

" எனக்கு ராதா கன்சீவ்வா இருக்கானு தெரிந்ததுமே , அவ இடத்துக்கு வேற ஒரு ஆள செலக்ட் பண்ணிட்டேன் .. இந்த வாரத்துல அவங்க ஜாயின் பண்ணிடுவாங்க... அடுத்த மாசம் ராதாவுக்கு சீமந்தம் செய்யணும் ..நாள் குறிச்சிட்டு சொல்றேன்...

ஒன்னு செய்யறியா கிருஷ்ணா ... ராதாவை பூனாவுக்கு கூட்டிட்டு வந்துடறியா..."

" இல்லம்மா, அவ என் மேல நம்பிக்கை இல்லாம தான் இவ்ளோ தூரம்
வந்திருக்கா...நான் அவ மனசுல நம்பிக்கை உண்டாக்கணும்... கவலைப்படாதீங்க அவளை நல்லாவே பாத்துக்குவேன் ..."

என்றவனிடம் பலமுறை ராதாவின் உடல்நிலையை பற்றி அறிவுறுத்தி விட்டு அழைப்பைத் துண்டித்தவரின் முன் ஏற்பாட்டை கண்டு மனதிற்குள் மெச்சினான் மைந்தன்.

பிறகு வழக்கம் போல் ஜாகிங் சென்று திரும்பியவனை கண்டதும் சின்னம்மை,

" நீன்னலோட பர்தாவ ஒரு ராஜாவினைபோலியான்...(உங்கள் கணவர் பார்ப்பதற்கு ராஜாவைப் போல் இருக்கிறார்) " என கிருஷ்ணாவை பார்த்து ராதாவிடம் கூறிவிட்டு சமையல் அறைக்கு செல்ல, அவர் கூறிய வாக்கியத்தின் முழு அர்த்தத்தை உணர்ந்தவள்

ஏற்கனவே கோபியர் சூழாத கண்ணன் தான்.... இதுல
இவங்க சொன்னதோட அர்த்தம் மட்டும் தெரிஞ்சது இவரை கைலயே பிடிக்க முடியாது .... என நினைத்து மௌனமாக தலையசைத்தவளின் கண்களில் தெரிந்த திருட்டுத்தனத்தை கண்டவன்,

" சின்னம்மா என்ன சொன்னாங்க"

ம்ம்ம்ம்..... தமிழே தகராறு ..இதுல மலையாளம் புரிஞ்சிட போகுது... என நினைத்து சுதாரித்தவள்

" உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்காம்.." என உதட்டை கடித்து தலைகுனிந்தபடி பொய்யுரைக்க,

அவள் அருகில் சென்று, அவள் கண்ணோடு கண் நோக்கியவன்,

" அப்படி சொல்லலையே....." என இழுக்க,

"வேற என்ன சொன்னாங்கன்னு , நீங்களே சொல்லுங்க.... "

"நான் ராஜா மாதிரி இருக்கேன்னு தானே சொன்னாங்க ..." என இரண்டு புருவத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக உயர்த்தி, கண்களால் கேட்டவனிடம்,

தான் செய்த திருட்டுத்தனத்தை கண்டு பிடித்து விட்டானே என, வெட்கி தலைகுனிந்து சிரித்தவளை, வென்று விட்ட மகிழ்ச்சியில் "ஆஹாஹா " என பெருங்குரலெடுத்து அவன் சிரிக்க,

சிரிப்பு சத்தத்தை கேட்டு, சமையலறையிலிருந்து வெளிப்பட்ட சின்னம்மை,

" நின்னலுடய ப்ரணய விவாஹமான( உங்களுடையது காதல் திருமணம் இல்லையா ) " , "அதுகுண்டானு நின்னல் ரெண்டு பேரும் பரஸ்பரம் ஸ்நேஹிக்குன்னு".. (ஆதலால்தான் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறீர்கள்) எனக்கூறியதும் உண்மையாகவே அர்த்தம் தெரியாமல் அவன் அவளை பார்க்க,

உதட்டை கடித்து, இரு புருவத்தை உயர்த்தி,

"ஐயோ மாட்டிகிட்டேனே.. "என்பது போல் அவள் தலைகுனிய, அவன் சின்னம்மையை பார்க்க, அவர் நாணி,கோணியபடி

" லவ் விவாஹமா நின்னலோடது" என்றார்.

