Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 17

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
550
அத்தியாயம் 17

கிருஷ்ணாவை விமான நிலையத்தில் வழியனுப்பும் பயணத்திற்கெல்லாம், முருகன் இல்லாமல் ராம் காரை ஓட்டிச் செல்வது வழக்கம்.


அவனை வழியனுப்பியதும் ராஜேஸ்வரியிடம் விவரத்தைக் கூறி ஒரு மணி நேரமாவது அவருடன் அளவளாவி விட்டு செல்வது பல காலமாக நடக்கும் ஒரு செயல்.

ராம் காரை ஓட்டிக் கொண்டிருந்தாலும் கிருஷ்ணாவின் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், அவனே பேசட்டும் என்றெண்ணி கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

கிருஷ்ணா அழுத்தக்காரன் , அதிகம் பேசாதவன், உணர்ச்சிவசப்படாதவன்,பட்டாலும் வெளியில் காண்பித்துக் கொள்ளாதவன் என்றெல்லாம் எண்ணியிருந்தவன், அவன் இரு கைகளாலும் தலையை பற்றிக்கொண்டு குனிந்திருப்பதை பார்த்து,பதறிப்போய் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு

" கிருஷ்ணா, என்னாச்சுடா உனக்கு ..."

சற்று நேரம் மௌனம் காத்தவன் பிறகு தொண்டையை செருமியபடி ,

" 18 வயசுல NDA(National Defence Academy)யில் சேர்ந்து எல்லை பாதுகாப்பு படை விமான பிரிவுல பணியாற்ற தொடங்கும் போதே தெரியும் எனக்கான சவப்பெட்டி என் பேர்ல எப்பொழுதுமே தயாரா இருக்கும்னு...

நான் அதைப்பத்தி என்னிக்குமே கவலைப்பட்டதில்ல ... என் தாய் நாட்டை காக்கும் போது ஏற்படற பெருமை , மனநிறைவு , அது கொடுத்த உற்சாகத்தால மேன்மேலும் உழைச்சு நல்ல பேர் எடுத்து இன்னிக்கு இந்த பதவில இருக்கேன்....

ஒரே பையனா பொறந்து, ரிச் பேக்ரவுண்ட்ல வளர்ந்த எனக்கு , கிட்டத்தட்ட என்னோட எல்லா ஆசையும் நிறைவேறி இருக்கு, சுவாதியோட நடக்கயிருந்த என் கல்யாணத்தை தவற....

இந்த நிமிஷம் வரை நான் எந்த பொறுப்பையும் தூக்கி சுமந்ததே இல்ல...இருந்தாலும் என் அப்பா அம்மாக்கு நல்ல மகனா, என் தாய் நாட்டுக்கு நல்ல வீரனா, உனக்கு நல்ல நண்பனா இருக்க தெரிஞ்ச எனக்கு ராதாவுக்கு மட்டும் நல்ல கணவனா இருக்க தெரியாம போயிடுச்சு டா ...

இப்ப கிளம்பும் போது கூட, அவ முகத்தை பார்த்தா, எங்க நான் உடைஞ்சிடுவேனோன்னு பயந்து கம்பீரங்கிற முகமூடியை அணிஞ்சு கிட்டு, கோழை மாதிரி கார்ல ஏறி வந்துட்டேன்... கடமைக்கும் காதலுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்க நான் தயாரா இல்ல டா.... நான் அவளை திரும்பிக்கூட பார்க்கலன்னு நினைச்சு துடிச்சு போயிருப்பா... "


சுவாதியின் இறப்பிற்குப் பின் கூட, ஏதோ பறி கொடுத்தவன் போல் சோகமாக இருந்தானே தவிர ,இப்படி உணர்ச்சி பிழம்பாய் மனதிலிருப்பதை கொட்டியதில்லை.

ஆதலால் ராம், அவன் பேசும் பொழுது குறுக்கிடாமல், மனதில் இருப்பதை கொட்டட்டும் என அமைதி காக்க, ஆனால் பேசிக்கொண்டிருக்கும் போதே சைகையின் மூலம், நேரமின்மை காரணமாக விமான நிலையத்திற்கு வண்டியை செலுத்த சொன்னான் .

" ராதா செய்த ஒரே பாவம் என்னை கல்யாணம் செஞ்சுகிட்டது தான்.....இந்த சின்ன வயசுல, தங்கையை படிக்க வச்சுக்கிட்டு, அவங்க அப்பாவையும் பார்த்துகிட்டு, பல பிரச்சினையோட போராடிகிட்டு இருக்கிறவளை, நான் கல்யாணம் செஞ்சுகிட்டு, அவளை புரிஞ்சுக்காம, அதிக கஷ்டங்களை கொடுத்து அவ வாழ்க்கையை நிம்மதியே இல்லாம ஆக்கிட்டேன் டா ...

