Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 10

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
550
அத்தியாயம்-10

கிருஷ்ணா கண் விழித்து பார்த்த போது மணி ஏழை தொட்டிருந்தது.

எழுந்ததும் ஏனோ ராதாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுள் எழ , அவள் படுத்திருந்த திவானை பார்த்தால் தலையணை , போர்வை ஒருபுறம் மடித்து வைக்கப்பட்டு அது காலியாக இருக்க,
கீழ் தளத்திற்கு சென்றிருப்பாள் என்றெண்ணிவாறே குளியலறைக்குள் நுழைந்தான்.

குளித்து முடித்து புது மலர் போல் ராதா வெளிர் தாமரை நிறத்தில் கருப்பு நிற கரையிட்ட சேலையணிந்து, தன்னிடம் இருந்த தங்கத்தினால் ஆன சிறிய ஜிமிக்கி மற்றும் மெல்லிய கம்பி போன்ற சங்கிலியை கழுத்தில் பூட்டி , உலர்ந்த நீள தலை முடியை தளர பின்னி சிறிய ஒப்பனையுடன், ராஜேஸ்வரியை சந்திக்க சென்றாள்.

வந்தவளை உச்சி முதல் பாதம் வரை அவர் பார்வையால் அளக்க, ஒரு புறம் வருத்தம் என்றாலும் அவர் பார்க்கும் பார்வையின் உள்ளர்த்தம் அறிந்தமையால் அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது .

பிறகு சுதாரித்துக் கொண்டவள், அவர் உடல்நிலையைப் பற்றி விசாரிக்க அதற்கு பதிலளித்து முடித்தவர்

" ராதா, உனக்கு பத்து நாள் லீவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன் .... உங்க மேரேஜ் ரிசப்ஷனுக்கு அப்புறம் என்னோட ஆபரேஷன்.... அது முடிஞ்சதும் நீ கம்பெனிக்கு போலாம் ..." என்றார்.

"சரி மேம்"

" மேம் இல்ல ராதா ... இனிமே நீ என்னை அத்தைனு தான் கூப்பிடற..." என அவர் அன்பு கட்டளையிட, புன்னகைத்தவாறே பதிலேதும் கூறாமல் பூஜைக்காக பூக்களை பறிக்க தோட்டத்திற்குச் சென்றாள்.

அவ்வீட்டு தோட்டத்தில் ஒரு பகுதியில் கொய்யா, ஸ்ட்ராபெரி, பப்பாளி வெண்டை, தக்காளி, கேரட் போன்ற காய் கனி வகைகள் பயிரிடப்பட்டிருக்க மறுபகுதியில்
சம்பங்கி, பாரிஜாதம், நந்தியாவட்டை போன்ற பூ வகைகள் பூத்துக்குலுங்க இவற்றுக்கு இடையே பாத்திகள் அமைக்கப்பட்டு நீர் பாய்ச்சப்பட்ட அந்த சிறிய தோட்டம் மகியின் அண்ணன் வேலுவின் கைவண்ணத்தால் உருவானவை.

வேலு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி கொண்டிருக்க, ராதா மகியிடம் சிரித்து பேசிய படி பூக்களை பறித்துக் கொண்டிருந்த காட்சியை பால்கனியிலிருந்து தலையை துவட்டிக்கொண்டே காரணமே புரியாத பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணா.

அவள் தினமும் பூக்களைப் பறித்து மாலைகளாக தொடுத்து அவள் வணங்கும் மாயக் கண்ணனுக்கு சாற்றி, கீர்த்தனைகளை பாடிய பிறகே அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம்.

ராஜேஸ்வரிக்கு பக்தி உண்டென்றாலும், பூஜை செய்து வழக்கமல்ல விளக்கேற்றி கையெடுத்துக் கும்பிடுவாள் அவ்வளவே.

ஆதலால் கிருஷ்ணாவிற்கு இவை அனைத்தும் மிக புதிது.

அவன் படிகளில் இறங்கி வந்து கொண்டிருக்கும் போது, அவள் மெய்யுருகி பாடிகொண்டிருந்த "குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...." என்ற கீர்த்தனையின் இனிமையில் தன்னை மறந்து அங்கேயே நின்று பாடல் முழுவதையும் கேட்டு முடித்துவிட்டு ,பிறகு அப்பொழுது தான் வந்தது போல் ராஜேஸ்வரியின் அறைக்குள் நுழைந்தான்.


வழக்கம் போல் அவள் பூஜையை முடித்து, கையில் பிரசாத தட்டுடன் அறையிலிருந்து வெளியேறி மகி, வேலு , முருகன் என அனைவருக்கும் பிரசாதத்தை கொடுத்து விட்டு ராஜேஸ்வரியின் அறைக்கு வந்தாள்.

வந்தவளை கண்டதும் அவன் கண்ணில் தோன்றிய ஆர்வத்தை தலைகுனிந்தபடி ராஜேஸ்வரி கவனிக்க,

ம்ம்ம்... அருமையா பாடறா...
என்றெண்ணியபடி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், பிறகு தன்னிலை உணர்ந்து
தன் தாயிடம் அறுவை சிகிச்சைக்கான விபரங்களை தெரிவிக்க ஆரம்பித்தான்.

அவள் ராஜேஸ்வரியின் நெற்றியில் விபூதி பூசி விட்டு கிளம்ப எத்தனிக்க , அவர் இது தான் தருணம் என

" ராதா, இவனுக்கு சாமி பக்தி பெருசா இல்லேன்னாலும், அந்த விபூதியை கொஞ்சம் வச்சு விடுமா... இப்ப இருந்து கொஞ்சமாவது நல்ல புத்தி வரட்டும்…"
என்றவரிடம் என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் அவள் அப்படியே தயங்கி நிற்க , மீண்டும் அவர் ஊக்க,

வேறு வழியில்லாமல் அவனை நோக்கி இரண்டடி நகர்ந்தவளின் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்க ஆரம்பித்த நிலையில், தன் கையை அவனை நோக்கி உயர்த்தியவளை, கண்களில் குறும்பு மின்ன கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு ரசித்துப் பார்த்தபடி ஆறடி நெடுமாறனாகவே நின்றான் அவளுடைய கண்ணன்.

ராஜேஸ்வரி அவன் குறும்புத்தனத்தை கண்டுக்கொண்டு,

" கிருஷ்ணா.... கொஞ்சம் கீழ குனி ..." எனக்கூற, அப்போது
அவள் பார்வையும், அவன் பார்வையும் ஒன்றுடன் ஒன்று கலக்க, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ராஜேஸ்வரியும் நோக்கினார் இவர்கள் இருவரும் அறியாமல்.