" அப்படின்னு உங்ககிட்ட யார் சொன்னது.... " என கண்களில் ஆச்சரியத்துடன் கேட்டவனிடம், ராதா, திருமண புகைப்படத்தை காட்டி கூறியதாக அவர் சைகையால் தெரிவிக்க,

இது எப்போ.. என்பது போல் மிகுந்த ஆர்வத்துடன் காதலை கண்களில் தேக்கி அவன் ராதாவை ஆழ்ந்து நோக்க, அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.

மேலும் சின்னம்மை, நீங்கள் வந்த பின்பு தான் ராதா நன்றாக உறங்குகிறாள், இல்லையேல் இரவு முழுவதும் குழல் விளக்கை அணைக்கவே மாட்டாள் என பாதி மலையாளத்திலும் சைகையிலும் தெரிவிக்க,

அதை முழுவதும் புரிந்து கொண்டவன்,

"ஏன் ராதா, நைட்டு ஃபுல்லா டியூப் லைட்ட போட்டுட்டு எப்படி தூங்கின .." என சித்தார்த்தை மனதில் எண்ணி கடுமையான முகத்துடன் கேட்டவனிடம்

" பயம்மா இருந்தது அதனால தான்...டியூப் லைட்டை அணைக்கல... "

"ஏன் யாராவது வீட்டைச்சுத்தி நிக்கற மாதிரி , நடக்கிற மாதிரி ஏதாவது ஃபீல் பண்ணியா ..." என்றவன் தீவிர விசாரணையில் இறங்க

"அப்படியெல்லாம் எதுவுமில்லை ... வீட்டுக்குள்ளேயே ஏதோ பேய் நிக்கற மாதிரி ஒரு ஃபீல் அதனால தான் ...." என்றாள் அவசரமாக.

"பேய்.... " எனக்கூறி யோசித்தவனை பார்த்து, அவனுக்கு புரியவில்லை போலும் என நினைத்து ஆங்கிலத்தில் கோஸ்ட் (Ghost) என தீவிர முகத்துடன் கூறியவளின் முக பாவனையை பார்த்து சிரிக்க ஆரம்பித்தவன்
விடாமல் விழுந்து விழுந்து சிரிக்க...

ஒரு நிமிடம் சிரிப்பை நிறுத்தினாலும் மீண்டும் அவள் முகத்தை பார்த்து இடைவிடாது அவன் சிரிப்பை தொடர ....
இதற்கிடையில் சின்னம்மை அவர்களிடமிருந்து சைகை காட்டியபடி விடைபெற அப்போது சற்று அடங்கியவன்,

" எனக்கு தெரிஞ்சு, இங்க ஒரே ஒரு பேய் தான் இருக்கு, அதுவும் மோகினி பேய்" எனக் கூறிய படி மீண்டும்
அவளை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

இம்முறை அவளுக்கு கோபம் கொப்பளிக்க, அருகிலிருந்த புத்தகத்தை கொண்டு அவனை தாக்க..
அவன் சிரித்தபடியே அடியை வாங்கிக் கொண்டிருந்தான்.

அடித்து அடித்து கை வலித்தவள் அழ ஆரம்பித்ததும் தான் சிரிப்பை நிறுத்தி விட்டு

" பேயை பார்த்திருக்கியா " இல்லை என்பது போல் அவள் தலையசைக்க,

"பின்ன எப்படி நம்பற..."

"கடவுளைக் கூட தான் பார்த்ததில்ல... ஆனா நம்பறோம் இல்ல..." என எதிர் கேள்வி கேட்டவளின் குழந்தை தனத்தில் கட்டுண்டவன்

" ம்ம் ..சரியான கேள்வி தான்..அதிகம் யோசிக்கிற..." என அவள் தலை மேல் கை வைக்க நினைத்து, உயர்த்திய கையை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்திக் கொண்டவனின் செய்கை அவளுக்கு மனவலியை ஏற்படுத்தினாலும், இருவருக்கும் இடையே இருந்த கண்ணாடி திரை உடைந்து முகம் கொடுத்து பேசும் அளவிற்கு, உறவு உண்டானதை எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

என்னதான் அவளிடம் அவன் சிரித்து மகிழ்ந்தாலும், ஒரு கர்ப்பிணிப்பெண் தனியாக, இந்த வீட்டில் பயத்தின் காரணமாக உறக்கமின்றி தவித்திருக்கிறாள் என நினைக்கும் போது துடித்து தான் போனான்.