அந்த குழந்தைத்தனமான முகத்துக்கு பின்னாடி இருக்கிற நேர்மை ,கம்பீரம் ,
தன்மானம், பொறுமையை நெனச்சா ரொம்ப பிரமிப்பா இருக்கு ... நான் அவளை புரிஞ்சுக்காம, டிவோர்ஸ் கேட்டது தான் நான் செஞ்ச முதல் தப்பு….

அவளோட இருந்த இந்த ஒரு மாசத்துல நான் அவளை புரிஞ்சுகிட்ட அளவுக்கு அவ என்னை புரிஞ்சுகிட்டாளான்னு தெரியல...

ஆனா ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியல, நான் டிவோர்ஸ் கேட்டதும், பொறுமையா அதுக்கும் சம்மதம் சொன்னா....
ஆனா ஒவ்வொரு முறையும் நான் அவளை நெருங்கும் போதும், அவ கண்ணுல ஜீவநதியா காதல் பொங்கும்... அதுதான் ஏன்னு இப்ப வரைக்கும் தெரியல….

நேத்து தான் ரெண்டு பேரும் கணவன் மனைவியா எங்க வாழ்க்கையை தொடங்கினோம்....அவளோட படுக்கையை பகிர்ந்துகிட்ட எனக்கு, என் மனசை பகிர்ந்துக்க முடியாம போனது தான் விதி.

அவளை குழந்தையா நடத்துறதா, இல்ல குமரியா நாடறதான்னு பல நேரம் புரியாம தவிச்சிருக்கேன் ...

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், அவளோடு சேர்ந்து வாழனுங்கிற ஆசை மனசு முழுக்க இருக்கு .. ஆனா இப்ப இருக்கிற சூழ்நிலையில எல்லைல பதற்றம் அதிகமா இருக்கிறதால நான் மறுபடியும் வீடு திரும்புவேங்கிற நம்பிக்கையே ரொம்ப கம்மியா இருக்கு ...

போர் வர சான்ஸ் அதிகமாயிருக்கு... அப்படி எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா ராதாவை காப்பாத்த வேண்டியது உன்னோட பொறுப்பு.."

இதனை கூறுகையில் அவன் குரல் உடைந்து, உடல் குலுங்க, ராம் அவன் கைகளை பற்ற, பிறகு தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டவன் ,

" உன்கிட்ட அவளை பத்தி பேசினா அளவுக்குக்கூட அவகிட்ட பேசினது இல்ல டா ...

என் அம்மா ரொம்ப நல்லவங்க, ஆனா நடந்த பல விஷயம் அவங்களுக்கு தெரியாது ..

எல்லாம் தெரிஞ்ச உன்னால என்னையும் ராதாவையும் புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன்... நான் போற இடத்துல போன் இருக்கிறதுக்கு சான்ஸஸ் ரொம்ப கம்மி... என்னோட மொபைலுக்கும் சிக்னல் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்…. அதனால எப்ப என்னால கான்டாக்ட் பண்ணி பேச முடியுமா அப்ப நிச்சயமா அம்மாவோடயும் ராதாவோடயும் பேசறேன்.. அவங்க கிட்ட இப்ப நீ எதையும் சொல்லாத ..."
என கிருஷ்ணா கூறிக் கொண்டிருக்கும் பொழுதே கார் விமான நிலையத்தை அடைய,

இன்னும் 45 நிமிடங்களே உள்ள நிலையில், பாதுகாப்பு சோதனைக்காக
அவன் தன் பெட்டிகளுடன் உள்ளே செல்லும் முன்பாக

" கிளம்பறேன் டா ..." என்றவனை அணைத்துக் கொண்டு

" கவலப்படாத கிருஷ்ணா, நீயும் ராதாவும் நூறு வருஷம் சந்தோஷமா வாழத்தான் போறீங்க ..." என கண் கலங்கினான் ராம்.

" எனக்கு வாழ்க்கையில எல்லாமே நல்லா அமைஞ்சிருக்குடா... என் மேல பாசத்தை பொழியற என் அம்மா, நீ , ராதா, மகி அக்கான்னு ... ஆனா என்னால தான் யாரோடையும் சேர்ந்து வாழ முடியாம போகுது..."
என வருந்தியவன், விமான அறிவிப்பைக் கேட்டதும், தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு குழுமியிருந்த கூட்டத்திற்குள் நடந்து புள்ளியாய் மறைந்தான்.