அவள் மென்மையாக அவன் நெற்றியில் விபூதி இட,
இட்டவளின் மனம் படபடத்ததா அல்லது இட்டுக் கொண்டவனின் மனம் சிறகடித்ததா…..
என்றால் இரு மனங்களின் பதிலும் ஆமாம் என்றே இருக்கும்.

ஒரு நொடியா அல்லது இரு நொடியா என தெரியாத நிலையில் இருவரும் தன்னிலை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே நிற்க , அப்போது மகி அரவத்தோடு உள்ளே வர, முதலில் சுதாரித்துக் கொண்ட ராதா, சமையலறை நோக்கி செல்ல கிருஷ்ணாவின் கைபேசியும் ஒலிக்க, அவனும் ராஜேஸ்வரி அறையிலிருந்து வெளியேறியதும்

" நான் தப்பு பண்ணிட்டேனோன்னு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன் மகி...இப்ப தான் மனசு நிம்மதியா இருக்கு...ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் பிரியம் இருக்கு .... ஆனா ஏதோ ஒரு தயக்கமும் இருக்குது ...கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்னு நம்பறேன்..." என்றவரின் பேச்சுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தாள் மகி.

சமையலறைக்கு சென்றவளுக்கு கிருஷ்ணாவின் குறும்புத்தனமான பார்வை மனதில் படக்காட்சியாக மீண்டும் மீண்டும் ஓட,

இவர் ஏன் என்னை இப்படி வதைக்க வேண்டும்.... திருமணத்தில் விருப்பமில்லை விவாகரத்து செய்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டு, இப்போது விழுங்குவது போலல்லவா காதல் பார்வை பார்க்கிறார்...

அவரை சொல்லி குற்றமில்லை இந்த வெட்கங்கெட்ட மனதும் அவரையே அல்லவா சுற்றிவருகிறது என தன் மனதுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தவள் , காலை உணவு அருந்த செல்ல,
கிருஷ்ணாவிற்கு மகி காலை உணவைப் பரிமாற ஆரம்பித்தாள்.

ராதாவை பற்றி எப்படி கேட்பது எனத்தெரியாமல்,
"அவ சாப்பிட வரல .." என்றான் கிருஷ்ணா மெதுவாக.

" யார கேக்கற தம்பி... ஓ ராதாவையா... " என்ற மகி நமுட்டுச் சிரிப்போடு

" ராதா பிறவி சைவம், இன்னிக்கு இட்லிக்கு கோழி குருமா...அதான் இட்லிக்கு தக்காளி சட்னியை போட்டுக்கிட்டு போய் தோட்டத்துல உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டு இருக்கா ..." என்றவள், அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு அவளைப் பற்றி தெரிந்து கொள்ள எண்ணுகிறான் என கணித்து அவன் கேளாமலேயே தன்னிச்சையாக,

" ராதா வந்ததிலிருந்து எனக்கு ரொம்ப உதவியா இருக்கா தம்பி .... அவளால அம்மாவுக்கு ஆபீஸ்ல வேலை பளு நிறைய குறைஞ்சிருக்கு.... அவங்க உயிரை காப்பாத்தினதோட இல்லாம அவங்க கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கிறதுக்கும் அவ தான் காரணம் ... சனி ஞாயிறு கூட ரெஸ்ட் எடுக்காம பூனா யுனிவர்சிட்டில காலேஜ் பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க போயிடு வா ... அவளுக்கு அம்மா இல்ல, அவ அப்பாவுக்கு போன மாசம் தான் ஹார்ட் ஆபரேஷன் நடந்தது .... அவ தங்கச்சி டாக்டருக்குப் படிக்குது.... வீட்ல கொஞ்சம் கடன் வேற, எல்லாத்துக்கும் பணம் தேவைப்படுது ... அதனால பொழுதை வீணா கழிக்காம, இந்த மாதிரி செய்யறா.. இந்த வீட்டுல அவ தங்குறதுக்கும், சாப்பாட்டுக்கும் மாசாமாசம் பணத்தை சரியா கொடுத்துடு வா ....

நேத்து ராத்திரி கூட இந்த மாசத்துக்கான பணத்தை கொடுத்தா....
இனிமே நீ இந்த வீட்டு மருமக ஏன் பணம் கொடுக்கறேன்னு கேட்டதுக்கு, இந்த வீட்டு மருமகளா தான் பணத்தை கொடுக்கிறேன்.....
ஏன் என் வீட்டுக்கு நான் பணம் கொடுக்க கூடாதான்னு எதிர்கேள்வி கேட்கிறா.... மொத்ததுல ரொம்ப நல்ல பொண்ணு தம்பி... ரொம்ப தன்மானம் பார்ப்பா..."

என மகி ராதாவை பற்றி பேசி முடித்து, தன் சொந்தக் கதையும் சேர்த்து பேச, ராதாவைப் பற்றிய தகவல்களைத் தவிர வேறு எதுவும் அவன் காதுகளில் ஏறவில்லை.

திரும்பத்திரும்ப மனதிற்குள் அவளை பற்றிய தகவல்களையே உரு போட்டுக் கொண்டிருந்தவனுக்கு முதன்முறையாக தான் மனமுதிர்ச்சி இல்லாமல் செயல் பட்டதை எண்ணி
மனம் குமைந்து போனான்.

அவனுடைய வாழ்க்கை, பூக்கள் நிறைந்த பூங்காவனம் அல்ல ....
வாழ்வா சாவா என விவாதிக்கும் போராட்டங்கள் நிறைந்த போர்க்களம் ...
அம்மாதிரியான களத்தில் அவனுக்கு கை கொடுக்க மன முதிர்ச்சியோடு பொறுமையும் பெருந்தன்மையும் நிறைந்த காரிகையை தான் கண்ணாட்டியாக எதிர்பார்த்திருந்தான்.

அவன் காலம் சென்ற காதலியும் அவனைப்போலவே வாழ்க்கையை எதிர்கொள்ளும் வீராங்கனை என்பதால் அவர்களுக்கு இடையே அதிவிரைவில் காதல் அரும்ப காரணம் அவர்களின் பணி ஒற்றுமை மற்றும் அவர்களுக்கிடையே இருந்த 2 வயது வித்தியாசம் என்றே நம்பியிருந்தான்.

அவ்வாறு கணித்திருந்தவனின் கணிப்பு தவறு என
அவனை கை பிடித்திருந்த கன்னல் மொழியாள் சொல்லாமல் சொல்லியது தான்
அவனுக்கு தலை இறக்கத்தை கொடுத்திருந்தது.

அவளது பெயர் , ஊர், படிப்பு, குடும்பம், பணி, பழக்கவழக்கம், சுபாவம் என எதுவுமே தெரிந்துக்கொள்ளாமல் எத்துணை சிறு பிள்ளை தனமாக நடந்துக்கொண்டுள்ளேன்.