எப்பொழுதும் போல் தன்னையே நொந்து கொண்டவன், தான் சரியாக இருந்திருந்தால், இந்நேரம் பூனாவில் அவள் நிம்மதியாக இருந்திருப்பாள் என நினைத்து மீண்டும் வருந்தினான்.

ராதாவிற்கு வாரம் இரண்டு நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு சென்றால் போதும் என்ற நிலை ஏற்பட,மற்ற நேரங்களில் பொக்கிஷத்தை பூதம் காப்பது போல், அவளை அருமையாக பராமரித்து வந்தான்.

இருவருக்கிடையிலான நிலைமை சுமூக நிலையில் இருந்தாலும், தலையணையை கொண்டு சுவர் எழுப்புவதை மட்டும், அவன் நிறுத்தவில்லை.

தனது மூன்று மாத விடுமுறையின், ஒவ்வொரு நிமிடத்தையும் அவளுடன் ரசனையோடு கழிக்க பழகிக் கொண்டான்.

இதற்கிடையில் அவள் தந்தை மற்றும் சுதாவை பற்றி கேட்டறிந்தவன், ஒவ்வொரு முறையும் அவள் கைப்பேசியில் வருந்திய படி சுதாவிடம் தீபாவளிக்கு ஊருக்கு வந்து விடுவதாக பொய்யுரைப்பதை உணர்ந்து,

" குழந்தை பிறந்ததும், குழந்தையோட நாம எல்லாரும் உங்க அப்பாவை போய் பார்க்கலாம் ...."
என வாக்களிக்கும் போதே அதற்கு எதிர்மறையாக தான் நடக்கப் போகிறதென தெரியாமல், ராதாவும் பூரித்துப் போனாள்.

மனம் தடுமாற்றம் ஏற்படும் பல தருணங்களில் கூட தாயுமானவனாகவே
கர்ம சிரத்தையோடு அவளுக்குப் பணிவிடை செய்தான்.

அவன் பார்வையில் ஒரு கணம் கூட தாபம், ஏக்கம், மோகம் போன்றவை வெளிப்படாமல், பாசம், கரிசனம், தோழமை, தாய்மை போன்ற உணர்வுகளே மேலெழுந்திருந்ததை அவளால் உணர முடிந்தது.

ஆனால் அவனுக்கு தினமும் அவளை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி போனது....

சில நேரம் நன்றாக சாப்பிடுபவள் பலநேரம் உண்ண மறுப்பாள் ...

" இன்னிக்கு சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டலா இருக்கு... வாந்தி வர்ற மாதிரி இருக்கு ..." என முரண்டு பிடிப்பவளிடம்,

" முதல்ல சாப்பிடு ...அப்புறம் வாந்தி வந்தா எடு.... சுத்தம் பண்ண தான் நான் இருக்கேனே.. ...”

எனக் கூறிக்கொண்டே குழந்தைக்கு ஊட்டுவது போல் ஏதேதோ கதை பேசி, ஒவ்வொரு உருண்டையையும் அவள் வாய்க்குள் திணிப்பான்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம், செஸ் கேரம் போர்டு, சீட்டு கட்டு என அனைத்து விளையாட்டையும் அவளுடன் விளையாடி மகிழ்ந்தான் .

ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தாற் போல் அனைத்து விளையாட்டிலும் அவளே வெற்றி பெறுவாள்.

அவள் வெற்றிபெற்று கன்னம் குழி விழ சிரித்து மகிழும் அழகை ரசித்து மகிழ்ந்து போவான்.

குழந்தைகளுடன் விளையாடும் போது எப்படி ஒரு தந்தை தோற்றுப் போவதையே குறிக்கோளாக வைத்திருப்பாரோ, அதே போல் தன் மனைவி என்னும் அந்த வளர்ந்த குழந்தையுடன் விளையாடி தோற்றுப்போய் மகிழ்ந்தான் அவளை காதலிக்கும் அந்த அன்பு கணவன்.