ராஜேஸ்வரி தன்னுடைய அறையில் ஓய்வெடுத்து கொண்டிருக்க, எதையும் சிந்திக்கும் மனநிலையில் இல்லாமல், மெய்மறந்து கூடத்தில் அமர்ந்திருந்த ராதாவை பார்த்த பர்வதம்

" நல்ல ராசிம்மா உன்னோடது... கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல, தாலிக்கொடி வாங்கி ஒரு மணி நேரம் கூட ஆகல, அதுக்குள்ள புருஷனை போர்முனைக்கு அனுப்பி வச்சுட்டியே ..."

என வசை பாட ஆரம்பிக்க, ஏற்கனவே வேரறுந்த மரம் போல் ஆதாரமின்றி இருந்தவளுக்கு அவரின் பேச்சு மேலும் இடி விழுந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

பர்வதம் அவளை கலங்க வைப்பதற்காக கூறிய வார்த்தைகள் அனைத்தும், அவளுக்கு உண்மையென சுட ,பதிலேதும் கூறாமல் கண் கலங்கி இருந்தவளை பார்ப்பதற்குப் மகிக்கு பரிதாபமாகப் இருந்தது.

" ராதா அவசரத்துல ஆரம்பிச்ச உன் வாழ்க்கை அவசரத்துல முடிஞ்சிட கூடாதுன்னு கடவுள வேண்டிக்கோ ..." என பர்வதம் கூறிய மாத்திரத்தில் , கோபம் கொண்ட மகி

" அம்மா நீங்க வயசுல மூத்தவங்க.... அனுபவசாலி, இந்த மாதிரி தப்பா பேசுறத நிறுத்திட்டு அவளுக்கு ஆறுதல் சொல்லுங்க..." என காட்டமாக தெரிவிக்க, பதிலேதும் கூறாமல் தன் அறைக்கு சென்று விட்டார் பர்வதம் .

இங்கு அமர்ந்திருந்தால் மீண்டும் பர்வதம் ஏதாவது பேசக்கூடும் என்றெண்ணியவள் தன் அறையை நோக்கி செல்ல எத்தனிக்கும்போது, வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ,வாசலைப் எட்டி பார்க்க,அவளை பார்த்து புன்னகைத்தபடியே ராம் உள்ளே நுழைந்தான்.

அவன் பார்வையில் தெரிந்த மாற்றம் ராதாவிற்கு ஏதோ உணர்த்த ,

"வாங்க ராமண்ணா" ...

"ராதா.... அத்தை தூங்கிட்டாங்களா "

" இல்லைன்னா, ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க... வாங்க பாக்கலாம்..."
அவனை அழைத்துக்கொண்டு ராஜேஸ்வரியின் அறைக்குள் நுழைந்தாள்.


கிருஷ்ணாவின் பயண விபரங்கள் மற்றும் ராஜேஸ்வரியின் உடல்நலத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தவன் , தன்னுடைய 4 மாத கால சென்னை பயணத்தைப் பற்றியும் கூறினான்.

அரசு தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக, நிலங்களை ஆய்வு செய்து கையகப்படுத்தி அடிப்படை வேலைகளை தொடங்குவதற்காக சென்னையில் தங்க வேண்டி இருப்பதால் இந்த பயணம் என்று தெரிவித்தவன், கிளம்பும் போது ராதாவிடம் ஏதோ கூற எத்தனித்து பிறகு அதை மாற்றி

" சீக்கிரமே கிருஷ்ணா திரும்பி வந்துடுவான் ... வருத்தப்படாத.. அத்தையை நல்லா பார்த்துக்கோ ராதா... " என்று ஆறுதலாக கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டான்.

இரவு உணவே வேண்டாமென்று கூறியவள் , மகியின் வற்புறுத்தலால் பால் மட்டும் அருந்தி விட்டு தன் அறைக்குள் நுழைய, எங்கும் தன்னவனின் பிம்பம் தெரிய ,தலை சுற்றிப் போய் கட்டிலில் சரிந்தாள்.

பிறகு கட்டில் அடியில் கிடந்த, அன்று காலை அவன் அணிந்திருந்த நீல நிற மேல் சட்டையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டவள், இரவின் ஒளியில் கண்ணீர் துளிகள் தலையணையை நனைத்தவாறு பல்வேறு நிகழ்வுகளால் அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் உறங்கிப்போனாள்.

அந்த வார வெள்ளிக்கிழமையில், ராதாவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் ராஜேஸ்வரி, மகி, ராமின் தாய் காயத்ரி மற்றும் ராமின் மனைவி திவ்யா புடைசூழ சிறப்பாக நடந்தேறியது.

சென்னை பயணத்தால் ராமும் அவனுடைய தந்தையும் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் காயத்ரி முன்னின்று அனைத்து சடங்குகளையும் நிறைவாக செய்து முடித்தார்.