இப்படி தன்மானம் பார்க்கும் பெண்ணிடம் போய் பணம் கொடுக்கிறேன் விவாகரத்து கொடுக்கிறாயா என்றல்லவா கேட்டு வைத்துள்ளேன் ….

இது மட்டும் என் அன்னைக்கு தெரியவந்தால் என்னை மன்னிக்கவே மாட்டார் ....

உற்ற நண்பன் ராமின் உபதேசம் கூட உரைக்கவில்லையே .... என அவன் மனம் அவனை இடித்துரைத்து கொண்டிருந்த வேளையில் ,

நீ திருமணத்தில் விருப்பம் இல்லை விவாகரத்து செய்து கொள்ளலாம் என கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சரி என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாளே....
ஒருவேளை அவளுக்கும் உன்னைப்போல் நடந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ....

பொதுவாக இம்மாதிரியான சந்தர்ப்பத்தை இருவகையான தான் எதிர் கொள்வார்கள்.

ஒன்று கோபப்படுவார்கள் அல்லது யோசித்து முடிவெடுக்கலாம் என கால அவகாசம் கேட்பார்கள் ...
ஆனால் அவளோ அதை இரண்டும் செய்யாமல் சர்வ சாதாரணமாக சரி என்று அல்லவா கூறியிருக்கிறாள்

என அவன் மூளை கேள்வி எழுப்ப

நடந்த திருமணத்தில் விருப்பம் இல்லாதவள் கண்ணில்
சற்று நேரத்திற்கு முன் காதல் கரைபுரண்டோடியதே அது ஏன் என அவளது செய்கையை சுட்டிக்காட்டி அவன் மனம் குழப்ப

பதில் தெரியாமல் தவித்துப் போனவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது, அவன் சிந்தை எங்கும் அவளே நிரம்பி வழிகிறாள் என்று.

ஒருவேளை அவள் அழகை கண்டு என் மனம் அவள் பின்னே செல்கிறதா ...

நிச்சயமாக இல்லை ...

சுவாதியின் மறைவுக்குப் பிறகு எத்தனையோ அழகியை வெகு இயல்பாக கடந்து வந்துள்ளேன்..

நான் அவள் முகத்தைப் பார்ப்பதற்கு முன்பே அவள் மன முதிர்ச்சியும் பொறுமையும் தானே என் மனதைத் தொட்டது...

அவளுடைய வயதிற்கு அந்த குணங்கள் மிக மிக அதிகம்...

ஒன்று தெளிவாகிறது .... எனக்கு அவளைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறதென்று... ஆனால் அவளை நேசிக்கின்றானா என்றால் என்னிடம் பதில் இல்லை ....

என எண்ணிக் கொண்டிருந்தவனிடம்

நீ வயது மற்றும் மன முதிர்ந்தவன் உயர் பதவி வகிப்பவன் .... உனக்கே உன் மனம் சரியாக புரியவில்லை...

இந்நிலையில் நேற்று ஒன்றை அவளிடம் கூறிவிட்டு இன்று அதற்கு நேர் மாறாக வேறு ஒன்றைக் கூறினால் உன் வார்த்தையின் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் போகக்கூடும் ஆதலால் முதலில் உன் மனதினை அறிய முயற்சி செய் ...

அவளிடம் உனக்கு மெய்யான நேசம் இருக்கும்பட்சத்தில், அவள் மனதில் நீ இருக்கின்றாயா என தெரிந்து கொண்டு பிறகு உன் நேசத்தை அவளுக்கு செய்கையால் உணர்த்து...
என கூறி அலைபாய்ந்து கொண்டிருந்தவனை அவன் மனம் சமாதானப்படுத்தியது.



பொதுவாக இந்திய பாதுகாப்பு படையில் பணிபுரிவோருக்கு , விடுப்பு எடுக்க நேர்ந்தால் சரியான விடுமுறை கால முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அளிக்க வேண்டும்.

ஏனென்றால் ஏதாவது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டால் போர்க்கால அடிப்படையில் விடுப்பினை ரத்து செய்துவிட்டு குறிப்பிடப்பட்ட பயிற்சி மையத்திற்கு திரும்ப வேண்டும் என்பது விதி மேலும் இந்திய பாதுகாப்பு படையில் பணிபுரிவோர் தான் இருக்கும் நிலப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் , எந்த வித அரசு ஆணையையும் எதிர்பார்க்காமல் முதல் நபராக களத்திற்கு சென்று உதவ வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி.

இந்நிலையில் 'கேம்ப்' என்ற பகுதியில் 14-வது மாடியில் உள்ள அரசு அலுவலக கோப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க , அதனைக் கண்டதும் கிருஷ்ணா ராஜேஸ்வரியிடம்

" அம்மா, என்னாலான ஹெல்ப் பண்ணிட்டு வந்துடறேன் .."

எனக்கூறி தயாராக, இதனை மகி மூலம் அறிந்த ராதா ராஜேஸ்வரியின் அறைக்கு பதட்டத்தோடு வர

" கிருஷ்ணா, நேத்து தான் உனக்கு கல்யாணம் ஆயிருக்கு ...இப்ப நீ அவசியம் போய்த்தான் ஆகணுமா ..."
என்ற ராஜேஸ்வரியோடு ராதாவின் முகத்தையும் ஒருசேர பார்த்தவன், அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தை ரசித்தபடி

" ஆமாம்மா ... என்னாலான ஹெல்ப்ப நான் செஞ்சுதான் ஆகணும் ..." என கூறி இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அதிவேகமாக புறப்பட, அவன் இதை விட அதிபயங்கர களத்தை கண்டிருந்தாலும், அவளுக்கு இது புதிது என்பதால்,அவள் மனம் நிலை கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தது .

மதிய உணவு கூட உண்ண பிடிக்காமல் அவன் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தவளின் நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் மகியும் ராஜேஸ்வரியும் கவனித்துக் கொண்டிருக்க, இரவு மணி ஒன்பதை தாண்டியும் கிருஷ்ணா வரவில்லை என்ற நிலையில் அவன் வரவிற்காக வாசலிலேயே வழி மேல் விழி வைத்து, காத்து கொண்டிருந்தவளை மகி தான் வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்.


சற்று நேரத்திற்கெல்லாம், மிகுந்த களைப்போடு, சட்டையில் ஆங்காங்கே நெருப்பு வீச்சினால் ஏற்பட்ட சிறு சிறு ஓட்டைகள் மற்றும் வலதுகை விரல்களில் இரு பிளாஸ்திரிகளுடன் வீடு வந்து சேர்ந்தவனை,கண்டதும் மனதுருகி போய், என்ன செய்வதென்று தெரியாமல் அவன் முகத்தையே அவள் பார்த்துக்கொண்டு நிற்க,

அவனோ அவளை கண்டுகொள்ளாமல் விபத்து பற்றிய விவரங்கள் மற்றும் தனது வலது கையில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனை சென்று வந்ததை பற்றி ராஜேஸ்வரியுடன் உரையாடி கொண்டிருந்தான்.