நாட்கள் வேகமாக நகர நகர , கிருஷ்ணாவின் மீதான நம்பிக்கை ஆலமரத்தின் விழுது போல், ராதாவின் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது.

எந்நிலையிலும் தன்னை விட்டு பிரிய மாட்டான் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக வேரூன்றிய பின் எதிர்காலத்தைப் பற்றி, அவள் பயந்தது அனைத்தும் கனவு போல் தோன்ற ஆரம்பிக்க, புதிதாய் தழைத்திருந்த
தோழமையை காப்பாற்ற பழங்கதை பேசுவதை இருவரும் தவித்தனர் என்றே சொல்லலாம்.

அவள் அவனை காணாமலே, காதலிக்க ஆரம்பித்தாள் என்பதையும் அவளின் பேச்சு முதன்முறையாக அவன் மனதினை தீண்டிய தருணத்தில், முகம் பார்க்க எண்ணி, திரும்பிய நொடியில் விதையாய் விழுந்தவள் அதன் பின் அவன் நினைவு முழுவதும் விருட்சமாய் வியாபித்தாள் என்பதையும் இருவரும் பகிர்ந்து கொள்ளாமலே காலம் அழகாக கடந்தது.

இந்நிலையில் ஒரு நாள் பௌர்ணமி இரவென்று, வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கும் நீரோடையை ரசிக்க நினைத்து, ராதாவை அழைத்துச்சென்றான் கிருஷ்ணா.

ஒரு குறிப்பிட்ட தூரம் கடந்ததும் அவள் நகர மறுத்து, அங்கேயே நிற்க,

" ஏன் ராதா, அங்கேயே நின்னுட்ட...? "

அதற்கு அவள் பாம்பைப் போல் இடது கையை வளைத்து, அதனை இடப்புறம் வலப்புறமாக ஆட்டி காட்ட, என்னவென்று புரியாமல்,

" என்ன சொல்ற புரியலை...." என மீண்டும் கேட்டான் .

அதற்கு அவள் " உஸ் உஸ்" எனக் கூற, மீண்டும் விளங்காமல் அவளையே உற்றுப் பார்த்தவன், பிறகு புரிந்து கொண்டு

"பாம்பை சொல்றியா ..."

" ஐயையோ, பேரை சொல்லாதீங்க... வந்துடப்போகுது , அதுவும் இராத்திரில அதை அப்படி சொன்னா உடனே வந்துடுமாம்.... " என பதட்டமாக கூறயவளின் குழந்தை தனத்தை ரசித்தபடி

"பாம்புக்கு தமிழ் தெரியுமா".. என கண்ணில் குறும்பு மின்ன கேட்டவனிடம்

"அதுக்கும் உங்களைப் மாதிரி எல்லா மொழியும் தெரியுமாம்... " என்றவளை பார்த்து சிரிக்க ஆரம்பித்தவன்,

" அப்படின்னு, உனக்கு யார் சொன்னா...”

" என் அம்மா" என்றாள்.

அதனைக் கேட்டு மீண்டும் சிரித்தவன், சிரிப்பினூடே ,

" உங்க அம்மா என்ன சர்பென்டாலிஜிஸ்ட்டா ..."

"அப்படின்னா "

" பாம்பைப் பத்தி ரிசர்ச் பண்றவங்க ... " என கூறியபடி பொங்கி எழுந்த சிரிப்பை அவன் மறைக்க முயல,

அவன் குறும்புத்தனத்தை அறிந்து, அருகிலிருந்த செடியிலிருந்து செம்பருத்திப் பூவை பறித்து அவனை நோக்கி அவள் வீச, தலையை பக்கவாட்டில் சாய்த்து பூவை சரியாக கேட்ச் செய்வதனின் கைபேசி அப்போது ஒலிக்க,

அழைத்தது ராஜேஸ்வரி என தெரிந்ததும் அவன் தொடர்பைத் துண்டிக்க, அதனை அறிந்து கொண்டவள்

" உங்க அம்மாவுக்கு எல்லாம் தெரியுமா ..."