ராதாவின் மனம் முழுவதும் பர்வதம் கூறிச்சென்ற வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருக்க,தன் மணாளனுக்கு எந்தத் தீங்கும் நடந்துவிடக்கூடாது அவன் தீர்க்க ஆயுளோடு வாழ வேண்டும் என கடவுளை மனமார வேண்டிய படி புதிய தாலியை கழுத்தினில் அணிந்து கொண்டாள்.


கிருஷ்ணாவின் பயணத்திற்கு பிறகு, பணிச்சுமையை காரணம் காட்டி, காலையில் சீக்கிரமாக அலுவலகத்திற்கு செல்வதும் இரவில் தாமதமாக வீடு திரும்புவதையும் வழக்கமாக்கிக் கொண்டாள்.

வீட்டிலிருக்கும் நேரம் குறைந்ததால் கிருஷ்ணாவை பற்றிய நினைவுகளிலிருந்து தப்பிப்பதோடு அலுவலக பணியும் சரியான நேரத்தில் முடிக்கும் சூழ்நிலை ஏற்பட, மிகுந்த களைப்பினால் இரவில் உறக்கமும் எளிதாக அவளைப் ஆட்கொண்டது .

அவன் பயணமாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்த நிலையில், ஓரளவு உடம்பு தேறிய ராஜேஸ்வரி, தனிமையைப் போக்க ராதாவுடன் அலுவலகம் செல்லலானார்.

அவரின் வருகை அவளுக்கு சிறிது வேலைப்பளுவை குறைந்ததாலும், அவர் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலான வேலைகளை தானே செய்து முடித்தாள்.

இந்நிலையில் அவர் அவளை அழைத்து,

" ராதா, உன்னை இந்த கம்பெனில பார்ட்னர் ஆகலாம்னு இருக்கேன் ... கிருஷ்ணா ஆர்மிடு போர்ஸ்ல இருக்கிறதால , அவன் பேர்ல இப்ப வரைக்கும் எந்த ஷேர்ஸ்ம் கிடையாது ... இந்த கம்பெனி மட்டும் இல்ல என்னோட எல்லா ஆர்கனைசேஷன்லயும் உன்னை பார்ட்னர் ஆகணும்னு முடிவெடுத்து இருக்கேன்.... ஏன்னா நீதான் என்னோட அடுத்த வாரிசு... " என பெருமை பொங்க கூறியவரிடம்

"மேம்,(அலுவலகத்தில் மட்டும் ராஜேஸ்வரியை இப்படி அழைப்பாள் )
நான் நம்ப கம்பெனியிலிருந்து வாங்கிய கடன் இன்னும் 9 மாசத்துல முடிஞ்சிடும், அப்புறம் இதை பத்தி யோசிக்கலாம் .... " என அவள் தட்டிக்கழிக்க,

" நோ ராதா, நீ இந்த கம்பெனியோட பார்ட்னர் ஆயிட்டேன்னா, நீ வாங்கின கடன் எல்லாம் காணாமப் போயிடும் ..." என புன்னகைத்தவாறே அவர் தெரிவிக்க,

" தயவு செஞ்சு என்னை இந்த விஷயத்துல வற்புறுத்தாதீங்க மேம்...
நான் வாங்கிய கடனை அடைச்சிட்டு தான், இந்த கம்பெனியோட பார்ட்னர் ஆக விரும்பறேன் ...ஐ அம் சாரி, என்னால உங்க ஆசையை இப்போதைக்கு நிறைவேத்த முடியாது..." என்றவளை பெருமை பொங்கப் பார்த்தவர்,

என் மகனைப் போல பெருந்தன்மையான பெண்ணை தான் நான் மருமகளாக தேர்ந்தெடுத்திருக்கேன், இருவரும் நீடூழி வாழணும், கடவுளே ....என மனதார ஆண்டவனை பிரார்த்தித்துக் கொண்டார் ராஜேஸ்வரி.

இரவு உணவிற்குப் பின் அறைக்கு வந்தவளுக்கு , மனம் விட்டு யோசிக்க நிறைய விஷயங்கள் இருந்தன.

ராஜேஸ்வரி கூறியது போல் நான் பங்குதாரராக சம்மதம் தெரிவித்தால் ,
நான் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் அவரை மணந்து கொண்டேன் என கிருஷ்ணா கூறியது சரி என்றாகி விடும்.

என்னுடைய இந்த வாழ்க்கையானது நிலையில்லை, இன்னும் ஆறு மாத காலத்திற்கு பிறகு அவர் திரும்பி வந்தபின் இந்த வீட்டில் நான் நிலைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு.

என்னுடைய காதலை உங்கள் மகனுக்கு புரிய வைக்க முடியாவிட்டாலும், என்னைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் தான் தங்களின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்தேன்... என ராஜேஸ்வரியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரினாள் .