அப்போது
மகி இரவு உணவிற்கு அழைக்க,

" எனக்கு டின்னர் வேணாக்கா... நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் " என்றவன் திரும்பிப்பாராமல் மேல் தளத்தில் இருக்கும் தன் அறையை நோக்கி நடை போட,
என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கி நின்ற ராதாவிடம்,

" போ ராதா... தம்பிக்கு ஏதாவது வேணுமான்னு கேளு ... " என அவள் தயக்கத்தை அறிந்து அறிவுறுத்தி அனுப்பினாள் மகி.

காலையில் அவர் விபத்து நடந்த இடத்திற்கு செல்லும் போதே என் உயிரும் அவருடனேயே சென்றுவிட்டது...

அவர் திரும்பி வந்ததும்தான் எனக்கு சுவாசமே வந்தது ... இதையெல்லாம் அவர் அறிவாரா.....

மனைவி என்ற உரிமை மறுக்கப்பட்ட நிலையில் , மனிதாபிமான அடிப்படையில் விசாரித்தால் மட்டும் பதில் கூறி விடுவாரா என்ன ....

காலையில் காதல் பார்வை பார்த்தவர் இப்பொழுது பாராமுகமாக இருக்கிறார்.

இவரை புரிந்துக்கொள்ள ஒரு யுகம் தேவைப்படும் போலிருக்கிறதே கடவுளே.....

ஏற்கனவே இவரை இக்கோலத்தில் கண்டதிலிருந்து என் மனம் உலைக்களம் போல் கொதித்துக் கொண்டிருக்கிறது, இப்போது சென்று உடல்நிலை குறித்து விசாரித்தால் வேறு ஏதாவது பேசி நோகடிப்பாரோ?....

என ஆயிரமாயிரம் கேள்விகளுடன், தாழ் போடாமல் இருந்த கதவினை மெல்ல திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ராதா.

குளியலறையில் இருந்து வெளிப்பட்டவன் , அவன் மனைவியாள் வந்திருப்பதை அறிந்து அவன் மனதிற்குள் பூ பூத்தாலும் ,அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் , அவளை பாராமல் தன் இடது கையால் சட்டையைக் கழற்றிவிட்டு வெற்று மார்புடன் படுக்கையில் விழுந்தான்.

அவனை வெற்று மார்புடன் பார்ப்பதற்கு கூச்சமாக இருந்ததால் , தலையைத் தாழ்த்திக் கொண்டு மெல்லிய குரலில்

" உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேணுமா ... " என கேட்டவளின் குரலை ரசித்தவாறு அவளை பார்த்தவன் கலையிழந்து சோர்வாக காணப்பட்டவளை கண்டு மனம் ஒரு புறம் வருந்தினாலும் மறு புறம் தனக்காகத் தானே வருந்தியிருக்கிறாள் என பூரிப்படைய

" வேணாம் ..."

என ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு, அவளுக்காக கண்களை மூடியவன் அன்று முழுவதும் ஏற்பட்ட அலைச்சலால் ஆழ்ந்த உறக்கத்தில் சென்றுவிட்டான்.

அசைவற்று இருந்த அவனது உடலும், ஒரே சீராக ஏறி இறங்கும் அவனது மார்பும் அவன் ஆழ்ந்த உறக்கத்தை பறைசாற்ற, இதுதான் தருணம் என அவனை ரசித்துக்கொண்டே நின்றவள் உறங்கும் போதும் அவனிடத்தில் தெரிந்த கம்பீரத்தை கண்டு மனதினுள் மெச்சியபடி

ஊருக்கு ஒரு பிரச்சனைன்னா ஓடோடி செய்ற உங்களுக்கு ... என்னை மட்டும் ஏனோ பிடிக்கலை .... எனக் கண்ணில் சிறுதுளியுடன் வாய்க்குள் முணுமுணுத்தபடி தன் படுக்கைக்குச் சென்றாள்.

விடியற்காலை மூன்று மணி அளவில் தொடர்ந்து ஒலித்த பலத்த இருமல் சத்தம் அவளை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்ப,

யார் இருமறா... என நினைத்து தடுப்பின் மறுபுறம் எட்டி பார்க்கும் போது ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையறியாமல் அவன் தான் இருமிக் கொண்டிருந்தான்.

இப்ப என்ன செய்யறது .... என சற்று நேரம் யோசித்து விட்டு, பிறகு நடப்பது நடக்கட்டும் என்று சமையல் அறைக்குச் சென்று இளஞ்சூட்டில் காய்ச்சிய பசும்பாலுடன் மஞ்சள் தூள், மிளகு தூள் ,தேன் கலந்து எடுத்து வந்தவள்
மெல்ல அவனருகில் சென்று குனிந்து 'சார்' என கூப்பிட, அவனிடத்தில் எந்த அசைவும் இல்லை.


மீண்டும் அவள் இரண்டு மூன்று முறை 'சார்' என்றழைத்தும் அவன் எழும் நிலையில் இல்லை.

அவனை தொட்டு எழுப்பினால் என்ன சொல்வானோ என முதலில் அஞ்சியவள் பிறகு, என்ன சொன்னாலும் பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன், அவன் நெற்றியை தொட்டதும் உடல் அனலாக கொதிப்பதை உணர்ந்து, சற்று பலமாக 'சார்' என அழைத்தாள்.

அப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்தவனுக்கு, இரவு விளக்கு ஒளியில் மஞ்சள் நிற நிலவு அவனருகில் இருப்பது போன்ற உணர்வு எழ, கண்ணைக் கசக்கிவிட்டு உற்று நோக்கினால் அவன் மனையாள் குனிந்து அவனை எழுப்பிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்ததும்,

முழு உணர்வு பெற்றவனாய் எழுந்தமர்ந்து என்ன என்பது போல அவளை உற்று நோக்க,

"சார் , ரொம்ப நேரமா நீங்க இருமிகிட்டே இருக்கீங்க... உடம்பு அனலா கொதிக்குது..இதைக் குடிங்க .." என பால் கோப்பையை அவன் கையில் திணிக்க, எதுவும் பேசாமல் ஒரே நிமிடத்தில் முழு கோப்பையையும் காலி செய்தவன்
பிறகு

" என்னது இது ..." என்றான் ஆர்வத்தோடு.

" சார், உங்களுக்கு அலர்ஜியால இருமல் வந்திருக்கு... பசும் பால்ல மஞ்சள் தூள் ,மிளகுத்தூள் ,தேன் கலந்து குடிச்சா சரியாயிடும் .... அதான் கொடுத்தேன் .."