அவள் கண்களைப் உற்று பார்த்து,

" உன் அத்தைக்கு எல்லாம் தெரியும்... என்றான் .

அவன் வரவிற்கு பிறகு, இருமுறை அவளுடன் ராஜேஸ்வரி பேசி இருந்தாலும் ஒரு முறைகூட, அவள் தாய்மையடைந்த செய்தியை அறிந்தவர் போல் காட்டிக் கொள்ளவில்லை, என்பதை நினைத்து அவளுக்கு வருத்தம் ஏற்பட,

"அத்தைக்கு என் மேல கோவமா ..." என்றவளை உற்றுப்பார்த்து,

" இருக்காதா பின்ன" என தாயை விட்டுக்கொடுக்காத தனயனாக பேச,

"உங்களுக்கும் என் மேல கோவம் தானே..." என்றதும் , அவள் எழுதிய இரண்டு கடிதங்களே அவன் கண்முன் விரிய,

அவள் அல்ல அவன் தான் குற்றவாளி என உணர்ந்தவன் அல்லவா ....

"இல்லை கண்ணம்மா, உன் மேல கோபப்படுவேனா...?
நீ எதை செஞ்சாலும், அதுக்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கும் ..."

என அன்று வரை, அவன் மனதுக்குள் மட்டும் 'கண்ணம்மா' என்றவளை அழைத்துக் கொண்டிருந்தவன் , முதல் முறையாக உணர்ச்சிவசப்பட்டு , அவளிடமே அப்படி பேசிவிட,

அவன் தன் மேல் வைத்திருக்கும் காதலையும் நம்பிக்கையையும் அவள் உணர்ந்த நொடி, அந்தப் பௌர்ணமி வெளிச்சத்தில் , குளத்தங்கரையில் சில்லென்று வீசிய தென்றல் காற்றுடன் சேர்ந்து அவளும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அச்செயலை சற்றும் எதிர்பார்க்காதவன், தன்னிலை மறந்து தடுமாறித்தான் போனான்.

மூச்சு முட்டும் நேரத்தில் கூட
உன் மீது கொண்ட காதலால்
முத்தமிட தோன்றவில்லையடி.....

என அவன் மனம் கவி பாடினாலும்

அவளின் மென்மையான சருமம், தாய்மையினால் இளந்தளிர் போல் மேலும் மிருதுவாகி அவனை தாக்க , அவள் பால்வண்ண மேனியில் ஒரு வித பாலாடை வாசனை வீசி அவனை கிறங்கடிக்க,

இவ்வளவு நாட்களாக கட்டிக்காத்த பிரம்மச்சரியம் காற்றில் பறந்து விடுமோ என்றஞ்சியவன் , சற்று திணறி பிறகு சுதாரிக்க முயலும் போது
மருத்துவர் கூறிய அறிவுரைகள், அவன் மனக்கண் முன் விரிய, அவனுடைய தாபமெல்லாம் தண்ணீரில் கரைத்த உப்பாய் காணாமல் போனது.

இரவு படுக்கையில் வழக்கம் போல் தலையணை சுவரினை, அவன் எழுப்பி கொண்டிருக்க, அதை பார்த்தவள் ஏதும் பேசாமல், அனைத்து தலையணைகளையும் காலுக்கடியில் தள்ளிவிட்டதோடு, அவனது இடது மார்பின் மேல் தலை வைத்து ஒருக்களித்துப் படுத்து, அவனை அணைத்தபடி , அவன் இதயத்துடிப்பைக் கேட்டுக்கொண்டே இரண்டே நிமிடத்தில் கண்ணயர்ந்து போனாள்.

அவன் கேரளா வந்த தினத்தன்று உணர்ச்சிவசப்பட்டு அணைத்துக் கொண்டவள், அதன் பிறகு இன்று தான் அவன் மீது கொண்ட நம்பிக்கை மற்றும் காதலால் அணைத்துக் கொண்டாள் என்பதை உணரும் போது

Mission impossible to Mission accomplished Commander Krishna...

என்றெண்ணி தன்னுள்ளே மகிழ்ந்து போனான்.

கண்ணனைத் தேடி ....
 
Back
Top