காலையில் கண் விழிக்கும் போதே ராதாவின் தலை 'விண்' 'விண்' என்று தெறிக்க ஆரம்பிக்க, படுக்கையைவிட்டு எழுந்து கொள்ள முடியாத அளவுக்கு தலைசுற்றல், உடல் சோர்வு, களைப்பு என வாட்டி எடுக்க, வேறு வழி இல்லாமல் சுவற்றை பிடித்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தவள், பற்பசையை திறக்கும் போதே அதன் நெடி தாளாமல் வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது.

நேத்து ராத்திரி அதிகமாவோ இல்ல புதுசாவோ எந்த ஒரு புட் ஐட்டத்தையும் சாப்பிடலையே... ஏன் வயித்தை குமட்டிக்கிட்டு இப்படி வாந்தி வருது...

எனத் தன்னையே கேட்டுக்கொண்டு, குளித்து முடித்து உடை மாற்றியவளுக்கு, மீண்டும் தலைசுற்ற, வேறுவழியில்லாமல் படுக்கையில் விழுந்தவள், ராஜேஸ்வரியை உள் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, மதிய உணவிற்குப் பின் அலுவலகம் வருவதாக தெரிவித்தாள்.

ஏனென்று கேட்டவரியிடம், உடல் நலம் சரியில்லை என்று சொன்னால் உடனே அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அவரே , அனைத்து வேலைகளையும் பார்த்து தன் உடல் நலத்தை கெடுத்துக் கொள்வார் என்பதால் உண்மையை கூறாமல் கோவிலுக்கு சென்று வருவதாக பொய்யுரைத்தவள் கிருஷ்ணா அழைத்துச் சென்ற அதே மருத்துவரிடம் சென்றாள்.

பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின், அவள் முறை வர, உள்ளே நுழைந்தவளை , பார்த்ததும் பெயர் நினைவுக்கு வரவில்லை என்றாலும், அன்று நடந்த நிகழ்வு,மருத்துவரின் மனதில் படக்காட்சியாக விரிய, ஒருவித புன்னகையோடு

அவளது பெயர் மற்றும் மருத்துவரை பார்க்க வந்ததற்கான விவரங்களை கேட்டவர், அவள் கூறிய அறிகுறிகளை கேட்டு கண்களில் குறும்பு மின்ன,

" கமாண்டர் எங்க..." என்றார்.

" அவர் ஒன் மந்த்க்கு முன்னாடி தான் டியூட்டில ஜாயின் பண்ணாரு ..." என்றவளிடம் மாதவிடாய் பற்றிய தேதிகளை கேட்டுத் தெரிந்து கொண்டவர்,

"சரி ராதா, இப்ப குமட்டலை நிறுத்துறதுக்கான மெடிசன்ஸ், நீ
ரொம்ப வீக்கா இருக்கிறதால கொஞ்சம் சப்ளிமெண்ட்ஸ்ஸ, எழுதிக் கொடுக்கிறேன் ... நீ பிளட் டெஸ்ட்க்கு கொடுத்துட்டு போ ...நாளைக்கு ரிசல்ட் தெரிஞ்சிடும் .." என்றார் மென் புன்னகையோடு.

அலுவலகத்திற்கு வந்தவளை, மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்ற ராஜேஸ்வரி

" ராதா, நமக்கு கவர்மெண்ட் ப்ராஜெக்ட்ஸ் 2 கிடைச்சிருக்கு..."

" இங்கையே வா மேம்..."

"இல்லை ராதா, கேரளல கொச்சின்ல கிடைச்சிருக்கு ...அங்க நம்ம கம்பெனியோட ஷேர்ஸ் அதிகமா வச்சிருக்கிற கோபால் நாயர் தான், ரெகமெண்ட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ஸை நம்ம கம்பெனிக்கே வாங்கி கொடுத்திருக்கிறாரு..." என கூறியவர் தொடர்ந்து

" இந்தப் ப்ராஜெக்ட்ஸ் முடிய குறைந்தபட்சம் 2 வருஷம் ஆகும் ...அதனால நம்ப கம்பெனியோட இன்னொரு ப்ரான்சை அங்கு தொடங்கலாம்னு இருக்கேன்… அதுக்கு சரியான ஆள இந்த வீக் எண்ட்குள்ள செலக்ட் பண்ணி, கொச்சின் அனுப்பி, அங்க ஒரு வாக்-இன் இன்டர்வியூ நடத்தி , ஒரு டீமை ஃபார்ம் பண்ணலாம்னு இருக்கேன்..." எனத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியவரிடம்
"சரி மேம், நாளைக்கே முடிச்சிடலாம்.."