என்றவளின் பேச்சிலிருந்த 'சார்' அவனைப் பெரிதும் பாதிக்க, கோப்பையை கொடுத்து விட்டால் அந்த இடத்தை விட்டு அகன்று விடுவாள் என்பதால், அதனை கையில் ஏந்திய படி அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வை அவள் உயிர் வரை சென்று ஊடுருவ, அதன் தாக்கத்தால் தன்னிலை தடுமாறியவள், கோப்பையை பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டு துரிதமாக நகர முயல, ஏனோ அவனுள் திடீர் ஆழிப்பேரலையாய் உணர்வுகள் பொங்கி அவளை இழுத்து அணைத்துக் கொள்ள துடிக்க,
சுதாரித்தவன் அந்த எண்ணத்தை அரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டான் .

கடவுளே, அவருடைய பார்வை என் மனதிடத்தை கூட அசைத்துப் பார்க்கிறதே... இது ஆண்களுக்கே உரித்தான பலவீனமா அல்லது உண்மையான நேசத்தினால் வெளிப்பட்ட பார்வையா....

எது எப்படி இருந்தாலும் , அந்த உணர்வுக்கு நான் இணங்கினால், நானே உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி தூண்டில் போட்டதாகிவிடும்.
அது ராமிடம் கூறிய குற்றச்சாட்டை விட மிகவும் கீழ்த்தரமானது.

நான் அவரை புரிந்து கொள்ளாமல் எந்நிலையிலும் என்னை இழப்பது முறையல்ல .

அனைத்தும் அருகில் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலையில் வைத்து விட்டாயே கிருஷ்ணா.... என மனதிற்குள் புலம்பியவள்,பிறகு துணுக்குற்றவளாய்

இவரைதான் அழைத்தேன் என வந்து நின்று விடப் போகிறார்... என மனதிற்குள் சிரித்துக் கொண்டே உறங்கிவிட ,

கிருஷ்ணாவிற்கு தூக்கம் வராமல் புரண்டு ,புரண்டு படுத்து கடைசியில் ஒருவாறு உறங்கிபோனான்.

அவள் உறக்கம் விழித்து கடிகாரத்தைப் பார்த்தால் அது ஆறரைக்கு மேல் காட்ட, இவ்வளவு நேரமா தூங்கி விட்டோம் என்றெண்ணி குளியலறைக்கு செல்லும் பொழுது, அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப்
கண்டு பொதுவாக ஐந்தரை மணிக்கு மேல் உறங்காதவன் நேற்று ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக நீண்ட நேரமாக உறங்குவதை மனதில் ஒருவித வலியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் உறக்கத்தில் புரள உடனே வேகமாக குளியலறைக்குள் ஓடி மறைந்தாள்.


கடல் நீல நிற மைசூர் சில்க் புடவையணிந்து, அவற்றுக்குப் பொருத்தமான முத்து தோடு மற்றும் முத்து மாலையுடன் முன் நெற்றியில் சிந்தூர் இட்டு , கண்ணை பறிக்காத ஒப்பனையுடன்
எப்பொழுதும் போல் பூக்களைப் பறித்து மாலைகளாகத் தொடுத்து , அவள் வணங்கும் கோகுலக்கண்ணனுக்கு சாற்றி, பாசுரங்கள் பாடியவளுக்கு ஏனோ அன்று

"அலைபாயுதே கண்ணா" என்று பாட வேண்டும் போல் தோன்ற, அவளுடைய மன நிலைமையும் பாடலுக்கு பொருத்தமாக இருந்ததால், மிகவும் லயித்து அவள் பாட, கீழ் தளத்திற்கு வந்தவன் , எப்பொழுதும் போல் படிக்கட்டிலேயே நின்று முழு பாடலையும் கேட்டு விட்டு ராஜேஸ்வரியின் அறைக்குள் நுழைய எத்தனிக்கும் போது "ஹாய் அண்ணா" என்று கூப்பிட்டுக்கொண்டே டாக்சியில் வந்திறங்கினான் சித்தார்த்.


அவனை கண்டதும்

இருக்கிற பிரச்சனைல இவன் வேற ... என்றெண்ணியவாறு வேறுவழியில்லாமல்
"வா சித்தார்த் "என்று வரவேற்றான் கிருஷ்ணா.

சித்தார்த் 5.6 அடி உயரத்தில் சிவந்த நிறத்தில், அவனது உயரத்ததை விட சற்று அதிகமான எடை மற்றும் அடர்ந்த கேசத்துடன் காட்சியளித்தான் .

ஏற்கனவே பலமுறை அவ்வீட்டிற்கு வந்துள்ளதால்

" பெரியம்மா எப்படி இருக்காங்க .." என்றபடி வந்தவன் நேரடியாக ராஜேஸ்வரியின் அறைக்கு செல்ல, கிருஷ்ணா அவனை பின் தொடர்ந்தான்.

அப்போது தீபாராதனை முடித்து வழக்கம் போல் பிரசாத தட்டுடன் ராஜேஸ்வரியின் அறைக்குள் ராதா நுழைய , அவளை கண்டதும் ஒரு கணம் அசந்து தான் போனான் சித்தார்த் .

தன்னை மறந்து வைத்த கண் வாங்காமல் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அவன் கண்கள் அவளை மேய,
அவன் ராதாவை ஆர்வமாக பார்ப்பதை கண்ட ராஜேஸ்வரி,

" சித்தார்த் , இவதான் ராதா .... கிருஷ்ணாவோட வைஃப் ..." என அறிமுகப்படுத்த, அவன் அதனை எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகமே காட்டிக் கொடுக்க, அவன் கண்களில் கொப்பளித்த பொறாமையை கிருஷ்ணா கண்டுகொண்ட போது

" ஓ.... குட் ... நீங்கள் போன்ல சொல்லி இருந்தீங்க இல்ல.. நான் தான் மறந்தே போயிட்டேன் பெரியம்மா ...." என அசடு வழிந்தான்.

சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் என ராஜேஸ்வரி தொலைபேசியில் கூறியிருந்தார்.

அதை வைத்து பெண் அழகாக இருக்க மாட்டாள் மேலும் கிருஷ்ணாவிற்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்பதையும் அறிந்து கொண்டு அவனை வெறுப்பேற்றுவதற்காக தான் இத்திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அவன் வந்ததே.

ஆனால் இங்கு நிலைமையே வேறு அப்சரஸ் போன்ற மனைவி அல்லவா வாய்த்திருக்கிறாள் என மனதிற்குள் குமைந்தவன்,

" ஹாய் ராதா..." என்றான் கண்ணில் ஆசையுடன்.