என உறுதியளித்து விட்டு தன் இருக்கைக்கு வந்து அன்றைய அலுவலில் மூழ்கிப்போனவகளுக்கு உணவைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வர , வேறுவழியில்லாமல் வீடு திரும்பியவள் கொஞ்சமாக கொறித்துவிட்டு,படுக்கையில் விழ நித்ரா தேவி இரு கைகளை விரித்து அணைத்துக் கொண்டாள்.

வங்கிக்கு செல்ல வேண்டுமென ராஜேஸ்வரியிடம் பொய்யுரைத்து விட்டு மறுநாள் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றாள் .

அவளைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியில் வரவேற்ற மருத்துவர்,

" இப்பதான் உன்னோட மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்தேன் ....

கங்கிராஜுலேசன்ஸ் ராதா, யூ ஆர் ப்ரெக்னன்ட் ..."

என மருத்துவர் கூற , அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என தெரியாமல் விழித்து, பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு

" தேங்க்ஸ் மேம் ..."
என நன்றி தெரிவித்துவிட்டு எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு மருத்துவமனையின் வாயிலை நெருங்கியவளுக்கு , சற்று நேரம் யோசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, அலுவலகத்திற்கு செல்லாமல் அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று துர்க்கையை வழிபட்டாள்.

கோவில் பிராகாரத்தில் அமர்ந்து,மருத்துவர் கூறியதை மீண்டும் அசை போட்டு பார்த்தவளின் கைகள் தானாக தன் மணிவயிற்றை தடவி பார்த்தது.

அதில் ஏதோ ஒரு சிலிர்ப்பை உணர்ந்தவள் பூரித்துப் போனாள்.

பக்கத்து வீட்டு பார்வதி பாட்டி கூறியது போல் தனக்கு திருமண வாழ்க்கை, குழந்தை என்பதெல்லாம் எட்டாக்கனியாகவே போய்விடும் என நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு இந்தத் திருமணம், குழந்தை ஆகியவை ஏதோ பெரிய சாதித்த உணர்வைக் கொடுத்தது.

பொதுவாகவே மனித மனம் உணர்வுபூர்வமாக சிந்திக்கும், மூளை அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் என்பதனை உண்மையாக்கும் வகையில் ராதாவின் மனம், உணர்வின் எழுச்சியால் பூரித்து கொண்டிருக்க,அதனைத் தட்டி சிந்திக்க வைக்க எண்ணியது அவளது முளை.

உன்னுடைய திருமண வாழ்வே இன்றோ நாளையோ என அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுதே அதை எண்ணி பூரித்துக்கொண்டு இருக்கிறாயே , என மூளை குற்றம் சாட்ட,
கிருஷ்ணாவை பொருத்தமட்டில் நடந்த இந்த திருமணத்தில் நம்பிக்கையில்லை என்றாலும், எனக்கு இந்த திருமணத்தில் பரிபூரண நம்பிக்கை உண்டு மேலும் இந்த குழந்தைக்கு நான்தான் தாய், கிருஷ்ணாதான் தந்தை என்பதும் மறுக்கமுடியாத உண்மை என மனம் பதிலுரைக்க,

திருமணத்தில் நம்பிக்கை இல்லாத கிருஷ்ணா அன்றிரவு ஏன் உன்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், ஆதலால்தானே இன்று உன் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது என மூளை மீண்டும் பழிபோட

அவரை மட்டும் குற்றவாளியாக்குவது பெரும் தவறு, என்னுடைய சம்மதத்தோடுதான் அந்த இனிய சங்கமமே நடைபெற்றது, நான் முகஞ்சுளித்திருந்தாலே போதும் அவர் என்னை திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டார்.

அவர் மேல் நான் கொண்டிருந்த காதலால் நானே மனமுவுந்து என்னை இழந்தேன். என்னுடனான இணைவில் அவருக்கு காதல் இல்லாமல் இருந்திருக்கலாம் , அல்லது ஆண்களுக்கே உரித்தான பலவீனமான உடல் தேவையாக கூட இருந்திருக்கலாம்,எது எப்படியோ என்னுடைய காதல் உண்மையானது.

என்னுடைய திருமண வாழ்க்கை எனக்கு ஆதாரம் இல்லாமல் போனாலும், பிறக்கப்போகும் என் குழந்தை என் வாழ்க்கைக்கு ஆதாரம் என மனம் வாதிட,

நடந்து முடிந்ததை விடு, இப்போது இச்செய்தியை ராஜேஸ்வரியிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறாயா..
என மூளை கேட்க
இல்லை, நிச்சயமாக இல்லை.

அவரிடம் பகிர்ந்து கொண்டால், பூரித்துப் போய், ஏற்கனவே கூறியது போல் நிறுவனத்தின் பங்குதாரராக என்னையும் பிறக்கப் போகும் குழந்தையையும் இணைத்து விடுவார்.