" ராதா உன்னோட அண்ணி .... அவளை அண்ணின்னு கூப்பிடு சித்தார்த் ..." என ராஜேஸ்வரி அறிவுறுத்த,

" ராதா என்னை விட சின்னவங்க.. அதனால பேரிட்டே கூப்பிடுறேனே.. இந்தக் காலத்துல உறவு முறை எல்லாம் ஒரு மேட்டரே இல்ல பெரியம்மா ..."
என பொங்கி எழுந்த கோபத்தை மறைத்து குயுக்தியாக சிரித்தபடி சித்தார்த் கூற

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவிற்கு ரத்த அழுத்தம் தலைக்கு மேல் ஏறிய நிலையில், வேறு வழியின்றி பற்களை நறநறவென கடித்து கோபத்தை அடக்க முயன்றான்.

ராதாவிற்கு சித்தார்த்தின் பார்வையிலுள்ள வித்தியாசம் தெரிந்தாலும் ,அவளை பற்றிய அறிமுகம் என்பதால் வேறு வழியில்லாமல் அவள் நிற்க ,

பெரிய செப்புசிலை மாதிரி அப்படியே நிக்குறா பாரு... என அவளை மனதிற்குள் ஆசை தீர வசை பாடிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

" பர்வதம் எப்ப வர்றா..." என ராஜேஸ்வரி இயல்பாக கேள்வி எழுப்ப

" அப்பாவுக்கு பிளைட் ட்ரவல் ஒத்துக்காது... அதனால அம்மாவும் அப்பாவும் ட்ரெயின்ல நாளைக்கு சாயங்காலம் பூனாவுக்கு வராங்க ..." என ராதாவை பார்த்துக்கொண்டே பதிலளித்தவன்

" முதல்ல எனக்கு இந்த ரிசப்ஷனுக்கு வரணுங்கிற எண்ணமே இல்ல...அம்மா தான் ரொம்ப போர்ஸ் பண்ணாங்க ... ஆனா இங்க வந்ததும் தான் தெரிஞ்சது கிளைமேட் ரொம்ப சூப்பரா இருக்கு... இன்னும் ஒரு மாசம் அதிகமா தங்கியிருந்திட்டு போலாம்னு இருக்கேன் பெரியம்மா ..." என்றான் ராதாவை கண்களால் பருகியபடி.

" அதனால என்ன உன் இஷ்டம் போல இரு சித்தார்த்..." என்றார் ராஜேஸ்வரி வெள்ளந்தியாக.

குன்னூர்ல இருந்து வந்துட்டு பூனாவோட கிளைமேட் நல்லா இருக்குன்னு யார்கிட்ட கதை விடற...
என கிருஷ்ணா மனதுக்குள் உறுமி கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மகி சித்தார்த்தை நலம் விசாரித்து விட்டு

" எல்லாரும் டிபன் சாப்பிட வாங்க.." என்றழைக்க

"இதோ ப்ரஷ் ஆயிட்டு வந்துடறேன்க்கா.. " என சித்தார்த் நகர,

" அக்கா, நான் தோட்டத்துல சாப்பிட்டுகிறேன்..." என்று ராதா நழுவ

" வேணாம் ராதா...இன்னிலிருந்து காலை டிபன் முழுசும் சைவமா இருக்கணும்னு நேத்தே தம்பி சொல்லிடுச்சு ..." என்ற மகி சமயலறை நோக்கி நகர்ந்தாள்.

அனைவரும் சென்றதும் தன் தாயிடம்
" ஏம்மா ரிசப்ஷனுக்கு இவனையெல்லாம் கூப்பிடீங்க ..." என கிருஷ்ணா கோபப்பட

" நமக்கு இருக்கும் ஒரே உறவு இவங்க தானப்பா ...." என தாழ்ந்து கூறியவரின் குரல், அவனை மேலும் பேசவிடாமல் தடுக்க, வேண்டாவெறுப்பாக
உணவு உண்ண வந்தமர்ந்தவனுக்கு நேரெதிரே சித்தார்த் அமர, ராதா அவர்களுக்கிடையில் வந்தமர்ந்தாள்.

நான் சைவத்துக்கு மாறிய நேரம் கெட்ட நேரம்னு நினைக்கிறேன்...
நேத்து ராதாவோட சாப்பிடணும்னு ஆசைப்பட்டு போட்ட திட்டம், இப்ப இந்த மைதா மாவுவோட சாப்பிட வேண்டிய நிலைமைல இருக்கேன்...
என வெகுவாக கிருஷ்ணா நொந்து படி அமர்ந்திருக்க,

சித்தார்த் தன் பார்வையை ராதாவின் மீது படற விட்டபடி

" நீங்க சைவமா ராதா .." என்றவனுக்கு
வாய்மொழியில் பதில் கூறாமல் ஆம் என்பது போல் அவள் தலையசைக்க

" சைவமா இருக்கிறவங்களுக்கு தான் சாஸ்திரிய சங்கீதம் நல்லா வரும் ..." என்றான் கிருஷ்ணாவை ஓரக்கண்ணில் பார்த்து.

" நான் வரும் போது நீங்க தானே பாடிகிட்டு இருந்தீங்க...கடைசி ரெண்டு வரிதான் கேட்க முடிஞ்சது...அருமையா பாடறீங்க ..." என ஜொள்ளியவனை

பெரிய ஜிடி நாயுடு கண்டுபிடிச்சிட்டாரு...என மனதுக்குள் நாயகன் வசை பாடிக் கொண்டிருக்கும் போது ராதா
" தேங்க்ஸ் .." என முடித்தாள்.

மீண்டும் கிருஷ்ணாவை உற்று நோக்கியபடி மனதிற்குள்,

டேய் அண்ணா, உனக்கு தமிழே தகராறு... எழுதப்படிக்க கூட தெரியாது இல்ல, இப்ப அசத்துறேன் பாரு...

" ராதா, நீங்க பாரதியார் கவிதைகளை பாடறதுண்டா..." என்ற கேள்வி ராதாவிற்கானது என்றாலும் அவனுடைய பார்வை கிருஷ்ணாவின் மேல் நிலைத்திருக்க,

" பாடுவேன்..."

" ஆமா சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாட்டுக்கு, பாரதியார் அமைச்ச ராகம் ...காபியா... காம்போதியா... "

காம்போதி இல்லடா கபோதி.... என கிருஷ்ணா மானசீகமாக பொங்க

" பாரதியார் ஒரிஜினலா அந்தப் பாட்டுக்கு போட்ட ராகம் பைரவி ...சினிமால தான் காபி ராகத்துல பாடி இருப்பாங்க ..." என்றவளின் பதிலில் பெருமிதத்தோடு கிருஷ்ணாவை பார்த்து தன் சங்கீத ஞானத்தை சித்தார்த் பறைசாற்ற, அதற்கு கிருஷ்ணா எரிமலையாய் அவனை முறைக்க,

மகியும் ராஜேஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண் ஜாடை செய்தபடி இம்மூவரின் உரையாடல்களை கண்டு கொள்ளாதது போல் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

அதிலும் குறிப்பாக சித்தார்த்தின் கேள்விகளுக்கு கிருஷ்ணாவின் முகபாவங்களும், ராதாவின் வெள்ளந்தியான பதில்களும், மகிக்கு சிரிப்பை வரவழைக்க, அடிக்கடி சமையலறைக்குள் சென்று சிரித்துவிட்டு வந்து தான் பரிமாறினாள்.

ஆனால் ராதாவிற்கு எதுவுமே பிடிபடவில்லை, கிருஷ்ணா கோபத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்தவளுக்கு, ஏன் எதற்காக என புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள் .

" ஒரே தோசையை எவ்ளோ நேரம் சாப்பிட்டுகிட்டு இருப்ப ராதா..."
என கிருஷ்ணா கேள்வி எழுப்பினான் என்பதை விட கத்தினான் என்பதே மிக பொருத்தமாக இருக்கும்.

ஆனால் ராதாவுக்கோ முதல் முறையாக என் பெயரை இவர் இப்படித்தான் அழைக்க வேண்டுமா என்றிருந்தது.

இவரும் என் கூட பேச மாட்டாரு... என்னை பாராட்ட மாட்டாரு... அதையே வேற யாராவது செஞ்சா துரைக்கு மூக்குக்கு மேல கோவம் வருது....
அதான் ஏன்னு புரியல.... என அவள் தனித்தீவாக குமுற

" அக்கா, ராதாவுக்கு இன்னொரு தோசை போடுங்க ..." என கிருஷ்ணா கேட்க

" எனக்கும் இன்னொரு தோசை போடுங்கக்கா .. தோசை நல்லா இருக்கு .." எனக்கேட்டு அவன் ரத்த அழுத்தத்தை நிமிஷத்திற்கு ஒரு முறை உயரச் செய்தான் சித்தார்த்.

இம்முறை கிருஷ்ணாவின் கோபம் எல்லை கடக்க,

இன்னொரு தோசையை சாப்பிடுற சாக்குல ராதா கூட பேசிக்கிட்டு இருக்கலாம்னு நினைக்கிறான் இந்த வெள்ள பன்னி ... என்றெண்ணியவன் உடனே

" ராதா நீ இன்னொரு தோசையை சாப்பிட ஒரு வருஷம் ஆகும் ...நீ சாப்பிட்ட வரைக்கும் போதும், மேல போய் என் துணியை மடிச்சு வை..." என முடிக்க,
இம்முறை மகியும் ராஜேஸ்வரியும் சிரிப்பை அடக்க அரும்பாடுபட, ராதாவிற்கு இப்பொழுது தான் எல்லாம் புரிய ஆரம்பித்தது.


இவரோட துணியை எப்ப நான் மடிச்சு வச்சிருக்கேன் .... கல்யாணம் ஆகி இந்த ரெண்டு நாள்ல ஒரு நிமிஷம் கூட இவர் என்னோடு நின்னு பேசினது இல்ல .. இவரும் பேச மாட்டாரு, வேற யாரும் என் கூட பேசக்கூடாது... எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்.... என மனதுக்குள் பொருமியபடி, அவள்
உணவு மேஜையிலிருந்து எழ,வெளியே ஏதோ கார் வந்து நின்ற சத்தம் கேட்டு மகியும் ராதாவும் எட்டிப்பார்க்க , காரிலிருந்து ரேஷ்மி குட்டை பாவாடையில் இடுப்பு தெரிய கூடிய அளவு சிறிய மேல் சட்டை அணிந்து, அலை அலையாய் கூந்தலுடன் வீட்டின் கூடத்தில் நுழைந்தவள் , கிருஷ்ணாவுடன் அனைவரும் உணவு மேஜையை சுற்றி நின்று கொண்டிருப்பதை கண்டு அங்கு வர,
" ஆஹா... யார் இது... இவ்ளோ கிளாமரா ..." என சித்தார்த் வாயில் கொசு போவது கூட தெரியாமல், ரேஷ்மியை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே நின்றான்.

" ஹாய் கிருஷ்ணா, நேத்து நடந்த ஃபயர் ஆக்சிடெண்ட்ல கவர்மெண்ட் ப்ராப்பர்டீஸ்ஸ காப்பாத்தினதால,நீங்க தான் இன்னிக்கு பூனாவோட ஹெட் லைன்ஸ்... " என்று ஆங்கிலத்தில் கூறிக்கொண்டே அவனை கட்டியணைத்து அவன் கன்னத்தில் ரேஷ்மி முத்தமிட ,
அங்கு ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் நிலையில், ஓர் இதயம் உடைந்து சிதறியது.

ராதாவின் இதயம் அல்ல..... சித்தார்த்தின் இதயம் .....

டேய் அண்ணா, உனக்கு உடம்பெல்லாம் மச்சம் டா...ஒரு பக்கம் ட்ரெடிஷனல் இன்னொரு பக்கம் கிளாமர்னு… வாழற ...என மனதிற்குள் பொருமி தீர்த்தான்.

மகி ரேஷ்மியை நேரிலேயே சந்தித்திருக்க,
அவளை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருந்த ராதாவுக்கு , அவளுடைய செய்கை காதுகளில் புகையை கிளப்பியது.

" தேங்க்ஸ் ரேஷ்மி .." என்ற கிருஷ்ணா ஓரக்கண்ணால் ராதாவின் முகபாவங்களை பார்க்க, அவள் வெகு சிரமப்பட்டு உணர்வுகள் துடைத்த முகத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

" கிருஷ்ணா, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ...நாம நெக்ஸ்ட் மந்த் மேரேஜ் பண்ணிக்கலாம் ...நீங்க ஏர் போர்ஸ்லயே கண்டினியு பண்ணுங்க... இனிமே நான் அதை பத்தி பேச மாட்டேன்... " என மிகுந்த மகிழ்ச்சியில் தன் தாய்மொழியான மராத்தியில் ரேஷ்மி தன் சம்மதத்தை கூற, ராஜேஸ்வரிக்கும் மகிக்கும் மராத்தி தெரியும் என்பதால் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் அவர்கள் கிருஷ்ணாவின் முகத்தை பார்க்க, அவனோ யாருக்கோ வந்த விருந்து போல் அமைதி காத்தான்.