இதனால் கிருஷ்ணா வரும் பொழுது அவர் என்னைப் பற்றி கூறிய வார்த்தைகள் அனைத்தும் மெய்யாகி, நான் குற்றவாளி கூண்டில் ஏறி நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

ஆதலால் அவரிடமிருந்து என் கர்ப்பத்தை மறைப்பதற்கு ஒரே வழி, கேரள ப்ராஜக்டை நானே ஏற்று நடத்துவது தான்.

முதலில் இந்த ஆறு மாத காலத்திற்கு அஞ்ஞான வாசத்தை கடைப்பிடிக்கலாம் ,மற்றவை பரம்பொருளின் கையில் ...

என ராதாவின் மனதிற்கும் மூளைக்கும் இடையே நடந்த தர்க்கத்தில், பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு தற்காலிக வழி முறையை கண்டறிந்தாள் .

அலுவலகம் சென்றடைந்தவள், எப்பொழுதும் உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தன் நடையிலேயே செயல்படுத்துபவள், தாய்மை அடைந்த செய்தியை அறிந்த பின், தாய்மைக்கே உரிதான பொறுமையும் பாதுகாப்பு உணர்வையும் சர்வ ஜாக்கிரதையோடு மற்றவர் அறியாவண்ணம் கடைப்பிடிக்க தொடங்கினாள்.


நடையில் மென்மை, முகத்தில் பூரிப்பு,அலைப்புறும் கண்கள் என வித்தியாசமான நடவடிக்கைகளோடு அறைக்குள் நுழைந்தவளை ராஜேஸ்வரியின் கண்கள் அணுவணுவாக அளவு எடுக்க,

" என்ன ராதா, பேங்க் வேலை முடிஞ்சுதா ..."

" முடிஞ்சது மேம்", என தயங்கியவள்

" கேரள ப்ராஜக்டை கொச்சினுக்கு போய் நானே எடுத்து நடத்தலாம்னு இருக்கேன்..." என்றவளின் கண்களில், எதையோ உணர்ந்தவர்,

மறுப்பேதும் தெரிவிக்காமல்

"சரி ராதா " என உடனே சம்மதம் தெரிவித்துவிட்டு
நீண்ட யோசனையில் மூழ்கியவர்

" கோபால் நாயர் சொன்னாரு, ஒரு ஆபீஸ் விலைக்கு வர்றதா... அத வாங்கிட்டு, இந்த வாரமே நம்ம டீமை கொச்சினுக்கு அனுப்பி, இன்டர்வியூ நடத்தி ஆளுங்கள செலக்ட் பண்ணி, அவங்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்து, ஒரு கம்ப்ளீட் டீமை பார்ம் பண்ணினதுக்கு அப்புறம் நீ போலாம் உனக்கு விருப்பம் இருந்தா, நீ கோபால் நாயர் வீட்டுலயே தங்கிக்கலாம்… அவர் வீட்டுல அவர் மனைவி, உன்னை மாதிரி ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க..”

" இல்ல மேம், நான் தனியாவே தங்கிக்கிறேன் ... நம்ம ஆபீஸ்க்கு கிட்ட வீடு பார்த்து கொடுத்தா போதும் ..."

என்றவளை ஏற இறங்க பார்த்தவர் பதிலேதும் கூறாமல் சம்மதம் என்பது போல் தலையசைத்தார் .

கர்ப்பம் உறுதி செய்த முதல் வாரம் என்பதால் ஓரளவு மாத்திரைக்கு வாந்தி குமட்டல் கட்டுப்பட்டது என்றாலும்
அலுவலகத்திலிருந்து வீடு
திரும்பியவளுக்கு அடுப்பில் எண்ணெய் தாளிக்கும் வாசம் மூக்கில் முட்டி குமட்டல் பொத்துக் கொண்டு வர, தான் முன்பு தங்கியிருந்த அறையின் குளியலறைக்குச் சென்று அன்று முழுவதும் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தவள் நடக்கக்கூட முடியாமல் அங்கிருந்த கதவின் மேல் சாய்ந்து நின்றாள்.

பிறகு முகம் கழுவி ,யாருக்கும் சந்தேகம் வராமல் மெல்ல கூடத்திற்கு வந்தவள் இன்னும் ஒரு வார காலத்திற்கு, இவ்வகையான உடல் உபாதைகளை மகி, ராஜேஸ்வரியிடமிருந்து மறைக்கப் வேண்டியதை எண்ணி மலைத்துதான் போனாள்.