ராதாவிற்கு முன்கதை சுருக்கம் தெரியும் என்பதால் ஓரளவு விஷயத்தை அவளால் யூகிக்க முடிய, சித்தார்த்துக்கு மட்டும் ஒன்றுமே புரியாமல் ரேஷ்மியை குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது மகி

" கிருஷ்ணாவுக்கு கல்யாணமாகி ரெண்டு நாள் ஆகுது ரேஷ்மி..." என மராத்தியில் ராதாவை சுட்டிகாட்டி கூற,
அதனை கேட்டு அதிர்ந்த ரேஷ்மி

" இதை செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது ....நீங்க என்னை ஏமாத்திட்டீங்க ..." என ஓவென்று ஆங்கிலத்தில் அலற,

டேய் அண்ணா, ரேஷ்மியோட குடும்பம் நடத்திட்டு ராதாவை கல்யாணம் கட்டிக்கிட்டயா...
என தன் பாணியில் சித்தார்த் சிந்தித்துவிட்டு, பிறகு

நீ உத்தமபுத்திரன் ஆச்சே ... அப்படியெல்லாம் செய்ய மாட்டியே ... என தனக்குத்தானே சமாதானத்தை கூறிக்கொண்டு நடப்பதை உற்று கவனிக்கலானான்.


" கிருஷ்ணா, நீங்க உங்க அம்மா கிட்ட பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்னீங்க இல்ல... அதுக்குள்ள எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. " என மராத்தியில்,ராதாவை முறைத்துகொண்டே ரேஷ்மி கேள்வி எழுப்ப,

எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு... ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ...இந்த ரேஷ்மி ஒன்னு இங்கிலீஷ்ல பேசணும், இல்ல மராட்டில பேசணும்...இப்படி இரண்டையும் கலந்து பேசி என்னைக் கொலைகாரனாக்காம விட மாட்ட போல இருக்கே... என மனதிற்குள் சித்தார்த் உறும,

" கிருஷ்ணாவோட அம்மாக்கு , ஹார்ட் அட்டாக் வந்ததால அவங்க ஆபரேஷனுக்கு முன்னாடி கிருஷ்ணாவுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க, அதனாலதான் உடனே கல்யாணம் செய்ய வேண்டியதா போச்சு..." என்று மகி மராத்தியில் ரேஷ்மிக்கு பதிலளிக்க,

" இந்த காரணத்தை என்கிட்ட சொல்லி என்னையே நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கலாமே கிருஷ்ணா ..." என மராத்தியில் புலம்பியவள்,

உடனே வெறி வந்தவள் போல் கதறி அழுதபடி,

" நீங்க வேணுமின்னே என்னை ஏமாத்திட்டீங்க கிருஷ்ணா .." என மீண்டும் ஆங்கிலத்தில் அலற,

இம்முறை ரேஷ்மியை அடிக்கும் அளவிற்கு சித்தார்த்துக்கு ஆத்திரம்
கூடியது.


ஒரு மொழில ஒழுங்கா பேசாம கதையோட முக்கிய கருவை மட்டும் மராத்தியில் பேசிட்டு,

வெறும் ஏமாத்திட்டீங்க ஏமாத்திட்டீங்கன்னு இங்கிலீஷ்ல கத்தினா.... தலைவலி வந்தது தான் மிச்சம்...
என மனதிற்குள் அவன் ரேஷ்மியை அர்ச்சித்துக்கொண்டிருக்கும் போது
ஒருவாறு சமாதானம் அடைந்தவள்

கிருஷ்ணாவை நெருங்கி மராத்தியில் ஏதோ கூற, அதற்கு அவன் ராதாவை காட்டி மராத்தியிலேயே பதிலளித்து முடித்தான்.

சித்தார்த்துக்கு சண்டையின் முக்கிய கருவும் புரியாமல், உச்ச கட்டமும் புரியாமல், வெறும் ஏமாற்றிவிட்டாய் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் ஆங்கிலத்தில் ஒரு மணி நேரமாக கேட்க வைத்த ரேஷ்மியின் மீது கொலைவெறி வர,

காரை நோக்கி சென்றவள், நினைவு வந்தவளாய் யாரும் எதிர்பாராத நேரத்தில் , திரும்பி ஓடி வந்து கிருஷ்ணாவை மீண்டும் ஒருமுறை இறுக்கிக் அணைத்து அவன் கன்னத்தில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்து விட்டு,

'பை' என கூறி விடை பெற,

சித்தார்த் கடுங்கோபத்துடன், தன் இரு கைகளையும் பழைய தமிழ் சினிமா வில்லன் நம்பியார் போல் பிசைந்ததை பார்த்து கிருஷ்ணாவிற்கு சிரிப்பு வர, லேசாக சிரித்தவாறு திரும்பி ராதாவைப் பார்த்தால், அவளுக்கு முகம் சிவந்து கண்ணில் சிறு துளி கண்ணீரே வந்துவிட்டிருந்தது.

அவள் அழுவதை கண்டு மனம் உருகிப் போனவன்,
கண்ணம்மா, நீ ரேஷ்மிகிட்டையோ இல்ல என்கிட்டயோ கோவப்படணும்னு நினைச்சு தான், நான் ரேஷ்மி மேல கோவப்படாம இருந்தேன்...ஆனா நீ எங்க மேல கோபப்படாம, அழுது உன்னையே கஷ்டப்படுத்திகிறயே... என மனம் உருகி மனதிற்குள் வசைபாடினான்.

நகைச்சுவையில் ஆரம்பித்து அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிகழ்ந்து கடைசியில் கண்ணீருடன் முடிவுற்ற அன்றைய அத்தியாயத்தை எண்ணி மகி , ராஜேஸ்வரி மனதிற்குள் சிரித்துக் கொண்டனர்.

ராதா சமையலறைக்குச் செல்ல ,கிருஷ்ணாவும் சித்தார்த்தும் அவரவர் அறைக்கு செல்ல,
அவர்கள் அனைவரும் பிரிந்து செல்வதை கவனித்து விட்டு, மகி

" அம்மா, நீங்க அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசி பிரச்சனையை தீர்த்தா என்ன..."

" இல்ல மகி, இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை ... மூணாவது மனுஷங்க தலையிடு நல்லா இருக்காது.... கட்டப்பஞ்சாயத்து மாதிரி ஆயிடும் ... அவங்க ரெண்டு பேருக்கும் இடையே இருக்கிற பிரச்சினை என்னன்னு தெரியல ... ஆனா ஒருத்தரை ஒருத்தர் ஆழமா விரும்புறாங்க ... அதனால கூடிய சீக்கிரம் அவங்க பிரச்சினைய அவங்களே பேசி முடிச்சு சமாதானம் ஆயிடுவாங்கன்னு நம்புவோம் ..."
என ராஜேஸ்வரி நம்பிக்கையோடு பதிலளித்தார், விதி வேறு விதமாக வேலை செய்ய காத்துக்கொண்டிருப்பதை அறியாமல்.

கண்ணனை தேடி....
 
Back
Top