மிகுந்த களைப்பினால், அவள் உடல் உறக்கத்திற்காக கெஞ்ச,கடந்த இரண்டு மூன்று நாட்களாக விடியற்காலை 3 மணி அளவில் பசி எடுப்பதை உணர்ந்தவள்,

"அக்கா , எனக்கு இப்ப டிபன் வேணாம் ... டிபனை நான் ரூம்க்கு எடுத்துக்கிட்டு போறேன், ஒரு மணி நேரம் கழிச்சு சாப்பிடறேன்..." என்றவளை மகியின் கண்கள் சந்தேகத்தோடு ஆராய

" ராதா, உடம்பு சரி இல்லையா "

"அதெல்லாம் ஒன்னுமில்ல அக்கா வயிறு தான் சரி இல்ல " என பெரியவளின் முகத்தை பாராமல் பொய்யுரைத்து விட்டு தனக்கு தேவையான உணவினை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தாள்.

பொதுவாக வயிற்றில் வளரும் குழந்தை ஒட்டுண்ணி போன்று தனக்குத் தேவையான உணவினை தாயிடமிருந்து எடுத்துக்கொள்ளும், அதற்காகவே தாயானவள் இருமடங்காக உண்ண வேண்டும்.

அதுவும் குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல், விடியற்காலை, நடுஇரவு என குழந்தைக்குப் பசிக்கும் போதெல்லாம் தாய்க்கும் பசிக்கும் இதனை அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்தவள் , அவள் பூனாவில் இருந்த அந்த ஒரு வார காலமும், தினமும் ஏதோ ஒரு காரணம் கூறி இரவு உணவை தன்னுடைய அறைக்கு எடுத்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

இதற்கிடையில் கிருஷ்ணா தேர்வு செய்த மோதிரங்கள் தயார் நிலையில் இருப்பதாக நகை கடையின் உரிமையாளர், வீட்டு தொலைபேசியின் மூலம் ராஜேஸ்வரியை தொடர்புக்கொண்டு தெரிவிக்க, அவர் ராதாவிடம் பயணத்திற்கு முன் மோதிரத்தை நகைகடையிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு பணித்தார்.

கடைக்குச் சென்று மோதிரங்களை பார்வையிட்டவளுக்கு மோதிரத்தின் வேலைப்பாடுகளில், வைரக் கற்களை விட அவளது கிருஷ்ணாவே அதிகம் தெரிந்தான்.

தாலி கொடியையே தாய் சொல்லித்தான் வாங்கினேன்னு சொன்னவர் , மோதிரத்தை மட்டும் என்னை நினைச்சா வாங்கியிருப்பாரு... விஷால் முன்னாடி தன் பொருளாதார நிலையை காட்டிக்கிறதுக்காக வாங்கியிருப்பார்...

என்றெண்ணியவளால் அதற்கு மேல் மோதிரத்தின் அழகை ரசிக்கமுடியாமல் விரக்தி நிலை சூழ்ந்துகொண்டது.

கேரளா கிளம்புவதற்கு முன்,

" அத்தை, நான் ட்ராவல்ல மோதிரத்தை எங்கேயாவது தொலைச்சிடுவேன் ..
அதனால நீங்களே வச்சுக்கோங்க .... அவர் வந்ததும் நான் வாங்கிக்கிறேன் ..." எனக்கூறி நாசூக்காக மறுத்துவிட்டாள் .

ஆயிரத்தெட்டு அறிவுரைகளை மகி மற்றும் ராஜேஸ்வரியிடமிருந்து பெற்றுக்கொண்டு தற்போதைய உடல்நிலைக்கு விமான பயணம் ஒத்து வராது என்பதால் நாசுக்காக அதை மறுத்துவிட்டு , ரயிலில் முதலாம் வகுப்பில் கேரளாவிற்கு பயணமானாள்.

கோயமுத்தூரிலிருந்து பூனாவிற்கு வரும் பொழுது, அவள் மனதில் தோன்றிய கேள்விகளைக் காட்டிலும், இப்பொழுது அவள் முன்னிருக்கும் சவால்களை எண்ணி மனம் பயந்தது.

ஏற்கனவே தாயில்லாதவள் ,இப்போது யாருமற்ற அனாதை போல் மொழி அறியா வேற்று மாநிலத்தில் உடல் உபாதைகளை சமாளித்து குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதை எண்ணி அவள் மனம் பதைபதைத்தது.

உடலின் பலவீனம் மனதை பலவீனமடையச் செய்தாலும், தனக்கும் ஒரு நாள் நல்வழி பிறக்கும் என்பதனை உரு போட்டபடியே, தனக்குத்தானே தன்னம்பிக்கையை விதைத்துக்கொண்டு வாழ்க்கையின் சவால்களை சந்திக்க தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.

கண்ணனைத் தேடி ....
 
Back
Top